போகுமிடம் வெகுதூரமில்லை: விமல், கருணாஸின் பயணம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Shark 9 Pictures
‘கொட்டுக்காளி’, ‘வாழை’ திரைப்படங்களுடன் இந்த வாரம், நடிகர்கள் விமல், கருணாஸ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ திரைப்படமும் வெளியாகியுள்ளது.
மைக்கேல்.கே.ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு எம். தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் இசையமைத்துள்ளார். இதில், பவன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களைப் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் கதை என்ன?
அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார் (விமல்) கடனில் சிக்கியுள்ளார். மருத்துவமனையில் மனைவியின் பிரசவத்திற்காகவும் பணம் தேவைப்படுகிறது.
பணத்திற்காக முக்கிய நபர் ஒருவரின் சடலத்தை திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இறந்தவரின் குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், வழியில் குமாருக்கு அறிமுகமாகும் முன்பின் தெரியாத நளினமூர்த்தி (கருணாஸ்) என ஒரு பயணத்தின் ஊடாகக் கதை நகர்கிறது.
'பொறுமையைச் சோதிக்கும் முதல் பாதி'
அறிமுக இயக்குநர் மைக்கேல்.கே.ராஜா, ஒரு காட்சிகூட வீண் போகாத விதத்தில், திறமையாக இந்தக் கதையைக் கையாண்டிருப்பதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விமர்சனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தில் குமாருக்கு காத்திருக்கும் ஆபத்துகளும் பாடங்களுமே இத்திரைப்படம் என்கிறது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’. இந்தப் படம் மனதைக் கவரும் வகையில் உள்ளதாகக் கூறுகிறது அந்த விமர்சனம்.
விமல் மற்றும் நளினமூர்த்தி எனும் கூத்துக் கலைஞராக வரும் கருணாஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளதாகவும் பாராட்டியுள்ளது.
படத்தின் முதல் பாதி நம் பொறுமையைச் சோதித்துவிடும் என்று விமர்சித்துள்ள சினிமா எக்ஸ்பிரஸ், இருப்பினும் இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதோடு, படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிவதாகப் பாராட்டியிருக்கிறது.
வலுவான கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், Shark 9 Pictures
தனக்கு ஏற்பட்ட சோகங்களுக்காகத் தன்னையே ‘சனியன் புடிச்சவன்’ என குமார் கூறிக்கொள்வதை நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’. இத்தகைய கதை சொல்லல் பாணியில் உள்ள வரம்புகள் குறித்துத் தெரிந்திருந்தாலும், எதை நினைத்து குமார் நொந்துகொள்கிறார் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்று சினிமா எக்ஸ்பிரஸ் விமர்சிக்கிறது.
மேலும், இத்திரைப்படம், சமீபத்தில் எழுதப்பட்ட மோசமான காதல் காட்சிகளைக் கொண்டுள்ளதாகவும் விமர்சித்திருக்கிறது. ஒரு சாதாரண காரணத்திற்காக குமாரின் வீட்டில் தங்குகிறார் ஒரு பெண். குமார் தனது தாத்தாவுடன் இருப்பதால், அந்தப் பெண் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்கிறார்.
பின்னர், “வாழ்நாள் முழுவதும் இந்த வீட்டு வேலைகளைச் செய்வதற்கு என்னை திருமணம் செய்துகொள்கிறீர்களா” என குமாரை அந்தப் பெண் கேட்கிறார். வீட்டு வேலைதான் திருமணத்தின் ஒட்டுமொத்த அம்சமா என்பதற்கு இயக்குநர்தான் பதில் கூறவேண்டும் என ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ படத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய குறைகளுக்கு மத்தியிலும், படத்தில் நேர்மறையான அம்சங்கள் இருப்பதாகவும் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.
மனிதத்தின் மீது நம்பிக்கையை விதைக்கும் வகையில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் பிரசங்கத் தொனியிலேயே இருக்கும் என்றும், அதனால் சொல்ல விரும்பும் கதையிலிருந்து விலகிச் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ள ‘சினிமா எக்ஸ்பிரஸ்’, இத்திரைப்படம் குமார் மற்றும் நளினமூர்த்தி கதாபாத்திரங்களின் எல்லைக்குள் நின்று கதையைச் சொல்லியிருப்பதாகப் பாராட்டியுள்ளது.
மனிதத்தை வலியுறுத்தும் படம்

பட மூலாதாரம், Shark 9 Pictures
திருநெல்வேலியை நோக்கிய பயணத்தில் தங்களையே கண்டுணரும், முன்பின் அறியாத இருவரின் சந்திப்பு வாயிலாக மனிதத்தை இத்திரைப்படம் சித்தரித்திருப்பதாக, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் தெரிவித்துள்ளது.
"சவாலான தருணங்களிலும் மனிதத்துடன் இருக்க வேண்டும்" என்பதை இத்திரைப்படம் வலியுறுத்துவதாக அந்த விமர்சனம் கூறுகிறது.
இருவருக்கு இடையிலும் ஏற்படும் சூழல்கள், இரு கதாபாத்திரங்களின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் ஒரு சம்பவத்தை இத்திரைப்படம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதிகமாகப் பேசும் குணமுடைய நளினமூர்த்தி, குமாரின் பொறுமையைச் சோதிக்கிறார். அதன் வாயிலாக, குமாரைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் திரையில் விரிகின்றன. தாங்கள் செல்லும் வழியில் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் கொடூரங்களுக்கு மத்தியிலும் மனிதத்தைக் கண்டடைவதுதான் இத்திரைப்படம் என்கிறது அந்த விமர்சனம்.
உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம்
பல இடங்களில் பார்வையாளர்கள் முன்கூட்டியே கணிக்கும் வகையில் கதை உள்ளதாகத் தெரிவித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"செல்லும் வழியில் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்துகொள்ளும் ஜோடியை சந்திப்பது எதார்த்தமாக இல்லை என்றும், குமாரின் கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கனமான சித்தரிப்பாக இல்லை" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
நளினமூர்த்தி மற்றும் குமாருக்கு இடையிலான நகைச்சுவை தருணங்கள் கதையுடன் நன்றாகப் பொருந்தி போவதாகத் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Shark 9 Pictures
படம் முழுவதும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவற்றில் சில வேலை செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
உணர்வுபூர்வமான காட்சிகளை இயக்குநர் நீட்டிக்க நினைத்திருக்கலாம் என்பதால், தேவையானதைவிட அக்காட்சிகள் சிறிது நீளமாக இருப்பதாக விமர்சித்துள்ளது. இன்னும் கச்சிதமாகப் படத்தொகுப்பு செய்திருந்தால், பார்வையாளர்களின் கற்பனைக்கு இன்னும் அதிகமாக விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அந்த விமர்சனம் கூறியுள்ளது.
இத்தகைய பிரச்னைகள் இருந்தாலும், கதாபாத்திரங்கள் நன்றாக நடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளது அந்த விமர்சனம். முதல் முறையாக விமல் சென்னை பாணியில் பேசியுள்ளார், தன்னுடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார் எனப் பாராட்டியுள்ளது.
தன்னுடைய நளினமூர்த்தி கதாபாத்திரத்தின் இருவேறு பரிமாணங்களை கருணாஸ் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பதாகவும் அந்த விமர்சனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் மிகச்சிறந்த கூத்துக் கலைஞர் என்ற பெருமை, அக்கலை அழிந்து வருவதை நினைத்துப் பயம் மற்றும் வலியுடன் இருப்பது என இரு பரிமாணங்களையும் கருணாஸ் சிறப்பாகச் செய்திருப்பதாகப் பாராட்டியிருக்கிறது.
பவன், நரேன், தீபா, மஹா, வேல ராமமூர்த்தி ஆகிய துணை கதாபாத்திரங்களும் தங்களது பாத்திரங்களைச் சிறப்பாக செய்திருப்பதாகக் கூறுகிறது, டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












