மணிப்பூர் எப்படி இருக்கிறது? நேரில் ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டது என்ன?

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு மெய்தெய், குகி ஆகிய இரு இனங்களைச் சேர்ந்தவர்களுமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாக அங்கு சென்றுவந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது. மொத்தம் 21 எம்பிக்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். ஜூலை 29 - 30 ஆகிய தேதிகளில் இந்த எம்பிக்கள் குழு மணிப்பூரில் நிலவரத்தைக் கேட்டறிந்தது.

அறுபதாயிரம் பேர் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம்: கனிமொழி

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம், KANIMOZHI/ TWITTER

படக்குறிப்பு, அந்த மக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக சொல்கிறார் எம்.பி கனிமொழி

முதலில் இம்பாலுக்குச் சென்றிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் குகிகள் தங்கியிருந்த சுராசந்த் பூருக்குச் சென்றனர். அங்குள்ள நிலைமைகள் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய கனிமொழி, மெய்தெய், குகி ஆகிய இரு தரப்பினருமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிவித்தார்.

"கலவரம் தொடங்கிய பிறகு, அவர்கள் நிலைமையைக் கேட்டறிவதற்கு யாருமே சென்று அவர்களைப் பார்க்கவில்லை. எதிர்க்கட்சியில் காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த சிலர் மட்டுமே பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். மூன்று மாதமாக அவர்களுக்கு இணையத் தொடர்பும் கிடையாது. ஆகவே, தங்களை எல்லோருமே மறந்துவிட்டார்கள் என நினைக்கிறார்கள். அவர்களிடம் பேசும்போது இந்த உணர்வும் வருத்தமும்தான் வெளிப்பட்டது.

ஆகவே நாங்கள் உங்களோடு நிற்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்க நினைத்தோம். அதுபோக, அங்குள்ள நிலைமை என்ன, அந்த மக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.

குகி, மெய்தெய் ஆகிய இன மக்கள் மட்டுமல்லாமல் அங்கு வசிக்கும் எல்லாத் தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் பெரும அச்சம் இருக்கிறது" என்கிறார் கனிமொழி.

குகிகள் தனி மாநிலமோ, தனியான நிர்வாகமோ கேட்கிறார்கள்: திருமாவளவன்

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம், THOL THIRUMAVALAVAN/ TWITTER

படக்குறிப்பு, சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக்கூட இதுவரை இடைநீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என அங்குள்ள மக்கள் கேட்பதாக சொல்கிறார் திருமாவளவன்

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான முகாம்களில் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்த நிலையில், சுராசந்த் பூரில் ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்தது.

"இம்பாலில் சென்று இறங்கியவுடன் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உட்பட பலர் எங்களை வரவேற்றார்கள். அவர்கள் மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவர்களுடைய இனத்தின் பாணியில் நெய்யப்பட்ட சால்வையை அணிவித்தார்கள். ஆனால், நாங்கள் சுராசந்த் பூரில் இறங்கியவுடன் அந்த சால்வைகளை அகற்றச்சொல்லிவிட்டார்கள். அந்த அளவுக்கு இரு தரப்பிற்கும் இடையில் வெறுப்பு வேரோடிப் போயிருக்கிறது. பிறகு அந்த மக்களைச் சென்று சந்தித்தோம்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் தாயாரை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்த்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண் எம்பிக்கள் மட்டும் சென்று சந்தித்தார்கள்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் படிப்பவர்கள் இனி இம்பாலில் படிக்க முடியாது. படிப்பைத் தொடர உதவ வேண்டும் என்று கேட்டார்கள். குகிகளைப் பொறுத்தவரை இனிமேல் மெய்தெய்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தனி மாநிலமோ, தனியான நிர்வாகமோ கேட்கிறார்கள்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

வீடியோவில் இடம்பெற்ற பெண்ணின் தரப்பினர் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகக் கூறுகிறார் கனிமொழி.

"அவர்களது மன நிலை மிக மோசமாக இருந்தது. தங்களைக் காப்பாற்ற வேண்டும் என காவல்துறையிடம் கேட்டால், அவர்களே அந்த வன்முறைக் கும்பலிடம் பிடித்துக் கொடுத்ததை அவர்களால் இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் தாண்டி இந்த விவகாரத்தை மிக துணிச்சலோடுதான் எதிர்கொள்ள வேண்டுமென அந்த மக்கள் கருதுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக்கூட இதுவரை இடைநீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என கேட்கிறார்கள்" என்கிறார் அவர்.

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது.

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது.

என்ஆர்சியை செயல்படுத்தக் கோரிய மெய்தெய் மக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு மெய்தெய், குகி ஆகிய இருதரப்பையும் சந்தித்திருக்கிறது. ஆனால், இருதரப்பினரிடமும் இருந்த பரஸ்பர நம்பிக்கை மோசமடைந்திருக்கிறது என்கிறார் கனிமொழி. மேலும், அவர்கள் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லையென்றும் அமைதியையே எதிர்பார்ப்பதாகவும் அவர் சொல்கிறார்.

"அவர்களிடம் சொல்வதற்கு தீர்வு ஏதும் கிடையாது. ஒரு அமைதியான சூழலை உருவாக்கி, எல்லோரையும் அழைத்துப் பேசி, ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். யாரும் அவர்கள் முன்பு வாழந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லத் தயாராக இல்லை. வீடே எரிந்துவிட்ட நிலையில், இனிமேல் அங்கு சென்று எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியுமென நினைக்கிறார்கள்.

இரு தரப்பினரிடையேயும் காயங்கள் ஆறாமல் இருக்கிறது. ஒருவர் மீது ஒருவருக்குக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் மீதே நம்பிக்கை இல்லாத சூழலில், தங்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்று கருதக்கூடிய மக்கள் மீது எப்படி நம்பிக்கை இருக்கும்?

காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்கள் எடுக்கும் அளவுக்கு சூழல் இருக்கிறது. அரசாங்கம் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்ற உணர்வு இருக்கிறது. இதெல்லாம் மாற வேண்டுமானால், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது மேற்கொண்டிருக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கு முதல்வரை தலைவராக நியமித்திருக்கிறார்கள். எந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இல்லை. பல இடங்களில் போராட்டங்களில் அமர்ந்திருப்பவர்கள் "முதல்வரைக் காணவில்லை", "அமைச்சர்களைக் காணவில்லை" என எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்தபடிதான் அமர்ந்திருக்கிறார்கள்.

சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது.

"அங்கு ஆங்கிலத்தில் ஒரு பெண் சிறப்பாகப் பேசினார். எங்களைத்தான் முதலில் சந்தித்திருக்க வேண்டும் என்றார் அவர். மேலும் குகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குகிகள் மியான்மரிலிருந்து வந்தவர்கள்; கசகசா செடியை வளர்க்கிறார்கள் என்றார்கள். குகி தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார். என்ஆர்சியை செயல்படுத்த வேண்டும் என்றார். எல்லோரும் குகி இன பெண்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதுவதாகவும் தங்கள் இனப் பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார் அவர்" என்கிறார் திருமாவளவன்.

இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கையின்மை வேறோடிப் போயிருக்கிறது: திருமாவளவன்

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம், THIRUMAVALAVAN/TWITTER

படக்குறிப்பு, தன்னைப் பொறுத்தவரை, இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது என்கிறார் திருமாவளவன்

குகி இனத்தினருக்கு மட்டுமல்ல, மெய்தெய் இனத்தினருக்குமே மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் நம்பிக்கை இல்லை. அவர்களும் கைவிடப்பட்டதாகத்தான் நினைக்கிறார்கள். மெய்தெய் தரப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்ததில் ஆரம்பித்த பிரச்சனை, அதையெல்லாம் தாண்டி எங்க சென்றுவிட்டது. எந்தத் தரப்பிற்கும் ஆதரவாக இல்லாமல், அரசு பேச்சு வார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் கருதுகிறார்கள்" என்கிறார் கனிமொழி.

தன்னைப் பொறுத்தவரை, இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது என்கிறார் திருமாவளவன். "ஒரே மாநிலத்தில் உள்ள இரு இடங்களுக்குத்தான் சென்றோம். ஆனால், இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது. அந்த அளவுக்கு இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கையின்மை வேறோடிப் போயிருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் இருக்கிறது" என்கிறார் அவர்.

மக்களைச் சந்தித்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆளுநர் அனுசூயா உய்கியைச் சந்தித்தி, தாங்கள் கண்டறிந்தவை குறித்துத் தெரிவித்திருக்கிறது. ஆளுநரும் மிகவும் கவலையடைந்தவராக காணப்பட்டதாகவும் இங்குள்ள இனக்குழுக்களின் தலைவர்களிடம் அரசு பேசினால்தான் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்ததாகவும் சொல்கிறார் கனிமொழி.

சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மணிப்பூர் வழக்கு

இதற்கிடையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பின்வரும் தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, மணிப்பூர் வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிடும்படியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஆறு மாதங்களுக்கு வழக்கை முடிக்க உத்தரவிடும்படியும் உச்ச நீதிமன்றத்தைக் கோரியிருக்கிறது.

பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக நடத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பாதுகாப்பு வழங்குவது கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்றவற்றைச் செய்வதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய ஆயுதக் காவல் படையில் 124 கூடுதல் கம்பனிகள், ராணுவத்தினர் ஆகியோர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மூத்த பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்புப் படைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் முதல் இனக் கலவரங்கள் நடந்துவருகின்றன. குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000 பேர் தாங்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: