மணிப்பூர் வைரல் வீடியோ பற்றி இந்த மெய்தேயி பெண்கள் என்ன சொல்கிறார்கள்? - காணொளி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இச்சூழலில், மே மாதத்தில் இரண்டு குகி இன பெண்கள், அவர்களது கிராமம் அழிக்கப்பட்ட பிறகு மெய்தேய் சமூக ஆண்களால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தின் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது. ஒரு பகுதி மெய்தேய் சமூக மக்களிடமும் மற்றொரு பகுதி குகி சமூகத்தினரிடமும் உள்ளது.
கண்ணுக்குத் தென்படும் காட்சிகள், இந்த வன்முறை வாரக்கணக்கில் நீடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.

மெய்தேய் இன பெண்கள் கூறுவது என்ன?
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு சக்தி வாய்ந்த, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட மகளிர் அமைப்பான மெய்ரா பைபிஸ், அந்த மாநில சிவில் சமூகத்தில் பெண்களின் சக்திவாய்ந்த பங்கை உணர்த்துகிறது.
'தீப்பந்தம் ஏந்திய பெண்கள்', 'இமாஸ்' அல்லது 'மணிப்பூரின் மாதாக்கள்' எனப் பல பெயர்களில் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பினர் அரசு மற்றும் ராணுவத்தின் அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
தற்போது வெளியான வீடியோவில் காட்டப்பட்ட இரண்டு குகி பெண்களை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளை அவர்களுடைய கிராம மக்களே போலீசாரிடம் பிடித்துக் கொடுத்ததாக அந்த கிராமத்தில் மெய்ரா பைபிஸ் குழுவை வழிநடத்தும் சைனம் சர்னலதா லீமா கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டை எரித்த பெண்கள்
பின்னர் மெய்ரா பைபிஸ் குழுவின் உள்ளூர் உறுப்பினர்கள் ஒன்றுகூடி குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீட்டை எரித்தனர்.
"அந்த வீட்டை எரித்தது, அந்த நபர் செய்த கொடூரமான குற்றத்திற்கு, அவருடைய சமூகமே அளித்த தண்டனை. மெய்தேய் சமூகத்தின் மீது இருக்கும் மரியாதையை அந்த குற்றவாளிகளின் செயல்கள் கெடுத்துவிடக்கூடாது என்பதால்தான் அந்த வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது," என்று லீமா கூறுகிறார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், பெண்களை உயர்வாகக் கருதும் சமூகத்தில் அந்தக் கும்பல் ஏன் அப்படி நடந்து கொண்டது?
"குகி ஆண்களால் தாக்கப்பட்ட மெய்தேய் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோல் அந்த கும்பல் செயல்பட்டுள்ளது," என்று லீமா கூறுகிறார்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக அவருக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. மெய்தேய் பெண்கள் இதுபோன்ற அவமானகரமான விஷயங்கள் குறித்துப் பொதுவாக விவாதிப்பதில்லை.
தற்போதைய மோதலின் தொடக்கத்தில், மெய்தேய் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மாநில காவல்துறை கூறியுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் பல இடங்களில் நடந்ததாகவும், அவை குறித்து புகார் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும் மெய்தேய் சமூகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.
"எங்கள் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற கொடூரங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதன் மூலமோ அல்லது காவல்துறையில் புகார் செய்வதன் மூலமோ தங்கள் கண்ணியத்தை இழக்க விரும்புவதில்லை," என்கிறார் கோகோமி என்ற மெய்தேய் அமைப்பைச் சேர்ந்த குரைஜாம் அத்தூபா.
அவரது பார்வையில் பாலியல் வன்முறைகளில் கவனம் செலுத்துவதை விட, கொலைகளைத் தடுப்பதிலும், இடம்பெயர்ந்த மக்கள் பிரச்னையிலும் கவனம் செலுத்துவதுதான் சரி என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
லீமாவை பொறுத்தவரை, 60,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக மே மாதத்திலிருந்து தொடர்ந்து வரும் வன்முறைகளைப் புறக்கணித்துவிட்டு தற்போது பிரதமர் இப்படிப் பேசியிருப்பது தங்கள் சமூகத்தை அவர் கைவிட்டுவிட்டதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
"குகி பெண்கள் தாக்கப்பட்டபோது பிரதமர் பேசத் தொடங்கியுள்ளார். நாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பற்றி அவர் பேசவில்லை. மெய்தேய் பெண்களான நாங்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?" என அவர் கேட்கிறார்.
தொடரும் மணிப்பூர் வன்முறைகளை மீண்டும் அனைவரது கவனத்திற்கும் இந்த வீடியோ கொண்டு சென்றுள்ளது.
"இந்த வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால், அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்," என்கிறார் நர்சிங் மாணவி சீயின் சியான்ச்சிங். இதே கருத்தை, வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் ஆராய்ச்சியாளர் கிரேசி ஹாக்கிப்பும் ஆதரிக்கிறார்.
வன்முறைகளைக் கடந்து, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப பொதுமக்கள் முயலும்போது தங்களுடைய அனுபவங்களை தைரியமாகப் பகிர்ந்துகொண்ட உயிர் பிழைத்தவர்களுக்கு இது உதவும் என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













