ரூ.1,600 கோடி ஃபாக்ஸ்கான் முதலீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் உண்மை நிலை என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தைவானைச் சேர்ந்த மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வந்த செய்தி தவறு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன?
தைவானைச் சேர்ந்த மொபைல் உதிரிபாக நிறுவனமான ஃபாக்ஸ்கான் க்ரூப் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்வீட் மூலம் திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.
"ஃபாக்ஸ்கான் க்ரூப்பின் தலைவர் யங் லியுவையும் அவரது அணியினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான முதலீட்டு உத்தரவாதம் எனது முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
மின்னணு வாகனம், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய துறைகளில் கூடுதல் முதலீடு குறித்தும் விவாதித்தோம். ஆசியாவின் எலெக்ட்ரானிக் உற்பத்திக் கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்கும் லட்சியத்தில் இது ஒரு மைல் கல்" என்று அந்த ட்வீட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் “ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதும் விரிவாக்கம் செய்வதும் உலகம் முழுவதும் உள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியைத் துவங்க தமிழ்நாடே முதன்மைத் தேர்வாக இருப்பதைக் காட்டுகின்றன. இது மாநிலத்திற்கு மிகப் பெரிய சாதனை” என்று குறிப்பிட்டார்.
ஃபாக்ஸ்கான் ஏற்கனவே சென்னைக்கு அருகில் ஒரு தொழிற்சாலையை இயக்கிவரும் நிலையில், இந்தத் தொழிற்சாலை வேறொரு இடத்தில் அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர, தமிழ்நாட்டின் முதலீடு செய்வோருக்கு வழிகாட்டும் அமைப்பாகவும் உதவும் அமைப்பாகவும் இருக்கும் கைடன்ஸ், ஃபாக்ஸ்கான், சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து, ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திறன், புத்தாக்கங்களை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றுக்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டுள்ளன.
சீன இதழ் செய்தியால் சர்ச்சை ஏன்?
இந்த நிலையில்தான், ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக வந்த தகவல் பொய்யானது என சீனாவிலிருந்து வெளிவரும் Securities Times இதழை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
அந்தச் செய்திகளில் Foxconn Industrial Internet நிறுவனம் தமிழ்நாட்டில் எந்த முதலீட்டையும் செய்யவில்லையென்றும் இது போன்று தொடர்ந்து செய்திகள் வெளிவருவதாகவும் ஜூலை 19ஆம் தேதியே இதுபோன்ற செய்திகளை மறுத்ததாகவும் தற்போதும் இதுபோன்ற செய்திகள் வெளிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள செய்தி தளங்கள், ஃபாக்ஸ்கான் முதலீடு தொடர்பான தகவல்களை அந்த நிறுவனம் மறுப்பதாக செய்திகள் வெளியாயின.
ஆகவே, உண்மையிலேயே ஃபாக்ஸ்கான் நிறுவனம் புதிதாக 1,600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறதா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
இது குறித்து தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தரப்பிடம் கேட்டபோது, இது தொடர்பான செய்திகள் தவறாகப் பதிவுசெய்யப்படுவதாகக் குறிப்பிட்டனர். அதாவது, "தமிழ்நாட்டில் முதலீட்டு உத்தரவாதம் அளித்திருப்பது, Hon Hai Technology Group (FOXCONN) என்ற நிறுவனம். ஆனால், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், Foxconn Industrial Internet (FII) நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக தங்கள் செய்தியில் கூறின. இதையடுத்தே FII நிறுவனம், இதுபோல எந்த ஒரு முதலீட்டையும் செய்யவில்லை என மறுத்தது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருப்பது ஃபாக்ஸ்கான் குழுமத்தின் நிறுவனமான Hon Hai Technology Group. அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருப்பது உறுதி" என்று தெரிவித்தனர்.
மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியான வி லீ, இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
சர்ச்சைக்கு காரணமான தவறு எங்கே நிகழ்ந்தது?
இது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலர் கிருஷ்ணன், ஃபாக்ஸ்கான் குழுமம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது உறுதி என விளக்கினார். "இந்த முதலீடு தொடர்பான செய்திகளில் நிறுவனத்தின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுடன் முதலீடு செய்திருப்பது ஃபாக்ஸ்கான் க்ரூப். இது தைவானில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம். ஆனால், மறுப்புத் தெரிவித்திருப்பது Foxconn Industrial Internet நிறுவனம். இந்த நிறுவனம் சீனாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம். முதலீடு தொடர்பாக செய்தி வெளியிடும்போது, பல நிறுவனங்கள் FII இங்கே முதலீடு செய்வதாக செய்தியை வெளிட்டுவிட்டன. இதற்குக் காரணம், ஜூலை 20ஆம் தேதி FIIன் சிஇஓ பிராண்ட் செங் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்துப் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
அந்தச் செய்தியோடு இந்தச் செய்தி குழப்பிக் கொள்ளப்பட்டது. ஆகவே, இந்த முதலீடு குறித்து FIIயிடம் கேட்டபோது அவர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருப்பது ஃபாக்ஸ்கானின் Hon Hai Technology Group (FOXCONN) நிறுவனம். இந்த நிறுவனத்துடன், முதலீட்டு எண்ணத்தை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்த நிறுவனத்திற்கு, அரசின் சார்பில் என்னவிதமான சலுகைகளை எந்தெந்த கட்டத்தில் அளிப்பது என்பதற்கான structured pakaged asssistanceக்கான ஒப்பந்தம் செய்யப்படும். இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம்.
தற்போது முதல்கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, ஃபாக்ஸ்கான் குழும நிறுவனம் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வது உறுதி" என்று தெரிவித்தார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின் பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாநிலங்களுக்கு இடையில் இது தொடர்பான போட்டிகளும் நிலவுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












