கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: சட்டப்பேரவையில் 2-வது நாளாக அமளி - அதிமுக குற்றச்சாட்டும் அமைச்சர் பதிலும்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 53பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுககியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக இன்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய நிகழ்வு எதிரொலித்தது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக வெளிநடப்பும் குற்றச்சாட்டும்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கள்ளக்குறிச்சி நிகழ்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது. அதனை நிராகரித்த சபாநாயகர், பூஜ்ஜிய நேரத்தில் அவகாசம் தருவதாக கூறினார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி நிகழ்வு குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அப்பாவு அவகாசம் மறுத்துள்ளார். அரசாங்கம் மெத்தனமாக உள்ளது. தாமதமாக சிகிச்சைக்கு வந்ததால் மக்கள் இறந்ததாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் இந்த கள்ளச்சாராய சோக நிகழ்வுக்கு என்ன காரணம்? அரசுதான் காரணம்." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அமைச்சர் ரகுபதி பதில்
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எதிர்க்கட்சியினர் இதை அரசியலாக்க நினைக்கிறார்கள், கேள்வி நேரத்தின் போது அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பூஜ்ஜிய நேரத்தில்தான் கேள்விகளை எழுப்ப முடியும். அவர்கள் சபாநாயகரை 'கேரோ' செய்தனர். சபாநாயகரே எதிர்க்கட்சித் தலைவரிடம், நீங்கள் கூற விரும்புவதை இப்போது கூறலாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், சட்டசபைக்கு உள்ளே எதுவும் பேசாத அவர், வெளியே வந்து தனக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறுகிறார்.
எதிர்க்கட்சிகளை அவைக்கு வந்து என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று முதல்வரும் வேண்டுகோள் விடுத்துள்ளார், ஆனால் எதிர்கட்சியினர் அவைக்கு வர மறுத்துவிட்டனர், சட்டசபைக்குள் எதுவும் பேசவில்லை. விளம்பரத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள் ஆனால் அது சரியல்ல. அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது." என்று தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று துவங்கிய நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடக்க இருந்தது. இதற்காக நேற்று காலை அவை தொடங்கியதும் வழக்கமான அலுவல்கள் தொடங்கின.
முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவைக்கு கருப்புச் சட்டையுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்களும், பா.ம.க எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைவுக்கு வந்திருந்தனர்.
பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எழுதப்பட்டிருந்த காகிதத்தை காண்பித்து அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க-வினரை அமைதியாக இருக்கக் கூறியபோதும் அவரது இருக்கைக்கு முன்பாகச் சென்று அ.தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற முயலும் போது காவலர்களுக்கும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான ஆர்.பி. உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுகண்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினர்.
சஸ்பெண்ட் ஆன அ.தி.மு.க உறுப்பினர்கள்
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து பா.ம.க, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்கப் பேரவையில் அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
“கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை” என்றார்.
ஆரம்பத்தில் உயிரிழந்த 3 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தனர் என்ற உண்மையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன்குமார் தொடக்கத்திலேயே வெளியிட்டிருந்தால் அதிக உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும், அரசின் தூண்டுதலின்பேரில் ஆட்சியர் பொய் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
கேள்வி நேரத்திற்குப் பிறகு, கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக விவாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், சட்டப்பேரவை விதிகளை மீறி அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் அவை நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
முதலமைச்சர் பேசியது என்ன?

இதனிடையே கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
மேலும், கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்றும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.5,000, அவர்கள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் அ.தி.மு.க-வினர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார் மு.க.ஸ்டாலின்.
இதை ஏற்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப்பெறுவதாக அப்பாவு அறிவித்தார். ஆனால் அவை நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாகக் கூறி அ.தி.மு.க-வினர் புறப்பட்டுச் சென்றனர்.

கவன ஈர்ப்புத் தீர்மானம்
முன்னதாக, சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
பா.ஜ.க சார்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இது கல்வராயன் மலைப்பகுதியில் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது,” என்றார்.
"கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே இது போல மெத்தனால் குடித்து பலர் உயிரிழந்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்குள் மெத்தனால் எங்கிருந்து வருகிறது என காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால் தி.மு.க அரசு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறி இருக்கிறது," என்று பேசினார்.
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கினால் இத்தகைய மரணங்களைத் தவிர்க்கலாம் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார். காலை 6 மணி முதல் 12 மணி வரை கள் இறக்க அனுமதித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும், மேலும் விவசாயிகளும் பலனடைவார்கள், என்று தெரிவித்தார்.
பா.ம.க சார்பாகப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்திற்கு விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் நடந்துள்ளது,” என்றார். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் காவல் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற கடைகள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியாதா, என்று கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசின் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார். சுய உதவிக்குழுக்கள் மூலம் கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கு பதிலளித்த பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கருத்துகளைத் தெரிவித்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். "எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம், ஆனால் அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்," என்றார்.
"முதலமைச்சர் என்கிற முறையில் கள்ளக்குறிச்சி பிரச்னையில் பொறுப்போடு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு இரும்புக்கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்,” என்றார்.
அ.தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதை மக்கள் மறந்துவிடவில்லை என்றும் தனது உரையின் போது முதலமைச்சர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












