இந்தியாவின் கொள்கைகளை விமர்சிக்கும் வங்கதேச ஊடகங்கள் - இந்துக்கள் பற்றி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தடைந்து 20 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.
இதனுடன் சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் வங்கதேசத்தின் தற்போதைய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படாது என்று உறுதியளித்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றிய உரையில், "புதிய வங்கதேசம்" பற்றிப் பேசினார். "வெவ்வேறு மதம் அல்லது வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் யாரிடமும் நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் ஒரே குடும்பமாக ஆக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் இந்தியாவின் பங்கு குறித்து வங்கதேச ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் தற்போதைய அரசு மத்தியில் விவாதங்கள் நடந்து வருகிறது.
அங்குள்ள ஊடகங்களில் இந்தியாவின் பங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதே நேரம் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி கோருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
’டாக்கா ட்ரிப்யூன்’ என்பது வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில செய்தித்தாள் ஆகும்.
டாக்கா ட்ரிப்யூனின் ஆசிரியர் ஜஃபர் சோபன் ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு செய்திக் கட்டுரையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து இல்லை என்றும், இந்தியாவை ஒப்பிடும்போது இங்குள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராகவும், இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜஃபர் சோபன் குறிப்பிடுகிறார்.
“ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து விலக காரணமான போராட்டம் 'இஸ்லாமியப் புரட்சி’ போன்றதல்ல. இந்த போராட்டத்தை வழிநடத்தும் மாணவர்கள் மன உறுதியும் நாட்டுப்பற்றும் கொண்டவர்கள். அவர்கள் நடுநிலையான மற்றும் சுதந்திரமான வங்கதேசத்தை விரும்புகின்றனர்,” என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.
"வங்கதேசத்தில் ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றங்களில் கூட அரசியல் கைதிகள் தாக்கப்படுகிறார்கள்," என்று இந்தியாவை சேர்ந்த பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி சமூக ஊடகமான எக்ஸில் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிட்டுள்ளார்.
''சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் 75 வயதான மூத்த நீதிபதி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மோசமாக தாக்கப்பட்டார். அவரது பிறப்பு உறுப்புகளில் காயமேற்பட்டது. இதனால் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசின் தலைவரான பேராசிரியர் யூனுஸின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஜெனரலை நியமித்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி," வங்கதேச அரசியலில் ராணுவம்தான் முடிவுகளை மேற்கொள்வது போல இருக்குறது என்பதற்கு இது அறிகுறியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு யூனுஸின் மற்றொரு ஆலோசகரான பிரிகேடியர் ஜெனரல் சகாவத் ஹுசைன், அரசியலில் வலுக்கட்டாயமாக பண வசூலுலில் ஈடுபடுபவர்களிடம், ’உங்கள் கால்களை உடைக்குமாறு ராணுவத்திடம் முறையிட்டுள்ளேன்’ என்று கூறி எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவாமி லீக் மீது கோபம்
ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியான அவாமி லீக் மீதும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை ஷேக் ஹசீனாவின் ராஜ்ஜிய கடவுச்சீட்டை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக ஹசீனா இந்தியாவில் எவ்வளவு காலம் தங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வங்கதேசத்தின் மற்றொரு முன்னணி ஆங்கில செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார், ’இந்திய விசா கொள்கையின்படி, ராஜ்ஜிய அல்லது அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டை வைத்திருக்கும் வங்கதேச குடிமக்களுள் ஒருவர், 45 நாட்கள் வரை இந்தியாவில் தங்கலாம். ஹசீனா 18 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
அவர் மீது வங்கதேசத்தில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றுள் 51 கொலை தொடர்பான வழக்குகள் ஆகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளும் இதில் அடங்கும்.
இவரை தவிர அவாமி லீக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் உபைதுல் காதர், அசாதுஸ்மான் கான் கமால், அனிசுல் ஹக், ஜஹாங்கீர் கபீர் நானக் மற்றும் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் செளத்ரி அப்துல்லா அல் மாமூன் ஆகியோரும் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் கொள்கை மீதான விமர்சனம்
இதற்கிடையில் இந்தியாவின் கொள்கைகள் குறித்தும் வங்கதேசத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவர் அமீர் கஸ்ரு மஹ்மூத் செளத்ரி ஆங்கில செய்தித்தாளான ’தி இந்து’ வுக்கு அளித்த பேட்டியில், 'வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
''வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் அதிகாரபூர்வ கொள்கை ’முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது. ஏனெனில் அது உயர்மட்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற தூதரக அதிகாரிகள், சிந்தனை குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய 'அமைப்பு முறையால்' கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் அரசியல் களத்தின் உண்மை நிலையை கவனிக்காமல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
பிஎன்பி தலைவரும், முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இடைக்கால அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களில் ஒன்றாக அக்கட்சி உள்ளது. காலிதா ஜியாவை இந்தியாவுக்கு எதிரானவர் என்று பலர் சித்தரித்து வருகின்றனர்.
வங்கதேச மக்களின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்று அமீர் கஸ்ரு வலியுறுத்தினார்.
"2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தேர்வான அவாமி லீக் அரசுக்கு இந்தியா மீண்டும் மீண்டும் அங்கீகாரம் அளித்தது. கூடவே இந்த மூன்று தேர்தல்களிலும் இந்தியா முக்கிய பங்கு வகித்தது" என்றும் அவர் கூறினார்.
டாக்கா ட்ரிப்யூன் ஆசிரியர் ஜஃபர் சோபனும் இது போன்ற கருத்தையே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவர் எழுதிய செய்திக் கட்டுரையில், "2008 ஆம் ஆண்டு அமோக வெற்றி பெற்று கடந்த பத்தாண்டுகளில் நாட்டை சிறந்த வளர்ச்சி விகிதத்திற்கு கொண்டு சென்ற ஷேக் ஹசீனாவுக்கு மக்களிடையே செல்வாக்கு தொடர்ந்து குறைந்து வந்தது,” என்று எழுதியுள்ளார்.
"அவரின் செல்வாக்கைக்காட்டிலும் அவாமி லீக் கட்சியின் செல்வாக்கு குறைவாக உள்ளது. அவரது அரசின் சர்வாதிகார ஆட்சி, ஊழல் மற்றும் குற்றங்களில் தொடர்பு ஆகியவற்றுக்கு எதிரான கோபம் பல ஆண்டுகளாக புகைந்து வருகின்றது ," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த தசாப்தத்தில் அதிகரித்து வந்த அவாமி லீக்கின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் அனுபவித்த கஷ்டங்களில் இந்தியாவுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. இந்தியா ஹசீனா அரசை ஆதரித்தது மற்றும் சர்வதேச மட்டத்திலும் அதற்காக வாதிட்டது என்று அனைவருக்கும் தெரியும். இந்தியா முறைகேடான தேர்தல்களை அங்கீகரித்து ஒவ்வொரு கட்டத்திலும் அதை பாதுகாத்தது,” என்கிறார் ஜஃபர் சோபன்.
"ஹசீனா அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட பிறகும் இந்தியா அவரை ஆதரிப்பதாகத் தெரிகிறது. மேலும் வங்கதேசம் தொடர்பான தன் கொள்கையின் தோல்வியை இந்தியா இன்னும் உணரவில்லை," என்று அவர் கூறினார்.
"தவறான நபரை ஆதரித்து பரிதாபமாக தோல்வியடைந்ததை இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வங்கதேசத்துடன் உறவுகளை மேம்படுத்த வேண்டுமானால் இந்தியா, வங்கதேச இடைக்கால அரசு மற்றும் மக்களுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று சோபன் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரிக்கை
மறுபுறம் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் வங்கதேசத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்ட எல்லா "ரகசிய மற்றும் சமத்துவமற்ற" ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று, பிஎன்பி கட்சியின் மூத்த இணைப் பொதுச் செயலர் ருஹுல் கபீர் ரிஸ்வி ஞாயிற்றுக்கிழமை அன்று கூறினார்.
”வங்கதேசத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு விளைவித்து, இந்தியாவுடன் ஷேக் ஹசீனா கையெழுத்திட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்யுமாறு இடைக்கால அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் சொன்னார்.
வங்கதேச மக்களின் இறையாண்மை மற்றும் உணர்வுகளை இந்தியா புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய ரூஹுல் கபீர் ரிஸ்வி, "இந்தியா ஷேக் ஹசீனாவை மட்டுமே ஆதரித்தது. வங்கதேசத்தையும் அதன் மக்களையும் அல்ல" என்று கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்க வங்கதேசம் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாகவும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு
சிந்தனைக்குழுவான ’தி வில்சன் சென்டரின்’ தெற்காசிய நிறுவன இயக்குனர் மைக்கேல் குகல்மேன், ’ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது இந்தியாவுக்கு தூதரக ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று எழுதியுள்ளார்.
"ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இது இந்தியாவுக்கு தூதரக ரீதியிலான குழப்பமாகும். ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நெருக்கமான நண்பர். ஆனால் ஹசீனா இந்தியாவில் நீண்ட காலம் தங்கினால் வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசுடனான இந்தியாவின் உறவு பாதிக்கப்படும். குறிப்பாக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்புமாறு அந்நாடு இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கைவிடுக்கும்போது, குழப்பம் மேலும் அதிகரிக்க கூடும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினர் மேற்கத்திய நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால் அங்கு செல்வது எளிதல்ல. ஹசீனா வளைகுடா நாடுகளுக்கு (ஐக்கிய அரபு அமீரகம், கத்தார்) சென்று வசிப்பது நல்லது. பெலாரூஸும் ஒரு தேர்வாக இருக்கலாம். ஷேக் ஹசீனாவை விரைவில் வேறு இடத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்தியா மேற்கொண்டால் அது இந்தியாவின் தூதரக நலன் சார்ந்ததாக இருக்கும்,” என்று குகல்மேன் எழுதியுள்ளார்.
ஆனால் குகல்மேனின் பதிவுக்கு பதிலளித்த பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா, "வங்கதேசத்தில் ஜமாத் எந்த அரசாங்கத்திலும் இருக்கும் வரை இந்தியா எந்த முயற்சி செய்ய தயாராக இருந்தாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறியுள்ளார்.
"ஷேக் ஹசீனா காப்பாற்றப்பட வேண்டும். ஹசீனா வங்கதேசத்தை ஒரே கட்சி கொண்ட நாடாக மாற்றியிருக்கலாம், ஆனால் அவர் இந்தியாவின் நண்பராக இருந்தார்."
வங்கதேசம் தொடர்பாக இந்தியாவில் விவாதம்

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் அரசியல் சூழல் மற்றும் அங்கு நடக்கும் வன்முறைகள் குறித்து இந்தியாவிலும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது கட்டுரையில் இந்த வன்முறை குறித்து கவலை தெரிவித்தார். அதன் பிறகு வங்கதேசத்தில் இருந்து இதற்கு எதிர்வினை வந்தது. இந்திய ஊடகங்களின் கருத்துகளுக்கு அவர் இரையாகிவிட்டார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சஷி தரூர், "வன்முறையின் தன்மை மற்றும் அதன் பரவல் குறித்து நான் இந்திய ஊடகங்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் கூறினர். ஆனால் வங்கதேசத்தின் ஊடகங்களிலும் இதுபோன்ற செய்திகள் இடம்பெற்று உள்ளன." என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
சில தீவிர வன்முறை தொடர்பான செய்திகளின் இணைப்புகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
பிரம்மா செல்லானி ’தி ஹில்’ செய்தியேட்டில் ’வங்கதேசத்தில் அமைதியான ராணுவ புரட்சி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
"உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் உண்மையில் பொது மக்கள் போர்வையில் நடந்த ராணுவ புரட்சி" என்று செல்லானி குறிப்பிட்டுள்ளார்.
"முகமது யூனுஸை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக ஆக்குவது ராணுவ ஆட்சிக்கு திரை போட்டு மறைப்பது போன்றது" என்று செல்லானி எழுதினார்.
84 வயதான யூனுஸ், பில் கிளிண்டன் மற்றும் ஹிலரி கிளிண்டன் ஆகியோரின் நீண்டகால நண்பர். கிராமப்புற குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க சிறு கடன்களை வழங்கும் செயல்முறைக்காக 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசை அவர் பெற்றார்.
"ஒருபுறம், இடைக்கால அரசின் கால வரம்பு மற்றும் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. மறுபுறம் அதன் ஆலோசகர்கள் ராணுவத்தின் உயர்மட்ட தலைவர்களின் குறிப்பாக ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமானின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறார்கள். ஜெனரல் வாக்கர்தான் இதன் பின்னணி சக்தியாக இருப்பவர்,” என்று செல்லானி எழுதியுள்ளார்.
"இந்த ஆலோசகர்களுள் போராட்டங்களை வழிநடத்திய இரண்டு மாணவர்கள், ஒரு இஸ்லாமிய குழுத் தலைவர் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல்கள் உள்ளனர். அந்த இரண்டு ராணுவ ஜெனரல்களுள் ஒருவரிடம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு உள்ளது,” என்று செல்லானி குறிப்பிட்டுள்ளார்.
செல்லானிக்கு டாக்கா ட்ரிப்யூன் ஆசிரியர் பதில்

பட மூலாதாரம், Getty Images
ஆனால் பிரம்மா செல்லானியின் இந்த வாதத்தை டாக்கா ட்ரிப்யூன் ஆசிரியர் ஜஃபர் சோபன் மறுத்துள்ளார். அவர் தனது செய்தித்தாளில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார், அதன் தலைப்பு – ’உண்மையா அல்லது செல்லானியா?’
நாட்டின் குடிமக்கள் ஆட்சியில் ராணுவத்தின் ஈடுபாடு உள்ளது என்று கூறுவது "முற்றிலும் தவறானது" என்று விவரிக்கும் டாக்கா ட்ரிப்யூன் கட்டுரை, "ராணுவ தளபதியும், அதன் உயர் அதிகாரிகளும் முடிந்தவரை ஷேக் ஹசீனாவை பாதுகாக்க முயன்றனர். ஜூலை 20 ஆம் தேதி வங்கதேச ராணுவத் தலைமையகத்தில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் போராட்டக்காரர்களை "நேரடியாக சுட" ராணுவத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்,” என்று கூறுகிறது.
"ஜூலை 21 ஆம் தேதி ராணுவத்தின் 9வது பிரிவு, நாரங்கஞ்சில் போராட்டக்காரர்கள் மீது ஆயிரக்கணக்கான முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் பலர் காயமடைந்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.”
"போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக்கூறும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் உள்ளன."
"மேலும், அதி விரைவுப்படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், ஐ.நா. சின்னம் கொண்ட ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி, எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் தீவிரமாக பங்கேற்றனர்," என்று அக்கட்டுரை குறிப்பிடுகிறது.
வங்கதேச மாணவர்களின் போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது என்று இந்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன, ஆனால் இது மக்கள் இயக்கம் என்று வங்கதேச மக்கள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












