சிபிஐ அதிகாரி போல வந்து நகைக்கடையில் ரூ.14 கோடி நகைகள் கொள்ளை

சினிமா பாணியில் நகைக்கடை கொள்ளை
படக்குறிப்பு, கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை
    • எழுதியவர், சர்பராஸ் சனதி
    • பதவி, பிபிசி மராத்திக்காக

அது ஒரு பிஸியான நகைக்கடை.

பகல் நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் சட்டென நகைக்கடைக்குள் ஒரு கும்பல் நுழைந்தது.

ஏழெட்டு நபர்களாக வந்திருந்த அந்த குழுவினர், தங்களை சிபிஐ அதிகாரிகள் என கூறிக்கொண்டு சில சோதனைகளை மேற்கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தனர்.

அந்த நகைக்கடையிலிருந்த 14 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போன விவரம் குறித்து அவர்கள் கடையிலிருந்து திரும்பிச் சென்ற பிறகுதான் ஊழியர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதைப் படிக்கும் போது தமிழில் வெளிவந்த சில படங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் இதுபோல சிபிஐ அதிகாரி எனக்கூறி கொள்ளையடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சினிமா பாணியில் சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி போலியாக ரெய்டு நடத்தி திருடும் கும்பல் ஒன்று அண்மையில் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டது.

மகாராஷ்ட்ரா மாநிலம் சாங்லி என்ற ஊரிலுள்ள இந்த நகைக்கடையில் இருந்துதான் சினிமா பாணியில் 14 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி என்ற ஊரின் முக்கிய தெருவில் அமைந்துள்ளது ரிலையன்ஸ் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4ஆம் தேதி) மதியம் 3 மணியளவில் அந்தக் கடையில் வழக்கமான வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது அந்த கடையினுள் திடீரென முகத்தில் மாஸ்க் அணிந்த ஏழெட்டு நபர்கள் உள்ளே நுழைந்தது. கடையில் இருந்த ஊழியர்களிடம் தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகை அந்த கடையில் இருப்பதாக கூறி அதை சோதனையிட வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தவர்கள் கூறினர்.

கடையினுள் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை சிபிஐ அதிகாரி என கூறிய குழுவைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

சினிமா பாணியில் நகைக்கடை கொள்ளை

துப்பாக்கி முனையில் கடையிலிருந்த அனைவரையும் தரையில் அமருமாறு மிரட்டியுள்ளனர்.

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாயை டேப்பால் ஒட்டி, அவர்களின் கைகளையும் கட்டியுள்ளனர் அந்த கொள்ளையர்கள்.

அதன்பிறகு கடையிலிருந்த விலை உயர்ந்த நகைகள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட பொருட்களை ஒரு பெரிய பையில் கொள்ளையர்கள் நிரப்பியுள்ளனர்.

ஓரமாக அமர வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் ஒருவர் தப்பிக்க முயற்சி செய்யும் போது, கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்தார்.

துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததில், ஒரு வாடிக்கையாளருக்கு காயம் ஏற்பட்டது.

கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிக்க முயற்சி செய்யும்போது, கொள்ளையடிக்க வந்த நபர்களில் ஒருவர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகியிருந்த DVR-ஐயும் சேர்த்து தூக்கிச் சென்றார்.

போலீசாரிடமிருந்த தப்பிக்க சிசிடிவி காட்சிகளை தூக்கிக்கொண்டு அவசரமாக தப்பிச் செல்ல முயற்சி செய்த போது அந்த DVR மெஷின் கீழே விழுந்தது.

கடையிலிருந்து தப்பிச் செல்லும் பதற்றத்தில் அதை எடுக்காமல் கொள்ளையர்கள் புறப்பட்டு சென்றனர்.

கொள்ளையர்கள் விட்டுச்சென்ற அந்த DVR மெஷினில் கொள்ளைச் சம்பவம் முழுவதும் பதிவாகியிருந்தது.

சிசிடிவில் என்ன இருந்தது?

சினிமா பாணியில் நகைக்கடை கொள்ளை

பின்னர் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட அந்த DVR மெஷின் உதவியுடன் கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் மீட்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறை, விசாரணையை உடனே தொடங்கியது.

முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு 14 கோடி என்று கண்டறியப்பட்டது.

"கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பேசிய சங்லி பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் பசவராஜ், போலீஸ் விசாரணையின் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரின் அடையாளம் தெரியவந்திருக்கிறது. காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் ஒன்று சேர்ந்து கொள்ளையடித்த நபர்களை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். தனிப்படை அமைக்கப்பட்டு, சில குழுக்கள் பக்கத்து மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

கொள்ளையர்கள் தவறுதலாக விட்டுச் சென்ற DVR மெஷின் மூலமாக சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை நடத்தி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தானர்.

மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக, அவர்கள் கடைக்குள் எப்படி நுழைந்தனர், எப்படி தங்களை சிபிஐ அதிகாரிகள் போல காட்டிக் கொண்டனர் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளையை அரங்கேற்றி விட்டு ஒரு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்தி தப்பிச் சென்றதும் சிசிடிவி உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் ஒரு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.

திருடிய பிறகு துணியை மாற்றி, வேறு காரில் தப்பித்தனர்

சினிமா பாணியில் நகைக்கடை கொள்ளை

காவல்துறையினரின் விசாரணையில் கொள்ளையர்கள் தப்பிக்க பயன்படுத்திய கார், வேறொரு இடத்தில் வயல்வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த காரிலிருந்து கொள்ளைச் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கொள்ளையர்கள் அணிந்திருந்த துணிகள் மீட்கப்பட்டன.

அதே பகுதியில் மற்றொரு கொள்ளையன் தப்பிச் சென்ற பைக்கையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

கொள்ளையடித்த பிறகு, துணிகளை மாற்றிக்கொண்டு வேறொரு வாகனத்தை பயன்படுத்தி தப்பிச் சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளை நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த நகைக்கடைக்கு கொள்ளையர்கள் வந்து உளவு பார்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைக்கடையில் நகை வாங்க வந்ததுபோல வந்திருந்த கொள்ளையர்கள் கடையில் எங்கு சிசிடிவி உள்ளது, எத்தனை ஊழியர்கள் வேலை செய்கின்றனர், எத்தனை பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர் என பல்வேறு தகவல்களை அப்போது திரட்டிச் சென்று இருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்டு, வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 14 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்து சென்ற நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: