இந்தியாவில் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன? தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

151 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களை துன்புறுத்திய வழக்கு : அதிர்ச்சி தரும் ஏடிஆர் அறிக்கை

பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images

    • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்தி

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மகாராஷ்டிராவின் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சூழலில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர் : Association for Democratic Reforms) புதன்கிழமை (ஆகஸ்ட் 21 ) வெளியிட்ட அறிக்கையின்படி, 151 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்புணர்வு செய்ததாக எத்தனை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. இது தவிர, எந்தெந்த கட்சியை சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் இந்த பட்டியலில் உள்ளனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த அறிக்கைக்காக, நாட்டில் உள்ள 4,809 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களில் 4,693 பேர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்துள்ளன.

இந்த பிரமாணப் பத்திரங்கள் மூலம், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். இதில் 776 எம்.பி.க்களில் 755 பேரின் பிரமாணப் பத்திரங்களும், 4,033 எம்.எல்.ஏக்களில் 3,938 பேரின் பிரமாணப் பத்திரங்களும் அடங்கும்.

2019 முதல் 2024 வரை நடைபெற்ற இடைத்தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் இருந்து ஏடிஆர் மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் அமைப்புகள் இந்தத் தகவல்களைச் சேகரித்துள்ளன.

எந்தெந்த வழக்குகள் குறித்து தகவல் வெளியானது?

பெண்களை துன்புறுத்தல் செய்ததாக எந்தெந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெண் மீது ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு, பெண்ணின் ஆடையைக் களைவதற்காக ஒரு பெண்ணைத் தாக்குதல், ஒரு பெண்ணைப் பின்தொடர்தல், மைனர் பெண்களை பாலியல் தொழிலுக்காக வாங்குவது மற்றும் விற்பது, கணவன் அல்லது உறவினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவது ஆகிய குற்றங்கள் இதில் அடங்கும்.

திருமணமான பெண்ணை வேண்டுமென்றே பின்தொடர்வது அல்லது கடத்திச் செல்வது, அந்தப் பெண்ணின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக சேர்ந்து வாழ்வது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது மற்றும் வரதட்சணைக் கொலை ஆகியவையும் இதில் அடங்கும்.

151 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களை துன்புறுத்திய வழக்கு : அதிர்ச்சி தரும் ஏடிஆர் அறிக்கை

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

எத்தனை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

ஏடிஆர் அறிக்கையின்படி, 755 எம்.பி.க்கள் மற்றும் 3,938 எம்.எல்.ஏ.க்களில் 151 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பெண்களை துன்புறுத்துவது தொடர்பான குற்றங்களில் தங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்து பிரமாணப் பத்திரங்களில் தெரிவித்துள்ளனர். இதில் 16 எம்பிக்களும், 135 எம்எல்ஏக்களும் அடங்குவர்.

பாலியல் வன்புணர்வு, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், பாலியல் வன்கொடுமை, மைனர் சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக கடத்தல், குடும்ப வன்முறை போன்ற குற்றங்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எந்தெந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குகள் உள்ளன?

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில், எந்தக் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலும் ஏடிஆர் மற்றும் `நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 135 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 54 மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வழக்குகள் கொண்டுள்ளது. காங்கிரஸில் 23, தெலுங்கு தேசம் கட்சியில் 17, ஆம் ஆத்மி கட்சியில் 13, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் 10, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 5 பேர் மீது இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாஜக எம்எல்ஏ தேவயானி ஃபராண்டே பிபிசியிடம் கூறுகையில், "அரசியல் ரீதியான வெறுப்பு காரணமாக பல நேரங்களில் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் பெண்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது. பெண்கள் மீதான வன்கொடுமைகளை அரசியலாக்கக் கூடாது." என்றார்.

"பெண்களை துன்புறுத்துவது தொடர்பான குற்றப் பின்னணி கொண்ட தலைவர்களை நியமனம் செய்யும் போது, ​​அவர்களின் ஆளுமைத் தன்மையை ஆய்வு செய்து அதன் பின்னரே வேட்புமனுவை அனுமதிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

எந்த மாநில எம்.பி.க்கள் மீது அதிக வழக்குகள் பதிவு?

ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் ஆகியவை மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

இதன்படி, மேற்கு வங்கத்தில் அதிகபடியான மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குகள் உள்ளன.

இந்த எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் 25 (21 எம்எல்ஏக்கள், 4 எம்பிகள்), ஆந்திராவில் 21 (21 எம்எல்ஏக்கள்), ஒடிசாவில் 17 (16 எம்எல்ஏக்கள், 1 எம்பி), டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் 13 (டெல்லியில் 13 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் 12 எம்எல்ஏக்கள் மற்றும் 1 எம்.பி) ஆக உள்ளது.

இது தவிர, பிகாரில் 9, கர்நாடகாவில் 7, ராஜஸ்தானில் 6, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தெலங்கானாவில் 5-5, குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, ஜார்கண்டில் 3, பஞ்சாபில் 2, அசாம் மற்றும் கோவாவில் தலா 2, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒருவருக்கு எதிராக பெண்களை துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு வழக்கு எத்தனை பேர் மீது உள்ளது?

தேர்தல் ஆணையத்திடம் உள்ள வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச், அமைப்புகள் பகுப்பாய்வு செய்ததில், 151 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பெண்களை துன்புறுத்தியதாக வழக்குகள் உள்ளன. இவர்களில் 16 பேர் மீது வன்புணர்வு வழக்குகள் உள்ளன. இவர்களில் 2 பேர் எம்.பி.க்கள், 14 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

மாநில வாரியாகப் பார்த்தால், மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கே 2 பேர் மீது வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி. மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, அசாம், டெல்லி, கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெலங்கானா எம்.பி., மீது வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக, வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பொதுப் பிரதிநிதிகளில், அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் (3 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள்) மற்றும் காங்கிரஸில் 5 பேர் உள்ளனர்.

இது தவிர, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF), பாரத் ஆதிவாசி கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் (BJD) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏ மீது வன்புணர்வு வழக்கு உள்ளது.

பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தலைவர்களின் பெயர்களும் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னர் இந்த தலைவர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சில வழக்குகளின் விசாரணை இன்னும் நீடிக்கிறது.

இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் வழக்குகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

'நீதியை ​​யாரிடம் எதிர்பார்ப்பது?'

ஒருபுறம், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ​​மற்றொரு புறம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகின்றன.

இதனை பெண் அரசியல் ஆய்வாளர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

மூத்த பத்திரிகையாளர் பிரதிமா ஜோஷி பிபிசியிடம், "இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் சமீப காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. காலம்காலமாக அரசியலில் இருப்பவர்கள். இந்த குற்றச் சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போது நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?"

"பில்கிஸ் பானோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டனர். இது வெட்கக் கேட்டின் உச்சம். இது போன்ற நபர்களுக்கு ஆளும் வர்க்கம் அடைக்கலம் கொடுப்பதாகத் தெரிகிறது. சாதாரண பெண்கள் யாரிடம் நீதியை எதிர்பார்க்க வேண்டும்? இந்த போக்கு அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது." என்று அவர் கூறினார்.

இதுபோன்ற தலைவர்களுக்கு தேர்தலில் களம் காண தொகுதி ஒதுக்கீடு செய்வது அனைத்து அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனம் என்று மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி நம்புகிறார்.

அவர் பிபிசியிடம், "பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. அரசியல் கட்சிகள் பெரிய தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கின்றன. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றங்களை புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது கவலைக்குரிய விஷயம்?" என்கிறார் அவர்.

"ஒருபுறம், அரசியல் கட்சிகளே நீதியைப் பற்றிப் பேசுகின்றன, உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்றன, மறுபுறம், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தேர்தலில் களமிறக்குகின்றன. இது அனைத்து அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனம். 2024 இன் இந்தியாவை நினைத்து அவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று நீரஜா கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)