என்.எல்.சி.: நிலக்கரிக்காக ஆற்றின் பாதையை திசைமாற்றுவது ஏன்?

- எழுதியவர், சாரதா.வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடலூர் மாவட்டத்தில் ஓடும் 3 முக்கிய ஆறுகளில் ஒன்றான பரவனாற்றின் பாதை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) விரிவாக்கப் பணிகளுக்காக மாற்றியமைக்கப்படுகிறது.
அதற்காக 12 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளுக்காக, விளைநிலங்களில் செழித்து வளர்ந்திருந்த பயிர்களை ஜே.சி.பி கொண்டு என்.எல்.சி நிர்வாகம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பரவனாறு கால்வாய் திட்டத்தை என்.எல்.சி. நிறுவனம் ஏன் மேற்கொள்கிறது? பரவனாற்றின் பாதையை மாற்றுவதற்கான அவசியம் என்ன வந்தது? விவசாயிகள் அதனை ஏன் எதிர்க்கிறார்கள்?
பரவனாறு தோற்றம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு (என்.எல்.சி) வட மேற்கில் அமைந்துள்ள செம்மக்கோட்டை காப்புக் காடுகளில் இருந்து பரவனாறு தோன்றுகிறது. மழைக்காலங்களில் மட்டும் நீர் இருக்கும் இந்த ஆற்றின் வடக்கே பெண்ணையாறு அமைந்துள்ளது. தெற்கிலும் மேற்கிலும் வெள்ளாறு சூழ, கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
இதற்கு 872.34 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. நெய்வேலி நகரம், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், கம்மாபுரம், வடலூர், கருங்குழி, காட்டுக்கூடலூர், வளையமாதேவி, எறும்பூர், குள்ளஞ்சாவடி, புவனகிரி ஆகிய வாழ்விடங்கள் இந்த ஆற்றுப்படுகையில் உள்ளன. இங்கே அமைந்துள்ள 16 குளங்கள் மூலம் 100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பரவனாற்றின் பாதை திருப்பிவிடப்பட்டது ஏன்?
பரவனாற்றின் படுகையில்தான் என்.எல்.சி அமைந்துள்ளது. சுரங்கம் 1, சுரங்கம் 1 A, சுரங்கம் 2 ஆகிய மூன்று சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. என்.எல்.சி., நிறுவனத்தின் சுரங்கம் 2 பகுதியில் பரவனாறு அமைந்துள்ளது.
அரசகுழி, முதனை, கொம்பாடிக்குப்பம், இருப்புக்குறிச்சி, நரிமணம், கோட்டேரின் ஆகிய கிராமங்களில் இருந்து வரும் மழைநீரும், நெய்வேலி நகரத்தில் இருந்தும் சுரங்கங்களிலும் மின் உற்பத்தி நிலையங்களிலும் இருந்து வரும் நீரும் பரவனாற்றில் சேர்கிறது. பருவ மழை காலங்களில் மழை நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ள அபாயம் எழுந்தது. எனவே பரவனாறு ஆழமும் அகலமும் செய்யப்பட்டு, இருபுறமும் கரைகள் உருவாக்கப்பட்டன.
ஆனால் சுரங்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போது, ஆற்றின் பாதையை தற்காலிகமாக மாற்றியமைத்திருப்பதாக என் எல் சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது தற்காலிக மாற்றுப்பாதைகளை தவிர்க்க நிரந்த மாற்றுப்பாதை அமைக்கும் பணிகளை என்.எல்.சி. மேற்கொண்டு வருகிறது.

புதிய கால்வாய் எங்கு செல்லும்?
பரவனாறு ஆற்றை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம். வாலாஜா ஏரிக்கு மேல் இருப்பது மேல் பரவனாறு, வாலாஜா ஏரியிலிருந்து பெருமாள் ஏரி வரையிலான பகுதி நடுப்பகுதியாகும். பெருமாள் ஏரியிலிருந்து வங்கக் கடலில் கலப்பது கடைசி பகுதியாகும்.
இதில் நடுப்பகுதியில் தான் புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. இதில் 10.5 கி.மீ நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி முடிந்து விட்டது. மீதமுள்ள 1.5 கி.மீ நீளத்தில் முடிக்கப்படாத பணிகளை மேற்கொண்ட போது தான் மேல் வளையமாதேவி பகுதியில் நெற் பயிர்கள் அழிக்கப்பட்டன.
பிபிசி தமிழிடம் என்.எல்.சி செய்தித் தொடர்பாளர் அப்துல் காதர் பேசும்போது, பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் கூடுதலான விவசாய நிலப்பரப்பிற்கு தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தார்.
“2015ம் ஆண்டு ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் , 12 கி.மீ நீள நிரந்தர கால்வாய் அமைக்க அனுமதி கொடுத்தது. கரிவெட்டி, மும்முடிச்சோழகன், ஆதனூர், வளைய மாதேவி வழியாக புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. வடிகால் நீர் பெருமாள் ஏரியை சென்றடையும். இதனால் தற்போதுள்ள 25 ஆயிரம் ஏக்கருக்கும் அப்பால் புவனகிரி வரை ஆண்டுக்கு 2 முதல் 3 பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும்” என்றார்.
கால்வாய் பணிகளால் பாதிக்கப்படும் நிலங்களுக்கு ஏற்கெனவே இழப்பீடு கொடுக்கப்பட்டு விட்டது. நிலத்தை எடுக்கும் காலம் வரை விவசாயிகள் பயிர் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் தடை ஏதும் கூறவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

சுரங்கத்துக்குள் வெள்ள அபாயம்
வளையாமாதேவியில் என் எல் சிக்கு நிலம் கொடுத்த விவசாயி ராமலிங்கம் கூறுகையில், “எனக்கு இருந்த ஒரு ஏக்கர் 27 செண்ட் நிலத்தை என் எல் சிக்கு கொடுத்துவிட்டேன். அந்த நிலத்தில் இன்னும் பதினைந்து நாட்களில் அறுவடை செய்திருக்க வேண்டிய பயிரையும் இழந்து விட்டேன். புதிய கால்வாய் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. எங்கள் வயல்கள் அதை விட உயரமானவை. அதிலிருந்து நேரடியாக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காது.” என்றார்.
மேலும், பரவனாற்றின் பாதையை மாற்றி புதிதாக நதி உருவாக்கம் செய்த பகுதியில் முழுமையாக வேலை முடியாமல் போனால், வரும் பருவமழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக என் எல் சி கூறுகிறது. “இரண்டாவது சுரங்கத்தின் வெட்டு முகம், பரவனாறு தற்காலிக கால்வாயிலிருந்து வெறும் 60 மீட்டர் தூரத்தில் உள்ளது. இது இரண்டாவது சுரங்கத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக் கூடும். இதனால் சுரங்கங்களில் மனிதர்கள், மற்றும் இயந்திரங்களுக்கு ஆபத்து உருவாகும்” என என் எல் சி தெரிவித்துள்ளது.
“ஆற்றின் பாதையை மாற்றுவது தவறு”

ஆற்றின் போக்கை மாற்றுவதால் விவசாயிகளுக்கு பாதிப்புதான் ஏற்படும் என்கிறார் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
“தொழில் நிறுவனங்கள் நீர் வழிபாதைகளை தேவையானால் மாற்றி அமைத்துக் கொள்ளும் அம்சம் கொண்ட நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவசரஅவசரமாக நிறைவேற்றியது இதற்கு தானா? ஏற்கெனவே பரவனாற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக ஆற்று நீரில் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் ஏரி நீரில் பாசனம் செய்கிறார்கள். புதிய வடிகால் மூலம் அதிக சுரங்க நீர் வெளியேறினால் கண்டிப்பாக பாதிப்புகள் அதிகரிக்கும். ஆற்றின் இயற்கையான நீரோட்டம், நிலத்தின் சம தளம் இவையெல்லாம் புதிய கால்வாய் கட்டும் முன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? நீர் வெளியேற வடிகால் இல்லாமல் சுரங்கப் பணிகளை முதலில் மேற்கொண்டது ஏன்?” என கேள்வி எழுப்புகிறார் அவர்.
என் எல் சி மத்திய அரசின் நவரத்தின பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கும் நிலமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி உயர்ந்துக் கொண்டே இருக்கிறது என தமிழக கூறுகிறாரே, பிறகு ஏன் 800 மெகாவாட் மட்டும் கொடுக்கும் என் எல் சிக்காக விவசாய நிலங்களை எடுக்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கேள்வி எழுப்புகிறார்.
தனது அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ள அவர் செய்தியாளார்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் 34,860 மெகா வாட் மின் உற்பத்தி நடப்பதாக முதல்வர் தெரிவித்தார். அத்துடன் 2030-ல் இரண்டு மடங்காக உயரும் என்றார். அதில் 800 மெகா வாட் மட்டுமே என் எல் சி தயாரிக்கிறது. என்ன நிர்பந்தத்துக்காக என் எல் சிக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. என்.எல்.சியால் தமிழகத்துக்கு பலனில்லை. கடலூர் மாவட்டத்தினருக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை. என் எல் சி உயர் அதிகாரிகள் ஒருவர் கூட தமிழர் இல்லை. 16 ஆயிரம் தமிழர்கள் என் எல் சி-யில் வேலை பார்க்கிறார்கள் என ஒரு தலைவர் கூறுகிறார். வந்து நேரில் காட்ட சொல்லுங்கள்.” என்று கேட்கிறார்.
மேலும் அவர், “ஏழை தொழிலாளி கால்வாய் ஓரம் கொட்டகை போட்டால் தடுக்கப்படுகிறது. ஆனால் பரவனாற்றை மாற்றிட என்.எல்.சிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என கேள்வி எழுப்புகிறார்.
“ இயற்கையான நீர் ஊற்றுகள் மாசுபடும்”
விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தருவதுடன் நிரந்தரமான வேலையும் தர வேண்டும் அப்போதுதான் என்.எல்.சி., மீது நம்பிக்கை வரும் என்கிறார் என் எல் சி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் திருவரசு, “கடந்த பத்து ஆண்டுகளில் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். தற்போதுள்ள ஏழு ஆயிரம் நிரந்தர பணியாளர்களில் 80% பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். என் எல் சியின் நிரந்தர பணியாளார்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் என தொடர்ச்சியாக இருக்கும் என என் எல் சி நிர்வாகம் முன்பு கூறியிருந்தது. எனவே இன்றைய நிலையில், வீடு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை அளிக்க வேண்டும்.”
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் பேசுகையில், “இயற்கையான ஆறு, ஓடை ஆகியவற்றை மடை மாற்றுவது எப்போதுமே தவறு. இதனால் வெள்ளம் போன்ற அபாயங்கள் மழைக்காலங்களில் ஏற்படலாம். இப்போது உருவாக்கும் புதிய கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். பரவனாறு மழைக்கால ஆறாக இருப்பதால், சுரங்கத்திலிருந்து அதிக அளவிலான நீர் வெளியேறும் என்பதுதான் அதன் அர்த்தம். சுரங்கத்திலிருந்து வருடம் முழுவதும் நீர் கிடைக்கும் என்றால், நீர் ஊற்றுகள் மாசுபடும், நிலத்தடி நீரின் தரமும் குறையும்” என்று தெரிவித்தார்.
1.5 கி.மீ கால்வாய் கட்டினால் என் எல் சிக்கு 200 ஏக்கர் நிலம் கிடைக்கும்

என் எல் சி -யில் ஓர் ஆலை மூடப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 நட்டமாகிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் விளக்கினார். “என்.எல்.சி., உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2.50 ஒரு யூனிட் என்ற விலையில் கிடைக்கிறது. அண்மையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நெய்வேலியில் 1,200 மெகாவாட் திறன் கொண்ட ஒரு உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. இதனால் அங்கிருந்து கிடைக்க வேண்டிய 600 மெகா வாட் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 கூடுதலாக செலவாகிறது. என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். அவர்கள் ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள 200 ஏக்கர் நிலத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவே பரவனாற்றில் மீதமுள்ள கால்வாய் பணிகளை முடித்தாக வேண்டும்” என்றார்.
திமுகவை சேர்ந்தவரான நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், “என் எல் சி இயங்காவிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டி இருக்கும். பரவனாற்றை முழுவதுமாக திசை திருப்பவில்லை. எனவே பாதிப்பு ஏற்படாது. நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் கொடுக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது” என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












