ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சந்தீப் ராய்
    • பதவி, பிபிசி செய்திகள்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (National Pension System - என்.பி.எஸ்) சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கு மத்தியில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (Unified Pension Scheme - யு.பி.எஸ் திட்டம்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் (old pension scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் இதைப் பிரச்னையாக்கின.

ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கன தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எந்தெந்த வழிகளில் வேறுபட்டது என்பதைப் புரிந்துகொள்வோம்.

நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேசிய ஓய்வூதிய திட்டம் - ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ன வேறுபாடு?

2004-ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) கைவிட்டு புதிய ஓய்வூதிய முறைக்கு (NPS) மாறிய போது, ​​நிலையான ஓய்வூதியம் வழங்குவது நீக்கப்பட்டது.

இதனுடன், ஊழியர்களின் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டது. இதில் ஊழியர் மற்றும் அரசாங்கம் இருதரப்பும் சமமாக 10% பங்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

2019-ஆம் ஆண்டில், இந்தப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏவில் 14%-ஆக உயர்த்தப்பட்டது.

புதிய விதியின்படி, ஓய்வுக்குப் பிறகு, பணியாளர் ஓய்வூதியத்தின் மொத்த தொகையில் 60%-ஐ எடுக்கலாம், மீதமுள்ள 40%-ஐ பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் ஓய்வூதிய நிதி மேலாளர்களின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களை 'குறைந்த' முதல் 'அதிக' அபாயத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, அது பழைய ஓய்வூதிய திட்டத்தை விடச் சிறந்தது என கூறப்பட்டதாகவும், ஆனால், 2004-க்கு பின் பணியமர்த்தப்பட்டு, ஓய்வு பெற்றவர்களுக்கு, பெயரளவுக்குத் தான் ஓய்வூதியம் கிடைப்பதாகவும் அரசு ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன.

இது தவிர, ஊழியர்களும் தங்கள் சொந்தப் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், அதேசமயம் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தரப்படும் ஓய்வூதியம் முற்றிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தைச் சார்ந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களின் பங்களிப்புத் தொகையை திரும்பப் பெறுவது குறித்து தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

அமைச்சரின் அறிக்கையுடன் உடன்படாத சங்கங்கள்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யு.பி.எஸ்) குறித்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ஓய்வூதியம், அது தொடர்பான விஷயங்கள் தொடர்பாக டாக்டர் சோமநாதன் (அப்போது நிதிச் செயலாளராக இருந்தவர்) தலைமையில் ஒரு குழுவைப் பிரதமர் மோதி அமைத்திருந்தார்,” என்றார்.

"நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி, உலகின் பிற நாடுகளில் உள்ள திட்டங்களைப் புரிந்து கொண்ட பிறகு, அக்குழு ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை’ பரிந்துரைத்தது, இது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்றார்.

ஆனால், பல தொழிற்சங்கத் தலைவர்கள் அவரது கூற்று பொய் என்று கூறியுள்ளனர். அவர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தங்களுடன் அரசு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்கின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் (National Movement for Old Pension Scheme - NMOPS) தேசியத் தலைவர் விஜய் குமார் பந்து இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார், “கமிட்டியின் பரிந்துரை எப்போது சமர்ப்பிக்கப்பட்டது, எப்போது விவாதிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. குழுவின் அறிக்கை என்னவென்று கூட யாருக்கும் தெரியாது," என்கிறார் அவர்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்காக நாங்கள் இயக்கம் நடத்தி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு எங்களிடம் பேசுவது பொருத்தமானது என்று அரசாங்கம் கருதவில்லை," என்கிறார் அவர்.

“பிரதமர் மோதிக்கு நான்கு முறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், அப்படியே பழைய ஓய்வூதியத் திட்டம் தான் என அரசு கூறுகிறது. அப்படியெனில், பழைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன பிரச்னை?” என்கிறார்.

விஜய் குமார் பந்து மேலும் கூறுகையில், "கடந்த சேவை ஆண்டின் சராசரி அடிப்படை சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படும் என ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது தவிர, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் செய்த 10% பங்களிப்பும் திருப்பி வழங்கப்படாது. அதாவது. ஊழியர்களால் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் இருக்க முடியாது, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலும் இருக்க முடியாது,” என்கிறார்.

இருப்பினும், ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிடையே தேர்வு செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரக் கோரி போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

'25 ஆண்டு வரம்பு'

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற, 25 ஆண்டு வரம்பு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, விஜய் குமார் பந்து கூறுகையில், "ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், முழு ஓய்வூதியம் பெற 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவப் படை ஊழியர்கள், 20 ஆண்டுகளில் ஓய்வு பெறுகின்றனர். அதாவது, இத்திட்டத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். அதேபோல வேறு பல ஊழியர்களும். அதனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு நஷ்டம் தான்," என்கிறார் அவர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேசிய அமைப்பின் தேசியத் தலைவரான மஞ்சித் சிங் படேல் பிபிசி ஹிந்தியிடம், "தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு சிக்கல்கள் இருந்தன. முதலில், பணிபுரியும் போதே ஊழியருக்கு தனது பணத்தின் மீது உரிமை இல்லை. இரண்டாவதாக, ஓய்வு பெறும் போது அவரது ஓய்வூதியம் எவ்வளவு என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படாததால், நிலையான சதவீதம் வழங்கப்படவில்லை,” என்கிறார்.

"தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு நன்மை இருந்தது. அதன்கீழ் ஊழியரின் டெபாசிட் பணம் அவருக்கு அல்லது அவரது குடும்பத்திற்குச் சென்றது. அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. அந்தப் பணம் அரசாங்கத்திற்குச் செல்லவில்லை," என்றார்.

“ஊழியர்களின் பணத்தை அவர்களிடமே திருப்பித் தர வேண்டும் என்பதுடன், அவர்கள் செலுத்திய பங்களிப்பை திருப்பி வழங்குவதுடன், அவர்களுக்கு பழைய ஓய்வூதியத்துக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை,” என்கிறார் அவர்.

​​"தேசிய ஓய்வூதியத் திட்டத்தை விட, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மோசமாகிவிட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால். தற்போதைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி சம்பளத்தில் 50% ஓய்வூதியம் கிடைக்கும் என்ற விதி உள்ளது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இதற்கான ஏற்பாடு இல்லை,” என்றார்.

தொழிற்சங்கங்களிடம் என்ன ஆலோசனை கேட்கப்பட்டது?

நாட்டின் 10 மத்திய தொழிற்சங்கங்களில் ஒன்றான சி.ஐ.டி.யூ-வின் பொதுச் செயலாளர் தபன் சென், பிபிசி இந்தியிடம் பேசும்போது, ​​இந்த விஷயத்தில் அரசாங்கம் தங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று கூறினார்.

"பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்குலைக்காமல், அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, பெரும்பாலான ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தியும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை,'' என்றார்.

தபன் சென் மேலும் கூறுகையில், "ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கருணைத் தொகை (​Dearness Allowance - DA) நீங்கலாக அடிப்படை சம்பளத்தில் பாதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஐந்து வருட இடைவெளியில், DA பகுதி பொதுவாக அடிப்படைக்குச் சமமாகவோ அல்லது அதிகமாகவோ மாறும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பாதியாக குறையும்," என்றார்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தைத் திரும்ப அமல்படுத்த வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆலோசனை ஆசிரியர் அதிதி பட்னிஸ், பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவைச் சமன்படுத்தும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.

"தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களின் சேமிப்பில் ஒரு பகுதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் அதே விகிதத்தில் வழங்கப்படும். அது நிலையானதாகவும் இருக்கலாம், மாறுபடுவதாகவும் இருக்கலாம்,” என்றார்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்தவர்கள் சமீப வருடங்களில் ஓய்வூதியம் பெறத் தொடங்கியுள்ளனர்.

“அவர்கள், சில சமயங்களில் தங்களது ஓய்வூதியம் ரூ.100-ஆக இருக்கிறது, சில சமயம் ரூ.120-ஆக இருக்கிறது என்று புகார் கூறுகின்றனர். அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்?” என்கிறார் அதிதி.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெயரளவு ஓய்வூதியம் பெறுவது குறித்தும் விஜய் குமார் பந்து கேள்வி எழுப்பினார்.

"பனாரஸில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்த ஒருவர் ஓய்வு பெற்ற போது, ​​அவரது சம்பளம் சுமார் ரூ1.5 லட்சமாக இருந்தது. ஆனால் ஓய்வூதியம் வரத் தொடங்கியபோது, ​​அது வெறும் ரூ4,044 ஆக இருந்தது. அவருக்கு வாழ்வாதார நெருக்கடி ஏற்பட்டது," என்கிறார்.

இதனால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தைத் திரும்ப அமல்படுத்த வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் ஒரு பெரிய வாக்கு வங்கியாகவும் உள்ளனர். இவர்கள் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை சீரமைக்க கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய முதல் மாநில அரசு இமாச்சலப் பிரதேசம். 2022-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவால் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

"பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தால் மக்கள் மகிழ்ச்சியடையக் கூடும். ஆனால், எதிர்காலத்தில் வரும் அரசாங்கங்கள், தொடர்ந்து அதிகரித்து வரும் ஊழியர்களின் ஓய்வூதியக் கட்டணத்தைச் சுமக்க வேண்டும். இதில் இமாச்சல பிரதேச அரசும் அடங்கும்," என்கிறார் அதிதி பட்னிஸ்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசாங்கம், தன் பங்களிப்பை 18.5%-ஆக உயர்த்த ஏற்பாடு செய்துள்ளது.

இதனால், பாக்கித் தொகையான ரூ.800 கோடி அரசின் மீது சுமையாக இருக்கும் என்றும், அமல்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் கருவூலத்தின் மீதான சுமை ரூ.6,250 கோடியாக இருக்கும் என்றும் முன்னாள் நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ஓய்வூதியம் வழங்குவதற்கான செலவினம் 1990-1991-இல் மத்திய அரசுக்கு ரூ.3,272 கோடியாகவும், மாநிலங்களுக்கு ரூ.3,131 கோடியாகவும் இருந்தது.

2020-2021 மத்திய அரசின் ஓய்வூதியச் சுமை 58 மடங்கு அதிகரித்து ரூ.1,90,886 கோடியாகவும், மாநிலங்களின் சுமை 125 மடங்கு அதிகரித்து ரூ.3,86,001 கோடியாகவும் ஆனது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கோரி போராட்டம் நடத்திய ஊழியர்கள்

அரசு என்ன சொல்கிறது?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த திட்டத்தை ஒரு எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.

அவர் ஒரு பதிவில், "ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசாங்கங்களும் தேர்வு செய்தால், 90 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் பயனடைவார்கள். ஏற்கனவே இருக்கும் மற்றும் வருங்கால ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையில் தேர்வு செய்யலாம்," என்றார்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 10,000 ரூபாய் ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில், "நாட்டின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைக்கும் அனைத்து அரசு ஊழியர்களை நினைத்தும் நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இந்த ஊழியர்களின் கண்ணியத்தையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்யப் போகிறது. இது அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது," என்கிறார்.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர், ஊழியர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் என்ன ஆதாயம்?

பொருளாதார நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான அலோக் ஜோஷி, பிபிசி உடனான உரையாடலில், "பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திருந்தால், அரசாங்கத்தின் மீதான சுமை அதிகரித்துக் கொண்டே போயிருக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஊழியர்களின் பங்களிப்பு தொடர்வதுதான். இது 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும்," என்றார்.

அலோக் ஜோஷி மேலும் கூறுகையில், "ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 10% பங்களிப்பைப் பெற்று அரசாங்கம் தனது சுமையை குறைத்துள்ளது. ஒரு வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டம் புதிய தோற்றம் பெற்றுள்ளது," என்கிறார்.

"ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இது பங்குச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளில் இருந்து ஊழியர்களைக் காப்பாற்றுகிறது. இதுவரை, தேசிய ஓய்வூதியத் திட்டம், முதலீட்டில் நல்ல வருமானம் தருகிறது. ஆனால் எதிர்காலத்தில், ஏதேனும் இயற்கைப் பேரழிவு அல்லது மந்தநிலை காரணமாகப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால், அந்தச் சூழ்நிலையில் நிலையான ஓய்வூதியத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும்,” என்றார்.

"பழைய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களிடம் இருந்து பங்களிப்புத் தொகை எடுக்கப்படவில்லை. அதனால் அது அரசுக்குப் பெரும் சுமையாக இருந்தது. ஆனால், ஓய்வு பெற்ற பின், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணம் எடுப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து, இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "முன்பெல்லாம் ஓய்வூதியத்தில் 'கம்யூட்டிங்' என்ற விதிமுறை இருந்தது. அதாவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஒரு ஊழியர் தனது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை விற்கலாம். அதற்கான கோரிக்கை இருந்தால், அரசு இந்த விதியைச் சேர்க்க வேண்டும்," என்றார்.

திட்டம் கொண்டுவரப்பட்ட நேரம்

மூத்த பத்திரிகையாளர் அதிதி பட்னிஸ் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறாததற்கு ஓய்வூதிய திட்டப் பிரச்னையும் ஒரு காரணம், என்கிறார்.

"பொதுத் தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சிகள் இதை ஒரு பிரச்னையாக மாற்றின. களத்தில் இதுகுறித்து நிறைய கவலைகள் இருந்தன. பல எதிர்க்கட்சிகளும் ஆட்சிக்கு வந்த பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறின. அதில் பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசுகளான மகாராஷ்டிரா போன்ற அரசாங்கங்களும் இருந்தன,” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் கருத்தில் கொண்டுதான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது,” என்கிறார்.

அதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் இருப்பதாகவும், ஹரியானாவில் குறைவாக இருந்தாலும், மகாராஷ்டிராவிலும் அவர்கள் கணிசமாக இருப்பதாகவும் அலோக் ஜோஷி கூறுகிறார். தேர்தலை மனதில் வைத்து இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை, என்கிறார் அவர்.

இளைஞர்களுக்கு பயிற்சிக்கான உதவித்தொகை

பிபிசி-யிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திர திவாரி, கடந்த சில நாட்களாக மோதி அரசு எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னைகளை மழுங்கடிக்க முயன்றது, என்றார்.

முதன்முறையாக வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி உதவித்தொகை வழங்கும் முறையை பட்ஜெட்டில் அமல்படுத்தியிருப்பது இதற்கு மிகப்பெரிய உதாரணம், என்கிறார் அவர்.

அவர் கூறுகையில், "பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது," என்றார்.

ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் போராடி வருவதாகவும், அதையே விரும்புவதாகவும் விஜய் குமார் பந்து கூறுகிறார்.

“பொதுத் தேர்தலில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்தோம். அதன் விளைவு, பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இப்போதுதான் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிய அரசு, எதிர்காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வேண்டும்,” என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)