மகாராஷ்டிரா: நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து; 25 பேர் மரணம் - என்ன நடந்தது?

இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார்.
விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர்.
விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் கிரீஷ் மஹாஜன் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்து நடந்தது எப்படி?
விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது.
பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இருந்து மேம்பாலத்தின் பில்லரில் பேருந்து மோதியதில் அதன் டீசல் டேங்க் வெடித்து பேருந்தில் தீப்பற்றியது.
பெரும்பாலான பயணிகள் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், ஒருசிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறி உயிர் பிழைத்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பித்தேன் - பயணி
விபத்து நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகப் பேருந்து கரஞ்சாவில் உணவுக்காக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சம்ரிதி எக்ஸ்பிரஸ் பாதையில் பயணித்த பேருந்து புல்தானா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்புத்துறை வாகனத்தின் உதவியோடு தீ அணைக்கப்பட்டு, பேருந்தின் உள்ளே இருந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் உயிர் தப்பிய பயணிகளிடம் இருந்து போலீசார் சம்பவம் குறித்து அறிந்தனர். பயணி ஒருவர் கூறுகையில், “சத்ரபதி சம்பாஜிநகரில் நான் இறங்க வேண்டும். இன்னும் ஒரு மணிநேரத்தில் என் நிறுத்தம் வந்துவிடும் என்பதால் இறங்கத் தயாராகிவிட்டேன்.

அப்போது பேருந்து கவிழ்ந்து நானும் எனது நண்பரும் கீழே விழுந்தோம். இதற்கிடையில், எங்களுக்கு முன்னால் இருந்த பயணி கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறுவதைப் பார்த்தோம். எனவே அவரைப் போலவே நாங்களும் பேருந்தில் இருந்து வெளியே குதித்தோம்.
நாங்கள் வெளியே வந்ததும் மேலும் சில பயணிகளும் எங்களைப் போன்று வெளியேறினர். பேருந்து கவிழ்ந்த உடனேயே தீப்பற்றிக் கொண்டது, தீ வேகமாகப் பரவியது. பயணிகளின் அலறல் சத்தம் எங்களுக்கு கேட்டது, எனினும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,” என்றார்.
உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “புல்தானா மாவட்டத்தில் சம்ரிதி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது," என்று பதிவிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, புல்தானா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அறிவுறுத்திய முதலமைச்சர், காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவசர மருத்துவ சேவை குழுவினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர அமைச்சர் கிரீஷ் மகாஜன், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி வேதனை
இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அஜித் பவார்
இந்த பயங்கர விபத்துக்குப் பிறகு, சம்ரிதி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பிரச்னை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க நிபுணர்களின் ஆலோசனையுடன் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
"இன்று நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த பயணிகள் அரசு தரப்பில் நல்ல சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்றும் பவார் கூறியுள்ளார்.
பேருந்தின் உரிமையாளர் கூறுவது என்ன?
விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் விரேந்திர தர்னா ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்துள்ள பேட்டியில், “ இந்த பேருந்தை கடந்த 2020ஆம் ஆண்டு வாங்கினோம். பேருந்தின் ஓட்டுநர் தானிஷ் நல்ல அனுபவம் உள்ளவர். டயர் வெடித்ததும் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் பேருந்து மோதியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பேருந்தில் எளிதில் தீப் பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால் அது தீப்பற்றிக்கொண்டது. ” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












