மெட்ரோ ரயிலில் முத்தமிட்ட சம்பவம்: பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவது அருவருக்கத்தக்க செயலா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, கொல்கத்தா
நவீன இந்தியாவின் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பளபளப்பான, குளிரூட்டப்பட்ட அந்த ரயிலில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவமாகவே கருதப்படுகிறது. தற்போது அன்பு, பாசம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவும் மெட்ரோ ரயில் மாறி வருகிறது.
டெல்லி மெட்ரோ ரயிலில் கடந்த வாரம் இளம் ஜோடியினர் முத்தமிட்டுக்கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்தக் காணொளியில், ஓர் இளம் பெண், தனது ஆண் நண்பரின் மடியில் படுத்துக் கொண்டிருந்தபோது, இருவரும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டது, டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து கழகத்தின்(DMRC) கவனத்திற்குச் சென்றது. அப்போது, இது போன்று "ஆட்சேபிக்கக்கூடிய செயல்களில்" யாராவது ஈடுபட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு அது சர்ச்சைக்குரிய செயலாக மாறியது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, "பறக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும்" DMRC அறிவித்தது.
அந்த வீடியோவும், அதற்கு எதிராக சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களும் பொது இடங்களில் தவறாக நடந்து கொள்பவர்கள் மற்றும் எந்தவித சட்ட அங்கீகாரமும் இல்லாமல் அவர்களைத் தண்டிக்க நினைப்பவர்கள் குறித்த சூடான விவாதங்களுக்கு வித்திட்டன.
அன்பின் வெளிப்பாடா? ஆபாசமா?
ஆனால், "ஆட்சேபிக்கக்கூடிய செயல்கள்" என்ற பதத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயன்படுத்தியது ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்குப் பிறகு, சாதாரணமான செயல்கள் குறித்தும் புகார்கள் வருகின்றன. ஒரு பெண், தன்னுடன் பயணம் செய்யும் ஆணின் தோள்களில் தலையை சாய்த்துக்கொண்டிருந்தால்கூட அது பற்றி புகார்கள் வருகின்றன.
அதேநேரம், பொது இடங்களில் கண்டிப்பாகச் செய்யக்கூடாத செயல்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சான்றாக மெட்ரோ ரயிலில் ஆண் ஒருவர் சுய இன்பம் அனுபவித்தபோது, டெல்லி மகளிர் ஆணையம் கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.
பொது இடங்களில் சுய இன்பம் அனுபவிப்பது தவறானது என்று பெரும்பாலான பொதுமக்கள் கருதினாலும், எந்த மாதிரியான நடவடிக்கைகளை பொது இடங்களில் அனுமதிக்கலாம் என்பதை நிர்ணயிப்பதிலும் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு பயணத்தின்போது இளம் ஜோடி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தற்காக, சக பயணிகள் அவர்களைத் தாக்கும் சம்பவம் நடந்தது. சக பயணிகளின் இந்தச் செயலைக் கண்டித்தும் ஏராளமான சமூக ஊடக பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
2019இல், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓர் இளம் ஜோடி மோசமான நிலையில் படுத்திருந்தது, அந்த இடத்தை ஆபாச இடமாக மாற்றியது.

பட மூலாதாரம், Getty Images
உடலுறவு குறித்து காமசூத்ரா மூலம் உலகிற்கே பாடம் சொல்லிக் கொடுத்த ஒரு நாட்டில் பொது இடங்களில் இதுபோல் அன்பை வெளிப்படுத்தும் செயல்கள் தவறானவை என காலம் காலமாக நம்பப்பட்டு வருகின்றன, சர்ச்சைகளுக்கும் வித்திட்டு வருகின்றன.
1981ஆம் ஆண்டு பிரிட்டன் இளவரசராக இருந்த சார்ல்ஸ் இந்தியாவில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அங்கிருந்த நடிகை பத்மினி கோலாப்பூர் இளவரசரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்ற சம்பவம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, அதுவொரு பெரிய விஷயமே அல்ல என நடிகை பத்மினி கோலாப்பூர் தெரிவித்தார்.
ஷில்பா ஷெட்டி மீது பதிவான வழக்கு
2007இல் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் ஹாலிவுட் திரை நட்சத்திரமான ரிச்சர்ட் கியார், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் முத்தமிட்டபோது, அவர் ஓர் இந்திய பெண்ணை அவமதித்துவிட்டதாகப் புகார் எழுந்தது.
எய்ட்ஸ் நோயாளிகள் முத்தமிடுவதால் ஆபத்து இல்லை என்ற செய்தியை அளிப்பதற்காகவே ஷெட்டியின் கன்னத்தில் முத்தமிட்டதாக கியார் குறிப்பிட்ட போதிலும், பொது இடத்தில் 'குற்றச்' செயலில் ஈடுபட்டதாக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து 2022ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டபோது, கியார் தான் குற்றம் செய்தார் என்றும், அந்தக் குற்றத்தில் பாதிக்கப்பட்டவராக ஷெட்டி இருந்தார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையில் முத்தக் காட்சிகளும் ஆண் - பெண் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெறுவதைக் காண முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் மக்கள்தொகை மிக அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான இளைஞர்களும் இளம்பெண்களும் பெற்றோர்களுடனேயே வசிப்பதால், அவர்களுக்குள் தனிமை என்பதே மிக அரிதான விஷயமாக இருக்கிறது.
பூங்காக்கள், புல்வெளிகள் மட்டுமல்லாமல் பழங்கால நினைவுச் சின்னங்களின் அருகேயும் கூட இளம் ஜோடியினர் தனிமையைத் தேடுகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசி விக்டோரியாவின் நினைவு மாளிகை எப்போதும் இதுபோன்ற இளம் ஜோடிகளின் விரும்பத்தக்க இடமாக இருந்து வருகிறது.
மாலை மயங்கி இருள் பரவும்போது, இப்பகுதியின் மறைவான இடங்களில் இருக்கும் இளம் ஜோடியினரை கலைந்து போகச் செய்ய காவலர்கள் விசில் அடித்துக்கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
காதல் ஜோடிகளின் நிலைமை?
தனிமையில் இருப்பதற்காகச் செல்லும் இளம் ஜோடியினருக்கு தங்கும் விடுதிகள்கூட இடம்தர மறுக்கின்றன. பெரும்பாலான விடுதிகளில் இளம் ஜோயினர் தங்குவதற்குச் சென்றால், அவர்களுக்கு திருமணமானது குறித்த சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன.
அதுபோல் நிரூபணம் இல்லாமல் செல்லும் ஜோடியினருக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைப்பதில்லை.
மாறாக, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. மேற்கத்திய நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் இரண்டு ஆண்கள் ஒன்றாக இணைந்து, கை கோர்த்துக்கொண்டு செல்லும்போது அது பிறரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.
இந்தியாவில், பொது இடங்களில் இருபாலின இளம் ஜோடியினர் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொண்டு இருந்தாலகூட அது பிறரின் கவனத்தை ஈர்க்கும் செயலாகவே இருக்கிறது.
பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294இன் படி தண்டனை விதிக்க முடியும்.
ஆனால், எது ஆபாசம், எது அருவருக்கத்தக்க செயல் என்பதைப் புரிந்துகொள்வதிலும், அந்தப் புரிதலை வழக்கப்படுத்துவதிலும்தான் பிரச்னை இருக்கிறது.
சாதத் ஹசன் என்ற மாபெரும் உருது எழுத்தாளர் அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதும், சுதந்திரம் பெற்ற பின்னரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர் மிலிண்ட் சோமன், தமது 55வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 2017ஆம் ஆண்டு கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்ட பின்னர் இந்திய தண்டனைச் சட்டம் 294இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு சர்வதேச திரைப்படத்தில்கூட கொல்கத்தாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதுபோன்ற வினோத உறவுகளைக் கொண்ட நபர்களைப் பற்றிய கதையும், பொது இடத்தில் ஆபாசம் குறித்த விவாதமும் இடம்பெற்றிருந்தன.

இப்படத்தின் பெயர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சட்டப்பிரிவில் சிற்றின்பம், தடுக்கப்பட்ட செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே இப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டதாக இப்படத்தின் திரைக்கதையை எழுதிய ஷயோக் மிஷா சௌத்ரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பொதுமக்கள் இதுபோன்ற சட்டங்களின் காரணமாக பொது இடங்களில் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற சட்டங்களே காதலர் தினம் போன்ற நாட்களில் இளம் காதலர்களை எதிர்க்கும் மனநிலையை ஒரு சிலருக்கு ஏற்படுத்தும் நிலையில் சென்னை ஐஐடியில் இதுபோல் காதலர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், பொதுவெளியில் முத்தமிடுவது இந்த சட்டத்தின்படி தவறானது அல்ல என்று ஏராளமான நீதிமன்ற தீர்ப்புக்கள் கூறுகின்றன.
2008ஆம் ஆண்டு இதேபோல் குற்றமிழைத்ததாக வழக்கில் சிக்கிய ஒரு ஜோடிக்காக வாதிட்ட வழக்கறிஞர், பொதுமக்களுக்கு சீரழிவை ஏற்படுத்தினால் அல்லது பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்டால் மட்டுமே அது சட்டப்படி தவறானது என வாதிட்டார்.
ஆனால், இதுபோன்ற விஷயங்களில் சட்டப்படியான எல்லைகளை வகுப்பது ஒரு குழப்பமான செயல் என்பதே உண்மை.
"சட்டத்தை சமூகங்களே உருவாக்குகின்றன. ஆனால் இந்த சட்டங்களை திருத்துவதில் அந்த சட்டத்தை பிரதிபலிக்கும் மக்களே இருப்பது ஒரு பிரச்னையாக உள்ளது," என, உச்ச நீதிமன்றமும் பாலியல் செயல்பாடுகளும் என்ற தொகுப்பை எழுதிய சௌரப் கிர்பால் என்ற வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.
இது மீண்டும் நம்மை டெல்லி மெட்ரோவுக்கு அழைத்துச் செல்கிறது. ஒரு நபருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல் மற்றவருக்கு அருவருப்பான செயலாகத் தோன்றியிருக்கிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












