ஜெயிலர்: ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் ஏன்? வசூலில் இன்றைய 'சூப்பர் ஸ்டார்' யார்?

பட மூலாதாரம், SUN PICTURES/ TWITTER
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் ரஜினி கதாநாயகனாக நடிக்கும் ஜெயிலர் படத்தில் எழுத்தாளர் சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் இசையமைத்து வெளியாகியுள்ள பாடல்தான், ‘ஹூக்கும்… டைகர்கா ஹூக்கும்…’
பாடல் வெளியான போது, அதில் இருந்த, ‘உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்… உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்…
பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..’ என்ற வரிகள் பேசுபொருளாக இருந்தது. இந்த வரிகளின் மூலம் யாரைக் குறிப்பிடுகிறார் ரஜினி என பல தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, வெள்ளியன்று (ஜூலை 28) நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா-கழுகு கதையால் சமூக வலைத்தளங்களில் அதகளமாகியுள்ளது.
ரஜினி சொன்ன குட்டிக் கதை என்ன ?
விழாவில் பேசிய ரஜினி, "காட்டில் சின்ன மிருகங்களெல்லாம் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். இப்போ, உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுக சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவுமே அமைதியாக இருக்கும். பறக்கும் போது கழுகப் பார்த்து காக்கா உயரமாப் பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால் முடியாது. ஆனால், கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்தில் பறந்துக்கிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி மெளனம் தான்!. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்னை இப்போ இல்ல 1977ல் ஆரம்பிச்சிருச்சு. அப்போ எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் கேட்ட போது நானே வேண்டாம் என்று சொன்னேன்.
ஏனென்றால், அப்போது கமல் ரொம்ப பெரிய உயரத்தில் இருந்தார். சிவாஜியும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்தார். அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், ரஜினி பயந்துவிட்டார் என்று சொன்னார்கள். நாம் பயப்படுவது இரண்டே பேருக்குத் தான். ஒன்று அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுவதில்லை. இதுக்கு அப்புறம் இதை கேட்டவுடனே சோஷியல் மீடியால `அவர காக்கானு சொல்லிட்டாரு. இவர கழுகுனு சொல்லிட்டாருனு போடாதீங்க." என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான சண்டையா ?

பட மூலாதாரம், SUN PICTURES/ INSTAGRAM
பாடல் மூலமாகவும், குட்டிக்கதை மூலமாகவும் நேரடியாக எந்த நடிகரையும் படக்குழுவோ ரஜினியோ குறிப்பிடாத போது, அது விஜயை நோக்கிய விமர்சனம்தான் என்கிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.
“எப்போதும் ஊக்கமளிக்கும் வகையில் குட்டிக்கதை கூறும் ரஜினி இந்த முறை ஏன் அவர் தன்னுடன் பறக்கும் சக பறவையை வைத்து கதை சொல்ல வேண்டும் என்ற கேள்வி தானாக எழுகிறது. அவர் நிச்சயம் விஜயைத்தான் குறிவைத்து சொல்கிறார். அதுவும் அவர் சொல்லும் காலம் ரொம்ப முக்கியமானது,” என்றார் பிஸ்மி.
தொடர்ந்து பேசிய பிஸ்மி, “தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், ரஜினி தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம், ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், வெற்றிப்படங்களை கொடுக்கும் நடிகராகவும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் நம்பர் ஒன் நடிகராகவும் விஜய் இருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், ரஜினி இவ்வாறு பேசியிருக்கிறார்,” என்றார் பிஸ்மி.
மேலும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசுகையில், “அப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது தனக்கு விருப்பம் இல்லையென்றால், அவர் படங்களில் அதனை தவிர்க்க சொல்லிவிடலாமே. நடிகர் சொல்லி, அதுவும் ரஜினி சொல்லி தயாரிப்பாளர்கள் மறுக்கவா போகிறார்கள் அஜித்தை ஒரு காலத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்று குறிப்பிட்டு வந்தோம், அவர் வேண்டாம் என்ற பிறகு யாரும் அப்படி அவரை அழைப்பதில்லை.
ஆனால், ரஜினிக்கோ அது விருப்பமாக இருக்கிறது. ஆனால், அவர் பொது வெளியில் மட்டும் சூப்பர் ஸ்டார் பட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லாததுபோல பேசுகிறார்,” என்றார் பிஸ்மி.

பட மூலாதாரம், SUN PICTURES/ TWITTER
விஜய் ரசிகர்களின் கோபம் என்ன?
சமூக வலைத்தளங்களில் இவை பேசு பொருளாக மட்டுமல்லாமல், மோதலாகவும் மாறியுள்ளது குறித்து விஜய் நற்பணி மன்றத்தினரிடம் பேசிய போது, ரஜினி பேசியதில் தவறு எதுவும் இருப்பதாக பார்க்கவில்லை என்றும், ஆனால், அவர் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள்தான் அர்த்தம் கற்பிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
“எல்லா காலங்களிலும் ரஜினியோ விஜயோ தங்களது இசை வெளியீட்டு விழா மற்றும் மேடைப்பேச்சுக்களில் குட்டிக்கதை சொல்வது வழக்கம் தான். அப்படித் தான் நாங்கள் இதை பார்க்கிறோம். ஆனால், ரஜினி ரசிகர்கள் தான் இதனைத் திரித்து, விஜயை குறிப்பிட்டதை போல பேசுகிறார்கள். அப்படி பேசுவதால், எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறி எதிர்வினையாற்ற வேண்டிய இடத்தில் நாங்கள் உள்ளோம்,” என்றார் விஜய் நற்பணி மன்ற பேச்சாளர் ராம்.
மேலும் பேசிய அவர், களத்தில் உண்மையாகவே விஜய் ரஜினியை தாண்டி சென்றுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ரஜினி ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக சொல்கிறார் ராம்.
“ரஜினி மீது எங்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உள்ளது. ஏன் எங்கள் தளபதியே (விஜய்) ரஜினி நடித்த படத்தில் வரும் வசனத்தை தன் தந்தையிடம் பேசி காண்பித்து தான் நடிக்க வந்ததாகவும், ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் அவரே பல முறை பல பொது மேடைகளில் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது இருக்கும் சூழலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகராகவும், வெற்றிப்படங்களை கொடுக்கும் நடிகராகவும் தளபதி இருப்பதை ரஜினி ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி பேசி வருகிறார்கள். அவர்கள் மூத்தவர்கள் என்பதால், எங்களால் அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியவில்லை,” என்றார்.
மேலும், விஜய்க்கு தளபதி பட்டமே போதும் என்றும், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரசிகர்களே திரையில் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்றும் கூறினார் ராம்.

பட மூலாதாரம், SUN PICTURES/ TWITTER
எப்போது துவங்கியது இந்த மோதல்?
சூப்பர் ஸ்டார் பட்டத்தில் துவங்கிய மோதல் இல்லை என்றும், இது ‘பீஸ்ட்’ படம் வெளிவந்ததில் இருந்து இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான ஆஷா மீரா அய்யப்பன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பீஸ்ட் படம் வசூல் ரீதியாக நன்றாக இருந்தாலும், படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீது ரசிகர்களுக்கு கோபம் இருந்தது. அந்த கோபம்தான் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்குகிறார் என்றதும், அது நெல்சன் மீதான கோபம், ரஜினி பக்கமும் கொஞ்சம் மாறியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினியே இசை வெளியீட்டு விழாவில் பேசியிருப்பார். ‘பீஸ்ட்’ படம் சரியாக போகாதது குறித்து தயாரிப்பாளர் குழுவிடம் அவர் பேசியதாகவும், பட விமர்சனம் சரியில்லை என்றாலும் வசூல் ரீதியாக நன்றாக இருந்ததாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பு தெரிவித்ததாக ரஜினி பேசியிருப்பார்”என்றார் ஆஷா.
கோபத்திற்கான ஆரம்பப்புள்ளி படத்தின் விமர்சனங்களாக இருந்தது, பின்னாளில், இயக்குனர் நெல்சன் நடிகர் விஜயை மதிக்கவில்லை என்பதாக மாறியதாக கூறுகிறார் ஆஷா.
“பீஸ்ட் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் சிலர் விஜய் வந்த பிறகுதான் நெல்சன் வருவார் என்று விளையாட்டாக பேசினர். அப்போதே அது ரசிகர்கள் மத்தியில் மரியாதைக் குறைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மீதான விமர்சனம் எதிர்மறையாக இருந்ததும், அது கோபமாக மாறியது. அதனால்தான், தற்போது ‘ஜெயிலர்’ படத்திற்கு ரஜினி மீது தங்கள் கோபத்தை காண்பிக்கிறார்கள், விஜய் ரசிகர்கள்,” என்றார் ஆஷா.
"ரஜினி எப்போதும் தன்மையானவர்"

பட மூலாதாரம், SUN PICTURES/ TWITTER
இந்த ரஜினி, விஜய் ரசிகர்களின் சண்டை குறித்து நம்மிடம் பேசிய எழுத்தளார் அதிஷா, திரைத்துறையில் எப்போதும் ரஜினிக்கு எதிராக ஒருவர் இருந்துகொண்டே இருந்ததாகவும், அது குறித்து அவர் எப்போதும் கவலை கொண்டதாக தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
“தற்போது நடந்துகொண்டிருப்பது வீண் மோதல். உண்மையில் ரஜினியோ விஜயோ அப்படி கருதி இருந்தாலோ பேசியிருந்தாலோ, இந்த சண்டையில் அர்த்தமுள்ளது. மற்றபடி, இப்போது மட்டுமில்லை. ரஜினி நடிக்கத் துவங்கிய காலத்தில் இருந்தே அவருக்கு எதிராக ஒருவரை நிறுத்திக்கொண்டேதான் இருந்தனர். அது ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருந்தது, அந்த மாற்றத்தில் தற்போது விஜய் இருக்கிறார். அவ்வளவுதான்,” என்றார் அதிஷா.
மேலும் பேசிய அவர், “ரஜினியை நாம் எப்போதும் தன்மையானவராகத்தான் பார்த்திருக்கிறோம். எவ்வளவு சிறிய நடிகராக இருந்தாலும், அவர்களின் படம் நன்றாக இருந்தால், அவராகவே அழைத்து பாராட்டியிருப்பதையும் பார்த்திருக்கிறோம். விஜயையும் அவர் அப்படித்தான் பார்க்கிறார். விஜய் தன்னைவிட வளர்ந்தால், அதனை ரஜினி பாராட்டத்தான் போகிறார்,” என்றார் அதிஷா.
உண்மையில் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்?

பட மூலாதாரம், Getty Images
ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் மோதலில் மையம்கொண்டிருப்பது யாருக்கு அதிகம் வசூலாகிறது, யார் படம் வெற்றிப்படங்களாக இருக்கிறது என்பதே. வசூல் குறித்தும், படத்தின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் தெரிந்துகொள்ள தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியத்திடம் பேசினோம்.
அப்போது அவர், “ எந்த நடிகருக்கும் இங்கு நிரந்தரமான வெற்றி கிடையாது. படமும் கதையும் நன்றாக இருந்தால், மக்களுக்கு பிடித்திருந்தால் படம் ஓடும். மற்றபடி, நடிகர்கள் உச்சத்தில் இருந்தால், படங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பதில் உண்மையில்லை. எம்.ஜி.ஆர்., உச்சத்தில் இருந்தபோது வெளியான படங்கள் தோல்வியடைந்துள்ளன, விஜய் உச்சத்தில் இருக்கும்போது வெளியான ‘சுறா’ படம் தோல்வியடைந்துள்ளது, ரஜினி உச்சத்தில் இருந்தபோது வெளியான ‘பாபா’ படம் தோல்வியடைந்துள்ளது. அதேபோல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கமலின் ‘விக்ரம்’ படம் வெற்றியடைந்தது. அதனால், எல்லாம் கதையைப் பொருத்தது மட்டுமே,”என்றார் சுப்பிரமணி.

பட மூலாதாரம், SR PRABHU/TWITTER
இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறுகிறார். “ஒவ்வொரு நடிகரும் அவரவர் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளனர். அதேபாேல, ஒவ்வொரு படத்திற்கும், வெளியீட்டு தேதி, கதை, உள்ளடக்கம், போட்டி உள்ளிட்டவை அடிப்படையில் மதிப்பு மாறுபடும்,”எனக் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












