எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை - வெளிநாட்டு மண்ணில் சாதித்துக் காட்டிய சுப்மான் கில்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.
ஹராரேவில் நடந்த கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 42ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டிங்கில் கேமியோ ஆடி 26 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ஷிவம் துபே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சரிவிலிருந்து மீட்ட சாம்ஸன்
இந்திய அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையில் அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டது சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங். சாம்ஸன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும், கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்களை வெளுத்து அரைசதத்துடன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்ஸனின் முக்கியமான பங்களிப்புதான் இந்திய அணி வெல்ல காரணமாக அமைந்தது. சாம்ஸனின் பங்களிப்பை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இந்திய அணி முதல் ஆட்டத்தைப்போன்று 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
அதேபோல பந்துவீச்சில் முகேஷ் குமார், சுந்தர், துபே ஆகியோரும் 13வது ஓவருக்குப்பின் சீராக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி அளித்து வீழ்த்த உதவினர்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு பந்தில் 13 ரன்கள்
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நேற்று ஒரே பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவர் முதல்பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பந்து நோபாலாக மாறவே 7 ரன்கள் கிடைத்தது, அடுத்த ப்ரீஹிட் பந்திலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசவே ஒரு லீகல் பந்தில் 13 ரன்களை விளாசி, ஒரே பந்தில் அதிக ரன் விளாசிய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஆனால், அதே ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன் போல்டாகி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த அபிஷேக் ஷர்மா 14 ரன்கள் சேர்த்தநிலையில் முசாராபானி வீசிய 4வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து நகரவா வீசிய 5வது ஓவரில் ஷார்ட் பாலில் கேப்டன் கில் 13 ரன்கள் சேர்த்தநிலையில் கேப்டன் சிக்கந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பட மூலாதாரம், Getty Images
சாம்ஸன் அரைசதம்
40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
ரியான் பராக், சாம்ஸன் ஜோடி 56 பந்துகளைச் சந்தித்து 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரின் ஆட்டத்தால், இந்திய அணி பெரிய சரிவுக்குச் செல்வது தவிர்க்கப்பட்டது. ரியான் பராக் 22 பந்துகளில் 24 ரன்களில் பிரன்டன் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில்நிதானமாக ஆடிய சாம்ஸன் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் 4 சிக்ஸர்களை விளாசி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் முசாராபானி ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று சாம்ஸன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி இரு ஓவர்களில் ஷிவம் துபே கேமியோ ஆடிய இந்திய அணியின் ஸ்கோரை 150 ரன்களுக்கு மேல் உயர்த்த உதவினார். காரவா சுழற்பந்துவீச்சில் 2 பவுண்டரி, 2 சிக்ஸரும் விளாசி 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸரும் இந்திய அணி 160 ரன்களைக் கடக்க உதவியது. ரிங்கு சிங் 11 ரன்களிலும், சுந்தர் ஒரு ரன்னிலும்இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் முசாராபானி மட்டும் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
தடுமாறிய ஜிம்பாப்வே
168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட் வீழ்த்தி வரும் முகேஷ்குமார் இந்த முறையும் அதை சரியாகச் செய்தார். முதல் ஓவரின் 3-ஆவது பந்திலேயே வெஸ்லேவை க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் முகேஷ் வெளியேற்றினார்.
அடுத்துவந்த பென்னட் 10 ரன்களில் முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. டியான் மேயர்ஸ், மருமனி இருவரும் சேர்ந்து சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர்.
தேஷ்பாண்டே, பிஷ்னாய் ஓவர்களில் பவுண்டரிகளாக வெளுத்த மேயர்ஸ், மருமனி ஸ்கோரை உயர்த்தினர். வாஷிங்டன் வீசிய 9-வது ஓவரில் மருமனி கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் விக்கெட் வீழ்த்தி ஜிம்பாப்வே சரிவைத் தொடங்கி வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
விக்கெட் சரிவு
அதன்பின் சீரான இடைவெளியில் ஜிம்பாப்பே பேட்டர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். ஷிவம்துபே தான் வீசிய 13வது ஓவரில் மேயர்ஸ்(34) விக்கெட்டையும், 15-வது ஓவரில் கேம்பெல்(4) விக்கெட்டையும் வீழ்த்தினார். சிக்கந்தர் ராசா 4 ரன்னில் துபேயால் ரன் அவுட் செய்யப்பட, ஜிம்பாப்வே அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
கடைசி நேரத்தில் பராஸ் அக்ரம், 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை அடித்து உள்நாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, 27 ரன்களில் முகேஷ் வீசிய 19-வது ஓவரில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நகரவா டக்அவுட்டில் ஆட்டமிழக்கவே ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் முகேஷ் குமார் 3.3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
சாதித்த இளம் இந்திய அணி
டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில், பல வீரர்களுக்கு இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தத் தொடரில் முற்றிலும் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் கொண்ட இந்திய அணியை களமிறங்கியது. கேப்டன் கில் 14 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்திய அணியில் 2 வீரர்கள் மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள் மற்ற அனைத்து வீரர்களும் 30 வயதுக்குள்ளாக இருக்கும் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தபின் கடும் விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீண்டு தங்களை தயார் செய்து தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
இதுவரை எந்த இந்தியக் கேப்டன் தலைமையிலும் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லாத நிலையில் முதல்முறையாக கில் தலைமையில் இந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவியது
டி20 தொடரை வென்றது குறித்து கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “இந்த கேப்டன் பொறுப்பு என்னிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொணர்ந்தது. இந்த கேப்டன் பதவியை ரசித்துச் செய்தேன். முதல் போட்டியில் தோற்றவுடன் எனக்கு அழுத்தம் இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை கணிக்காமல் விளையாடிவிட்டோம். ஆனால், அதன்பின் அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேறிய அடுத்தடுத்த வெற்றிகள் உதவியது.” என்றார்.
மேலும், “இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். இதனால் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு எளிதாக அவர்களை அணுக எனக்கு பெரிதும் உதவியது. இதுபோன்ற பலதிறமையைான வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் அனுபவம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ரோஹித், பாண்டியா, கோலி ஆகியோர் திறமையானவர்கள். இவர்களிடம் இருந்து ஏராளமான திறமைகளை, அனுபவங்களைப் நான் பெற்றுள்ளேன். குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் அதிக போட்டிகளை விளையாடிய அனுபவம் எனக்கு உதவியது” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












