மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு - என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

    • எழுதியவர், சல்மான் ரவி
    • பதவி, பிபிசி செய்தியாளர், மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லாவில் இருந்து

மத்தியப்பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டத் தலைநகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் பைன்ஸ்வாஹி உள்ளது.

இந்த இடத்தில் ஈத்கா குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு முன்பு 30 வீடுகள் இருந்தன. தற்போது அது பாழடைந்த பகுதி போல காணப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் குப்பை குவியல்கள், உடைந்த சுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடுகின்றனர். குழந்தைகள் தங்கள் விளையாட்டுப் பொருட்களையும், பெண்கள் குப்பைகளுக்கு அடியில் புதையுண்டு கிடக்கும் விலையுயர்ந்த பொருட்களையும் தேடுகின்றனர்.

"யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக வேறொருவர் தண்டிக்கப்படுகிறார். எங்கள் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. எங்கள் வீடு திடீரென இடிக்கப்பட்டது" என்று கண்களில் கண்ணீருடன் ரோஷினி கூறுகிறார்.

"குறைந்தபட்சம் எங்களை எச்சரித்திருந்தால், நாங்கள் எங்கள் உணவுப் பொருட்களை வெளியே எடுத்திருப்போம். நான்கு நாட்களாகியும் எங்களுக்கு ஒரு பிடி உணவுகூடக் கிடைக்கவில்லை" என்று அவர் சொன்னார்.

”என் குழந்தைகள் பசியுடன் இருக்கிறார்கள். என் கணவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்வது? எங்கே போவது,” என்று அவர் வினவினார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிவித்த 10 பேரில் அவரது கணவரும் அடங்குவார். மேலும் அவரைப் பற்றிய தகவல் அளிப்போருக்கு 5,000 ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதான அப்துல் ரஃபீக் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தவுடன் இருக்கும் தனது குடிசையில் அமர்ந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத அவருக்கு சிறுநீர் பை பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இப்போது இருக்கும் ஒரே ஆண் இவர்தான்.

ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் இந்த குடியிருப்புப் பகுதியில் என்ன நடந்தது? தனக்கு அது பற்றிய தகவல் தெரியாது என்று கூறிய அவர், “நான் என் குடிசையில் இருந்தேன்.. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நோய்வாய்ப்பட்டுள்ள எனக்கு, இங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை,” என்று குறிப்பிட்டார்.

இம்மாதம் 16ஆம் தேதி நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த குடியிருப்பை சேர்ந்த 11 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன.

இடிக்கப்பட்ட வீடுகள் பசு வதை மற்றும் பசு கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்குச் சொந்தமானது என மண்ட்லா நிர்வாகம் கூறுகிறது.

போலீசார் கூறியது என்ன?

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

படக்குறிப்பு, கூடுதல் மாவட்ட அதிகாரி ராஜேந்திர குமார் சிங்

இந்த முழு குடியிருப்பும் சட்ட விரோதமாக அரசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று மண்ட்லாவின் கூடுதல் மாவட்ட அதிகாரி ராஜேந்திர குமார் சிங் கூறுகிறார்.

''ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். தற்போது 11 பேரின் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய மாவட்ட அதிகாரி சலோனி சிதானா, 2022 ஆம் ஆண்டிலிருந்தே ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெளிவுபடுத்தினார்.

”பைன்ஸ்வாஹியில் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளில் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்ட அந்த 11 பேரின் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக மாடு கடத்தல் மற்றும் மாட்டிறைச்சி விற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன,” என்று அவர் கூறினார்.

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

படக்குறிப்பு, இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் அமர்ந்திருக்கும் பெண்கள்

போலீஸ் மற்றும் நிர்வாகத்தினர் முன்பு பலமுறை தாக்கப்பட்டிருப்பதால் பைன்ஸ்வாஹிக்கு செல்வது மிகவும் ஆபத்தானது என்று கூறிய அவர், எல்லா சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.

ஜூன் 15ஆம் தேதி, பைன்ஸ்வாஹியில் மாட்டிறைச்சி இருப்பது குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, கூடுதல் படை வரவழைக்கப்பட்டது. நைன்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் துணை மண்டல காவல்துறை அதிகாரி நேஹா பச்சிசியா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் வீடுகளிலும் பசு வதையின் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மண்ட்லா காவல்துறை கண்காணிப்பாளர் என்ன சொன்னார்?

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

படக்குறிப்பு, ரஜத் சக்லேச்சா

ரஜத் சக்லேச்சா மண்ட்லாவின் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளார். பசு வதை மற்றும் பசு கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் வெவ்வேறு விஷயங்கள் என்று அவர் தெரிவித்தார்.

“இந்தச் சோதனையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளின் வெவ்வேறு அறைகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் பசு மாட்டிறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர மாட்டை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அறைகளுக்குள் மாடுகளும் கட்டப்பட்டிருந்தன,” என்று சக்லேச்சா கூறினார்.

வீடுகளுக்குப் பின்னால் சுமார் 150 பசுக்கள் இருந்ததாகவும், அவற்றை போலீசார் கைப்பற்றி தங்கள் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

தனது அலுவலகத்தில் பிபிசியிடம் பேசிய அவர், “அங்குள்ள பல்வேறு வீடுகளில் இருந்தும், வீடுகளுக்கு வெளியேயும் எலும்புக் குவியல்களை கண்டெடுத்தோம். இதுபோன்ற பல வீடுகளில் மாடுகளின் இறைச்சியைத் தவிர, தோல் மற்றும் கொழுப்பு போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன. முதன்மை சாட்சியத்தின் அடிப்படையில், 11 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைச்சி மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

மண்ட்லாவில் இருந்து பிண்ட்ராய் செல்லும் வழியில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் வலது பக்கத்தில் பைன்ஸ்வாஹி உள்ளது. இதில் மூன்று குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அவை மஸ்ஜித் டோலா, கிசானி டோலா மற்றும் ஈத்கா டோலா. ஈத்கா டோலாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குரேஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் கிசானி டோலாவில் பழங்குடியினர் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள பஞ்சாயத்து தலைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வெளியே பஞ்சாயத்து தலைவரின் கணவர் ரமேஷ் மராவியை சந்தித்தோம். பசு கடத்தல் குறித்து பஞ்சாயத்து ஆட்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தும், நடவடிக்கை எடுக்க மிகவும் காலதாமதமானதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் வீட்டை இடிப்பதை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

போலீசார் மீட்டெடுத்த அனைத்துமே வாஹித் குரேஷியின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் காவல்துறை மற்றவர்களையும் இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளது என்று இந்த இடத்தில் வசிக்கும் சமீனா பானோ குற்றம் சாட்டுகிறார்.

மகளின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததாகவும், வீடு இடிக்கப்பட்டதால் திருமணத்துக்கு வாங்கிய பொருள்கள் நாசமாகிவிட்டதாகவும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரஸியா குறிப்பிட்டார்.

போலீசார் தங்களிடம் இருந்த பணத்தையும் கோழிகளையும் எடுத்துச் சென்றதாக சில பெண்கள் குற்றம் சாட்டினர். போலீஸ் அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

படக்குறிப்பு, மனோஜ் குமார் சக்வானி

டாக்டர் அஷோக் மார்ஸ்கோலே, மண்ட்லாவின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்துள்ளார். பலரின் சமய நம்பிக்கை அதில் இணைந்துள்ளதால் பசு கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இதில் தொடர்புடையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர போலீசார், நீதிமன்றத்தில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். ஆனால் மார்ஸ்கோலே புல்டோசர் நடவடிக்கையை எதிர்க்கிறார்.

"புல்டோசர் நடவடிக்கைதான் எடுக்கப் போகிறீர்கள் என்றால் விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு செல்லத் தேவையே இல்லை. நீதிமன்றங்களை மூடிவிடலாம். நிர்வாகம்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்றால், அரசிடம்தான் எல்லா முடிவுகளும் இருக்குமென்றால் நீதிமன்றங்களை மூடிவிடுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...” என்று அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருவது வரை நிர்வாகத்தின் நடவடிக்கை சரியானது என்றும் ஆனால், சட்டத்தைக் கையில் எடுக்க நிர்வாகத்துக்குக் கூட உரிமை இல்லை என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சட்ட விதிகள் பற்றி விவரித்த மண்ட்லாவின் பிரபல வழக்கறிஞர் மனோஜ் குமார் சக்வானி, ”அரசு நிலத்தை யாராவது ஆக்கிரமித்திருந்தால், மத்திய பிரதேச நில வருவாய் சட்டத்தின் பிரிவு 248-ன் கீழ் தஹசில்தார் நிலை அதிகாரிகள் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிப்பார்கள். இந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் பிறகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது,’ என்று குறிப்பிட்டார்.

முன்னறிவிப்பு இன்றி திடீரென யாருடைய வீட்டையோ, சொத்துகளையோ இடிப்பது சட்டப்படி செல்லாது என்று அவர் கூறினார்.

பைன்ஸ்வாஹி நிர்வாகத்தின் செயலை மக்கள் நியாயப்படுத்துவது ஏன்?

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI

படக்குறிப்பு, அப்துல் வஹாப் அலி

நைன்பூர் ஒரு சிறிய நகரம். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். இங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது, அதன் தலைவர் ஷேக் ஜாஃபர் மன்சூரி.

மதிய தொழுகை முடிந்து ஒவ்வொருவராக மசூதியிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களில் சிலருடன் நாங்கள் பேசினோம். பைன்ஸ்வாஹியில் நடக்கும் வேலைகளைப் பற்றி, 'அனைத்து முஸ்லிம்களும் வெட்கப்படுகிறார்கள்' என்று மன்சூரி கூறினார்.

பைன்ஸ்வாஹியில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை "சரியானது," என்று அப்துல் வஹாப் அலி குறிப்பிட்டார்.

“இது போன்ற ஒரு சிலரே ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கெட்ட பெயரைக் கொண்டு வருகிறார்கள். இந்துக்களின் மத நம்பிக்கை புண்படுத்தப்படுகிறது. நாங்கள் எங்கள் இந்து சகோதரர்களுக்கு ஆதரவாக உள்ளோம். நிர்வாகம் செய்தது சரிதான். பல ஆண்டுகளாகவே இதன் தேவை இருந்தது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்த 11 வீடுகளில் மூன்று, மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை. ஆனால் இதற்கு அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை.

இதில் ஒன்று ஆஸியாவின் வீடு. "இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் எங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தன. தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு வீடுகளை ஒதுக்கியது" என்று அவர் கூறுகிறார்.

அரசு தனது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது. போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான, சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வீடுகள் சரியான நடைமுறையை பின்பற்றியே இடிக்கப்பட்டன என்று மாவட்ட கூடுதல் அதிகாரி ராஜேந்திர குமார் சிங், பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

”குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு வீட்டு வசதி திட்ட வீடுகளும் இருந்தன என்பதற்கான ஆதாரம் எதுவும் எங்கள் கவனத்திற்கு வரவில்லை."

மத்திய பிரதேசத்தில் 11 முஸ்லிம்களின் வீடுகள் மீது ’புல்டோசர் நடவடிக்கை’ - உண்மை என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

படக்குறிப்பு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்.

கடந்த பல தசாப்தங்களாக பைன்ஸ்வாஹியில் பசுக் கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாக காவல்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மக்களும் அதை ஆமோதிக்கின்றனர்.

இந்த இடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சோதனைக்கு சென்ற போலீஸ்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற ஒரு சட்டவிரோத வியாபாரம் நடக்கிறது என்றால் அதற்கு யார் ஆதரவு தருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது இது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக மண்ட்லா காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் புல்டோசர் பயன்படுத்தி வீடுகளை இடிக்கும் நிர்வாகத்தின் முடிவு சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)