மணிப்பூர் பெண்கள் வைரல் வீடியோ வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கிய உத்தரவுகள் என்ன?

பட மூலாதாரம், ANI
மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் நாட்டையே உலுக்கிய வீடியோ தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநில காவல்துறையின் விசாரணையை 'மெதுவானது' மற்றும் 'மிகவும் மந்தமானது' என்றும் உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மீதான கட்டுப்பாட்டை காவல்துறை முற்றிலும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இதற்காக மணிப்பூர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
"மணிப்பூரில் அரசு செயலிழந்துவிட்டது"
மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை தொடங்கியது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது அணிவகுப்பு தொடர்பான வீடியோ 'மிகவும் கவலையளிக்கிறது' என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
பி.டி.ஐ. செய்தி முகமை அறிக்கையின்படி, இந்த வழக்கில் வழக்கமான எப்ஐஆர் தேதி குறித்த தகவல்களை வழங்குமாறு மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 6000க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் அறிக்கைகளில் எத்தனை பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன, அவர்களை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
"விசாரணை செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது, எஃப்ஐஆர்கள் தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன, கைது செய்யப்படவில்லை, அறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன" என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது.

பட மூலாதாரம், Getty Images
பூஜ்ய எஃப்.ஐ.ஆர். பதிவு - அரசு தரப்பு பதில்
"இந்த வீடியோ வெளியான பிறகு, மணிப்பூரில் இனக்கலவரத்தை எதிர்த்துப் போராடும் பதற்றம் அதிகரித்தது. வீடியோ வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டது என்பது ஒன்று தெளிவாகத் தெரிகிறது." என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.
மே மாதத்தில் இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து மாநிலத்தில் 6,523 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்தது, இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண்கள் வைரல் வீடியோ வழக்கில் மாநில காவல்துறை பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது, அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யக்கூடிய எஃப்.ஐ.ஆர். ஜீரோ எஃப்ஐஆர் வழக்குகளில், வழக்கு பின்னர் சம்பவம் நடந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். இந்த வழக்கில் மணிப்பூர் காவல்துறை இதுவரை ஒரு சிறார் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக துஷார் மேத்தா கூறினார்.
குற்றங்கள் அடிப்படையில் வழக்குகளை வகைப்படுத்த ஆணை
"மே 3 முதல் பதிவு செய்யப்பட்ட 6,532 எஃப்ஐஆர்களில் 11 எஃப்ஐஆர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவை. இதுவரை 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,000 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்." என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
இந்த 6,500 எஃப்.ஐ.ஆர்.களில், கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களை ஒரு தொகுப்பாக்கி விசாரிக்க வசதியாக வகைப்படுத்துமாறு துஷார் மேத்தாவை கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம், "குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை கைது செய்ய நீங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்" என்று வினவியது. இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் காவல்துறை யாரேனும் கைது செய்யப்படுகிறார்களா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பிணவறைகளில் அழுகும் 118 பேரின் உடல்கள்
"மணிப்பூரில் எத்தனை இறந்த உடல்கள் உள்ளன? அவர்களின் அடையாளத்தை எவ்வாறு நிறுவுவீர்கள்? விரிவான புனர்வாழ்வு தொகுப்பு மற்றும் நிவாரண உதவிகளை எவ்வாறு வழங்குவீர்கள்." என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
118 பழங்குடியினரின் உடல்கள் பிணவறைகளில் அழுகிக் கொண்டிருக்கின்றன. குடும்பத்தினர் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கோலின் கோன்சால்வ்ஸ் குற்றம் சாட்டினார். "இறந்த உடல்களை சவக்கிடங்கில் பல நாட்கள் வைக்க முடியாது. இந்த இறந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டதா என்பதைப் பார்த்து, இழப்பீடு போன்றவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்." என்று துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
அங்குள்ள பள்ளிகள் என்றால் என்ன நிலைமைகள் என்பதையும் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிய விரும்பினார். மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்களா? என்ற அவரது கேள்விக்கு, "சுமார் 200 பழங்குடியினர் பள்ளிகள் உள்ளன, அவை அனைத்தும் மோதல் காரணமாக மூடப்பட்டுள்ளன" என்று கோன்சால்வ்ஸ் கூறினார்.
ஆக.7-ம் தேதி மணிப்பூர் டிஜிபி ஆஜராக உத்தரவு
இந்த வீடியோ வெளியானதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை மாநில காவல்துறை பதிவு செய்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் செவ்வாய்க்கிழமை விசாரணை முடியும் வரை பெண்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யக் கூடாது என மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேசவோ, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யவோ கூடாது என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மணிப்பூரி பெண்களின் வழக்கறிஞர் நிஜாமுதீன் பாஷா, இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்கிழமை மதியம் 2 மணிக்கு இருப்பதால், விசாரணைக்கு முன் தனது கட்சிக்காரரின் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் இருப்பது நல்லது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதி திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. அப்போது, மணிப்பூர் டிஜிபி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
மணிப்பூரில் பெண்களை வாட்டும் பிரச்சினை என்ன?
கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் திகிலூட்டும் வீடியோ ஜூலை 19ம் தேதி வெளிவந்தது.
ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேச வந்த பிரதமர் மோதி, மணிப்பூரில் நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு, தனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது என்றார். நாடு அவமதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி பேசியது அதுவே முதல் முறை.
மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசாதது குறித்து எதிர்க்கட்சிகள் நீண்ட நாட்களாக கேள்வி எழுப்பி வந்தன. இந்த காணொளியை உறுதி செய்து, மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் மே 4ஆம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மணிப்பூர் காவல்துறை கூறியுள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிட முயற்சிப்போம் என்று அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மே மாதம் முதல் நீடிக்கும் வன்முறையில் இதுவரை குறைந்தது 130 பேர் இறந்துள்ளனர் மற்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












