லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு வென்ற 11 துப்புரவுப் பணியாளர்கள்

கேரளா லாட்டரி

பட மூலாதாரம், ARUN CHANDRABOSE

படக்குறிப்பு, மாநகராட்சியின் கீழ் உள்ள ஹரித கர்மா சேனா பணியாளர்களான ராதாவுடன் பணிபுரியும் பெண்களிடம் ஒரு டிக்கெட்டின் விலையான 250 ரூபாய் கூட இல்லை
    • எழுதியவர், பி. சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் மழைக்கால லாட்டரியில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் இணைந்து ரூ.10 கோடி பரிசு வென்றுள்ளனர்

பரப்பனங்காடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஹரித கர்ம சேனா அமைப்பைச் சேர்ந்த, 11 பெண்கள், தங்களுக்குள் பணம் சேர்த்து ரூ.250க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்கடியில் உள்ள துப்புரவுப் பணியாளர் ராதா, தனது சக பணியாளர்கள் சிலரிடம் லாட்டரி சீட்டை வாங்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

கேரள அரசின் மழைக்கால பம்பர் 10 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு. ஆனால் மாநகராட்சியின் கீழ் உள்ள ஹரித கர்மா சேனா பணியாளர்களான ராதாவுடன் பணிபுரியும் பெண்களிடம் ஒரு டிக்கெட்டின் விலையான 250 ரூபாய் இல்லை.

அந்தத் தொகையை 11 பேருக்கும் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்தனர். அவர்களில் ஒன்பது பேர் தலா ரூ. 25 ஆகவும், இரண்டு பேர் தலா ரூ. 12.50 ஆகவும் விலை கொடுத்தனர். இறுதியாக, தங்களிடம் இருந்ததைக் கூட்டி, ஒரு லாட்டரி ஏஜெண்டிடம் 250 ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்போன் அழைப்பு

கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் ரூ.10 கோடி மழைக்கால லாட்டரியை வென்றுள்ளனர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குட்டிமாலு மற்றும் பேபி இருவரும் டிக்கெட் வாங்க தலா ரூ.12.50க்கு கொடுத்துள்ளனர்.

ஜூலை 27, வியாழன் அன்று முதல் பரிசு பெற்ற செய்தியுடன், செல்போனில், அழைப்பு வந்ததும் பெண்கள் ஆச்சரியமடைந்தனர்.

பெண்கள் குழுவால் வாங்கப்பட்ட நான்காவது பம்பர் லாட்டரி சீட்டு இது. கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் 1000 ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

குட்டிமாலு மற்றும் பேபி இருவரும் டிக்கெட் வாங்க தலா ரூ.12.50க்கு கொடுத்துள்ளனர்.

இருவரும் நம்மிடம் பேசும்போது, "நாங்கள் இருவரும் உறவினர்கள், குட்டிமாலுதான் எனக்கும் சேர்த்து பணம் கொடுத்தார். எனக்கு சம்பளம் கிடைக்கும்போதுதான் என்னிடம் பணம் இருக்கும்.

அப்போதுதான் பணம் கொடுப்பேன். எப்பொழுதும் இன்ப, துன்பங்களை இருவரும் பகிர்ந்துகொள்வோம்," என்றார் அவர்.

மேலும், "அது ஒரு கேக்காக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி பகிர்ந்துகொள்வோம்,” என இருவரும் கோரசாக கூறினர்.

வரி செலுத்திய பிறகு, பெண்கள் 11 பேருக்கும், தலா ரூ.63.6 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

பணியைத் தொடர விரும்பும் பெண்கள்

லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு

பட மூலாதாரம், Dattes L.v

லடசக்கணக்கில் பணம் கிடைத்தாலும், துப்புரவுப் பணியாளர்களாக எங்களுடைய பணியைத் தொடர்ந்து செய்வோம் என்கிறார்கள் இந்தப் பெண்கள்.

"பரப்பனங்காடியை தூய்மையாக வைத்திருக்கத் தொடர்ந்து பாடுபடுவோம்" என ஒருமித்த கருத்தாகத் தெரிவித்தனர்.

“மலப்புரம் மாவட்டத்திலேயே, நாங்கள் தூய்மையான நகராட்சியாக உள்ளோம், அந்த அந்தஸ்தை தக்க வைக்கத் தொடர்ந்து எங்களது பணிகளைச் செய்வோம். எங்களைப் போலவே, மற்றவர்களும், லாட்டரியில் பரிசை வெல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

லாட்டரியை வென்றது பற்றிப் பேசுகையில், ஒருவர் சமீபத்தில் தனது மகளை இழந்துள்ளதாகவும், மற்றொருவரின் வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது, மேலும் இருவர் நோயிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்றார். அனைத்து பெண்களும் பல இடர்பாடுகளைக் கடந்துதான் வந்துள்ளனர்.

பரப்பனங்காடியை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றும், ஹரித கர்ம சேனாவைச் சேர்ந்த 11 தூய்மைப் பணியாளர்கள் தற்போது ரூ.10 கோடி லாட்டரியை வென்றுள்ளனர்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பரப்பனங்காடியை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றும், ஹரித கர்ம சேனாவை சேர்ந்த 11 தூய்மைப் பணியாளர்கள் தற்போது ரூ.10 கோடி லாட்டரியை வென்றுள்ளனர்

பரப்பனங்காடி பேரூராட்சித் தலைவர் ஏ.உஸ்மான் நம்மிடம் கூறுகையில், “பரப்பனங்காடியை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றும், ஹரித கர்ம சேனாவை சேர்ந்த 11 தூய்மைப் பணியாளர்கள் தற்போது ரூ.10 கோடி லாட்டரியை வென்றுள்ளனர்.

இங்கு பணிபுரியும் குழுக்களிலேயே, அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் லாட்டரியை வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

லாட்டரியில் வெற்றி பெற்றாலும், இங்கு பணியை நிறுத்த மாட்டோம் என்று கூறியது அவர்களின் அர்ப்பணிப்பின் அடையாளம். அவர்கள் வணங்கப்படக் கூடியவர்கள்," என்றார்.

லாட்டரியால் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக முடியுமா ?

விற்காத டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பரிசு விழுந்துள்ளது குறிபிடத்தக்கது என்கிறார் சமூக ஆர்வலர் சரவணக்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விற்காத டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பரிசு விழுந்துள்ளது குறிபிடத்தக்கது என்கிறார் சமூக ஆர்வலர் சரவணக்குமார்

லாட்டரி விற்பனை குறித்து, சமூக ஆர்வலர் கே .சரவணக்குமார் நம்மிடம் பேசும்போது, "அச்சடித்த லாட்டரிகளை, ஆன்லைனில் விற்கக்கூடாது என கேரளாவில் சட்டம் இருக்கிறது".

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் உள்ளவர்கள், கேரளாவில் உள்ள லாட்டரி வியாபாரிகளிடம் லாட்டரிகளை, வாட்ஸ் அப் மூலம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி அவர்கள் ஒரே டிக்கெட்டை, பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் விற்கின்றனர்.

பெரிய பரிசுத்தொகை விழுவதில்லை. ஒரு சில நேரங்களில் குறைவான பரிசுத்தொகை விழுந்தால், ஒரே சீரியலில், ஒரே எண்ணுள்ள, டிக்கெட்டுக்கு 20 பேர் வரை சண்டை போட்டுக்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது," என்றார்.

லாட்டரியால் அனைவரும் கோடீஸ்வரர்கள், ஆக முடியும் என்றால், "வாரத்திற்கு 7 கோடீஸ்வரர்கள், 70 லட்சாதிபதிகள் உருவாக முடியும்'. கடந்த நான்கரை ஆண்டுகளில் 232 வாரங்களில் 1624 கோடீஸ்வரர்கள், 16,240 லட்சாதிபதிகள் உருவாகியிருக்க முடியும். அவ்வளவு பேர் இதுவரை ஆனதில்லை. விற்காத டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பரிசு விழுந்துள்ளது குறிபிடத்தக்கது," என்றார்.

லாட்டரியில் நடக்கும் மோசடிகள்

லாட்டரி விற்பனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீரியல்களில் லாட்டரி டிக்கெட்கள் போலியாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது

இதுவொரு ஏமாற்று வேலை, வருடத்தில் ஒரு அதிர்ஷடசாலிக்கு பரிசு விழுந்திருக்கிறது என பேப்பரில் போட்டோவுடன் செய்தி வரும்.

மீதமுள்ள பரிசுகள் விற்கப்படாத டிக்கெட்டுகளுக்கானது. பரிசு எதுவும் வழங்கப்படாது என லாட்டரி முகவர்களே ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "லாட்டரி விற்பனை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், லாட்டரி டிக்கெட்கள் உள்ளிட்ட அனைத்திலும் எளிதாக ஏமாற்ற முடிகிறது. லாட்டரி விற்பனை மத்திய அரசின் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதில்லை.

லாட்டரிகள் விற்பனை செய்ய விற்பனை ஏஜென்சிகள் உள்ளன. சீரியல்களில் லாட்டரி டிக்கெட்கள் போலியாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டாலும், தொடர் கதையாகத்தான் இருப்பதாகவும்" அவர் குற்றம் சாட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: