ஹஜ் யாத்திரையில் தொடரும் உயிரிழப்புகள் - சௌதி அரேபியாவில் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்?

ஹஜ் பயண உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹஜ் யாத்ரீகருக்கு காவலர் உதவுகிறார்.

இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 20-ம் தேதியே ஆயிரத்தை கடந்துவிட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது. அவர்களில் 98 பேர் இந்தியர்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர். இது தவிர, எகிப்தைச் சேர்ந்த 658 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான பயணிகளும் இறந்துள்ளதாக சௌதி அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.

பாகிஸ்தான், மலேசியா, ஜோர்டான், இரான், செனகல், துனிசியா, சூடான் நாடுகளின் அரசுகளும் ஹஜ் யாத்திரை சென்ற தங்கள் குடிமக்கள் சிலர் இறந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. நடப்பாண்டில் சுமார் 18 லட்சம் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர் என்று சௌதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர்களில் 187 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரையின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதீத வெப்பம், கூட்ட நெரிசல், வயதான யாத்ரீகர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஹஜ் பயணம் செல்லும் யாத்ரீகர்கள் அங்கு என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், ஹஜ் செய்யும் போது ஒருவர் இறந்தால் என்ன நடக்கும், இந்தாண்டு தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் சென்றவர்கள் கூறுவது என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹஜ் புனித யாத்திரை

ஹஜ் புனித யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக ஹஜ் கருதப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திறன் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் இந்த யாத்திரையை மேற்கொள்வது கடமை அல்லது கட்டாயம் என்று நம்பப்படுகிறது.

இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சௌதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.

`ஹஜ்’ என்பது அரபு நாட்காட்டியின் இறுதி மாதமான சில்ஹஜ்ஜுக்கு வழங்கப்படும் பெயர். அந்த மாதத்தின் எட்டு முதல் பன்னிரண்டாம் தேதி வரை ஹஜ்ஜின் முதன்மையான சடங்குகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.

ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சில சடங்குகளை கடைபிடிக்க வேண்டும். ஹஜ்ஜுக்கான குறிப்பிட்ட ஆடைகளை அணிவது, சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே நடப்பது, காபாவை சுற்றி வருவது, அராபத் சமவெளியில் தங்குவது, சாத்தான் மீது கற்களை எறிவது, பலி கொடுப்பது, மொட்டையடிப்பது மற்றும் மெக்காவை சுற்றி வருவது ஆகியவை இதில் அடங்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

ஹஜ் பயண உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மினா நகரில் மயங்கி விழுந்த ஹஜ் யாத்ரீகருக்கு பேட்டரி மின்விசிறி மூலம் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முயற்சிக்கும் பெண்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த வருடம் 1,75,000 இந்தியர்கள் ஹஜ் யாத்திரைக்காக சௌதி அரேபியா சென்றுள்ளனர். இதில் இதுவரை 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உடல்நலக் கோளாறுகள், இயற்கை காரணங்கள், நாள்பட்ட நோய்கள் மற்றும் வயோதிகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மே 9 முதல் ஜூலை 22 வரை, ஹஜ் யாத்திரையின் முக்கிய காலகட்டம். சௌதியின் ஜெட்டா நகரில் உள்ள 'இந்திய ஹஜ் மிஷன்' சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, நாங்கள் உடனடியாக இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்து என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்”, என்று கூறினார்.

ஹஜ் பயண உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்விற்காக முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு செல்லும் யாத்ரீகர்கள்

இது குறித்து பேசிய தமிழ்நாட்டின் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஜ் செய்கின்ற போது மக்கா, அராபத், மினா ஆகிய இடங்களில் இவர்கள் இயற்கை எய்தி உள்ளனர். அவர்கள் அனைவரையும் சௌதியில் அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்." என்று கூறினார்.

தமிழக அரசின் தகவல் படி,

1.ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 73 வயதான ரசிக்க பீவி

2. திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 73 வயதான மைத்தீன் பாத்து

3. சென்னையை சார்ந்த 40 வயதான நசீர் அஹமது

4.கரூர் மாவட்டத்தை சார்ந்த 72 வயதான லியாக்கத் அலி

5. தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 75 வயதான அப்துல் வாஹித்

6. கடலூர் மாவட்டம், லால்பேட்டை சார்ந்த 64 வயதான அப்துல் ரஹீம் இக்பால்

7. மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த 54 வயதான பரீதா பேகம் ஆகிய 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹஜ் பயண உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கூறுவது என்ன?

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மூலமாக ஜூன் மாத தொடக்கத்தில், தனது கணவருடன் முதல் முறையாக ஹஜ் பயணத்திற்கு சென்றார் பர்வீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சௌதி அரேபியாவிலிருந்து தொலைபேசி மூலம் பிபிசி தமிழிடம் தமது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

"சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்விற்காக முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு பயணம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட 10 கி.மீ தூரம், 50-52 செல்சியஸ் வெயிலில் லட்சக்கணக்கானோர் நடந்து சென்றோம். அதீத வெப்பத்தால், பலரும் கண் முன்னே சுருண்டு விழுந்து இறந்தார்கள். என்னால் அந்தக் காட்சியை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது" என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பர்வீன்.

ஹஜ்ஜின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று சாத்தான் மீது கற்களை எறிவது ஆகும். முஸ்தலிஃபாவிலிருந்து வரும் யாத்ரீகர்கள் மினாவிற்கு ஏழு கூழாங்கற்கள் அல்லது சிறிய கற்களைக் கொண்டு வருவார்கள். அங்கு சாத்தானின் பெயரில் 'படா ஜமாரத்' எனப்படும் அடையாளச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

யாத்ரீகர்கள் தாங்கள் கொண்டு வந்த ஏழு கற்களை அந்த சுவரில் வீசுவார்கள். இதற்காக யாத்ரீகர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்வார்கள்.

"இந்தப் பகுதியில் அதீத வெப்ப அலை இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே முடிந்தளவு தண்ணீரையும், பழங்களையும் வைத்திருந்தோம். ஆனால் முஸ்தலிஃபா- மினா இடையிலான பயணத்தில் நிழலுக்கு ஒதுங்கக் கூட இடம் இல்லை. முறையான கழிப்பறை வசதிகளும் இல்லை. சரி ஏதேனும் வாகனத்தில் செல்வோம் என்றால், அதற்கும் சௌதி அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

ஆங்காங்கே காவலர்கள் நிற்கிறார்கள், சுருண்டு விழுபவர்களுக்கு பெயருக்கு முதலுதவி செய்து விட்டு, அவர்களது உடலை ஓரமாக கிடத்தி விடுகிறார்கள். உயிர் பிழைத்து முகாமுக்கு திரும்பினால் போதும் என்று இருந்தது" என்கிறார் பர்வீன்.

ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி அனைவரையும் அலட்சியமாக நடத்தும் சௌதி அதிகாரிகள், கூட்ட நெரிசலில் யாரேனும் காணாமல் போனால் கூட உதவுவதில்லை என்கிறார் பர்வீன்.

"காபாவைச் சுற்றிவரும் போது என்னுடன் சேர்ந்து வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் காணாமல் போய்விட்டார். காவலர்களிடம் உதவி கேட்டபோது, கோபமாக ஏதோ சொல்லி, விரட்டி விட்டார்கள். பின்னர் என் கணவரும், அந்தப் பெண்ணின் கணவரும் சேர்ந்து எங்கெங்கோ அவரைத் தேடி, மீட்டுக் கொண்டு வந்தனர்" என்கிறார் பர்வீன்.

'மோசமான தங்கும் வசதிகள்'

பட மூலாதாரம், Getty Images

'மோசமான தங்கும் வசதிகள்'

பிபிசி தமிழிடம் பேசிய, இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹஜ் பயணி அகமது கரீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "திறந்த வெளியில் பல கூடாரங்களை அமைத்து, குறுகிய இடத்தில் பலரை தங்க வைக்கின்றனர். அவற்றில் போதுமான குளிர்சாதன வசதிகளும் இல்லை. சுகாதாரத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு முறையும் அதிக தூரம் நடந்துவிட்டு வந்து, கூடாரத்தை அடைவதே பெரும் போராட்டமாக இருக்கும்" என்கிறார்.

முஸ்தலிஃபா- மினா பயணத்தின் போது ஒரு ஆம்புலன்சைக் கூட பார்க்க முடியவில்லை என்றும், பலரும் சுருண்டு விழுந்து இறந்தபோது கூட அங்கிருந்த காவலர்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கூறுகிறார் கரீம்.

"இரண்டாம் நாள் சாத்தான் மீது கல்லெறிந்து விட்டு திரும்பிய போது, அருகில் இருந்த கூடாரத்தில் நுழைந்த சென்னையைச் சேர்ந்த நசீர் அஹமது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவர் தனது மனைவியுடன் ஹஜ் பயணம் வந்திருந்தார். சௌதியில் அவரது உடலை அடக்கம் செய்ய நசீரின் மனைவி சம்மதம் தெரிவித்திருந்தார். அதற்கான இறுதி தொழுகைக்கு கூட எங்கள் எல்லோரையும் வரச் சொல்லி கண்ணீருடன் வேண்டினார்.

ஆனால் சௌதி அரசு அடக்க நேரத்தை முறையாக தெரிவிக்காமல், அவரது கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு, உடனே இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டது. எங்களால் நசீருக்கான இறுதித் தொழுகையில் கூட கலந்து கொள்ள முடியவில்லை" என்கிறார் கரீம்.

தொடர்ந்து பேசிய கரீம், "மதக் கடமைக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகிறார்கள். ஆனாலும் சௌதி அரசு பல விஷயங்களில் தொடர்ந்து கவனக்குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. வருங்காலத்தில் இது போல நடக்காமல் இருக்க அவர்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்கிறார்.

சௌதி அரசாங்கம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சௌதி அரசாங்கம் கூறுவது என்ன?

ஹஜ் செய்ய, ஒரு யாத்ரீகர் சிறப்பு ஹஜ் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் சௌதி அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் மீறி சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்ல முயற்சிக்கின்றனர் என்று சௌதி அரசு கூறுகிறது.

முறையான ஆவணங்கள் இல்லாத யாத்ரீகர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் போது கூட அதிகாரிகளைத் தவிர்க்கின்றனர் என்றும், அதீத வெப்ப அலை மற்றும் வயோதிக காரணங்கள் தவிர்த்து, இந்த 'அதிகாரப்பூர்வமற்ற ஹஜ்' பிரச்னை தான் அதிகப்படியான இறப்புகளுக்கும், கூடாரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கும் காரணம் என்றும் சௌதி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹஜ் யாத்ரீகர்களின் நலனை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சௌதி சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

"189 மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் 6,500 படுக்கைகள் மற்றும் 40,000க்கும் மேற்பட்ட மருத்துவ, தொழில்நுட்ப, நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட 'மொபைல் கிளினிக்குகள்' தயார் நிலையில் உள்ளன" என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் செய்யும் போது ஒருவர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்?

அல்-பாகி அடக்கஸ்தலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவில் உள்ள அல்-பாகி அடக்கஸ்தலம் முஹம்மது நபியால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹஜ்ஜின் போது இறந்து, புனித நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டால், அதை ஒரு பாக்கியமாக பல முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஹஜ் செய்யும் போது ஒரு யாத்ரீகர் இறந்தால், அவரது மரணம் ஹஜ் மிஷனுக்கு தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மணிக்கட்டு பேண்டுகள் (Wrist bands) அல்லது கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் அடையாள அட்டைகளை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.

பின்னர், அதிகாரிகள் மருத்துவரின் சான்றிதழைப் பெறுகிறார்கள். அதன் அடிப்படையில் சௌதி அரேபிய அரசு இறப்புச் சான்றிதழை வழங்குகிறது.

மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் அல்லது மதீனாவில் உள்ள நபி மசூதி போன்ற முக்கியமான மசூதிகளில் இறுதிச் சடங்குகள் நடக்கும். உடலைக் கழுவி, துணிகள் போர்த்தி, சௌதி அரசாங்கத்தால் வழங்கப்படும் ஃப்ரீசரில் (Freezer) வைக்கிறார்கள். இறுதிச் சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் சௌதி அரசு ஏற்றுக்கொள்கிறது.

அடக்கம் செய்யும் முறை என்பது எளிமையானது. அடையாளக் குறியீடுகள் இல்லாமல், சில நேரங்களில் ஒரே இடத்தில் பல உடல்கள் அடக்கம் செய்யப்படும். யாரெல்லாம் புதைக்கப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் அரசு பதிவேட்டில் இருக்கும். எனவே குடும்பங்கள் விரும்பினால் அடக்கஸ்தலங்ளை பார்வையிடலாம்.

"பல்வேறு குழுக்கள் மற்றும் ரெட் கிரசன்ட் (Red Crescent) ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்படும் இறுதிச் சடங்குகளால், கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய முறையில் ஒருவர் அடக்கம் செய்யப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று சௌதி அரசாங்கம் கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)