பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது சரியா?

மணிப்பூர், கருத்துச் சுதந்திரம், பத்ரி சேஷாத்ரி, தி.மு.க, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், BADRI SESHADRI/FACEBOOK

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய புத்தகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுசெய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் கருத்துத் தெரிவிப்பதற்காக கைது செய்யப்படுவது சரியா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.

கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திவரும் பத்ரி சேஷாத்ரி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகளுக்காக சனிக்கிழமையன்று பெரம்பலூர் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்ரி சேஷாத்ரி அளித்த பேட்டி ஜூலை 22-ம் தேதி வெளியானது. அதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் அவர் தெரிவித்திருந்தார்.

அதில், உச்ச நீதிமன்றத்தைப் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். மேலும், 'நாகா - குக்கி - மெய்தேய் பிரச்சனை குறித்து கோர்ட்டுக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது', என்பது உள்பட பல கருத்துகளை அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் பத்ரி.

இதில் நீதிமன்றம் குறித்து, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி குறித்து அவர் பேசிய கருத்துகள் உள்ளடங்கிய வீடியோ துணுக்குகள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தன. பத்ரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

'அமைதியை குலைக்கும் வகையில்' பேசியதற்காக கைது

இந்நிலையில், பத்ரியின் பேச்சு குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27ஆம் தேதி புகார் அளித்தார். "இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பத்ரி சேஷாத்ரி பேசியுள்ளார். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஜூலை 29-ம் தேதியன்று காலையில் பத்ரி சேஷாத்ரி குன்னம் காவல் நிலைய காவலர்கள் சென்னைக்கு வந்து பத்ரியைக் கைதுசெய்து, மங்களமேடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதற்குப் பிறகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பத்ரியை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சர்ச்சையும் விவாதமும்

மணிப்பூர், கருத்துச் சுதந்திரம், பத்ரி சேஷாத்ரி, தி.மு.க, மு.க.ஸ்டாலின்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன் இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாக கண்டித்திருக்கிறார்

பத்ரி சேஷாத்ரி பேச்சு எந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளானதோ, அவர் கைதுசெய்யப்பட்ட விவகாரமும் அதே அளவுக்கு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது. தி.மு.கவினரும் தி.மு.க. ஆதரவாளர்களும் இந்தக் கைது நடவடிக்கையை வெகுவாக வரவேற்றனர். ஆனால், கருத்துச் சொல்வதற்காக பலர் கைது நடவடிக்கை தேவையில்லாதது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மேலும், தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக பலர் கைதுசெய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன் இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

"பத்ரி என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கட்டும். அது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யலாம். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி குறித்து பேசுகிறார் என்றால், உச்ச நீதிமன்றமே வழக்குப் பதிவுசெய்யட்டுமே. சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்துப் பேசியபோது உயர் நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது. அது போல நடக்கட்டுமே. அரசு எதற்காக இதைச் செய்ய வேண்டும்? பா.ஜ.க. இந்தியா முழுவதும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக என்ன செய்வதாக குற்றம்சாட்டுகிறோமோ, அதையே இங்கே தி.மு.க. அரசு செய்யக்கூடாது," என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

சேஷாத்ரியை விடுவிக்க ஸ்டாலினுக்குக் கடிதம்

மணிப்பூர், கருத்துச் சுதந்திரம், பத்ரி சேஷாத்ரி, தி.மு.க, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு உடனடியாக பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வேண்டும், என்கிறார் வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா்

வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹாவும் இந்தக் கைதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

அவர் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ள கருத்தில், "உச்ச நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ விமர்சிப்பது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கருத்துரிமையை வெளிப்படுத்துவது. தமிழ்நாடு அரசு உடனடியாக பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வேண்டும். எந்த அரசு பதவியில் இருந்தாலும் எழுத்தாளர்களை பழிவாங்கும் வகையில் கைதுசெய்வது தவறு. பத்ரியை விடுதலை செய்யும்படி தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் கோரிக்கை விடுக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கருத்துரிமை விஷயத்தில் தி.மு.க இரட்டை நிலைப்பாடா?

இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, அவரை விமர்சித்து கார்ட்டூன் ஒன்றை பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோது அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினும் அதனை ‘சர்வாதிகார நடவடிக்கை’ என்று கூறி கண்டித்தார்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அவதூறுக் கருத்துகளைப் பதிவிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் பலர் பா.ஜ.கவினராக இருந்த நிலையில், அந்தக் கட்சி அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது.

ஆனால், அதற்குப் பிறகு பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஒரு கட்டுரை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தன்னுடைய அறம் இதழில் எழுதிய கட்டுரைக்காக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மணிப்பூர், கருத்துச் சுதந்திரம், பத்ரி சேஷாத்ரி, தி.மு.க, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN

படக்குறிப்பு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அவதூறுக் கருத்துகளைப் பதிவிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்

"மணிப்பூர் குறித்த பத்ரியின் 58 நிமிடப் பேட்டி அபத்தமானது. ஜாதி மேலாதிக்கத் தன்மை கொண்டது. தவறான தகவல்களை உள்ளடக்கியது. தவிர, நீதிபதி குறித்து அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக வழக்குத் தொடரலாம் என்ற பார்வையும் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துகளை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். ஆனால், அவரைக் கைதுசெய்திருக்கக்கூடாது. நாடு முழுவதும் பா.ஜ.க. என்ன செய்கிறதோ, அதையே தி.மு.க. இங்கே செய்யக்கூடாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமசுப்பிரமணியன்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பல விதங்களிலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுவரும் நிலையில், இது போன்ற கைது நடவடிக்கைகள் தேவையில்லாதவை என்கிறார் ராமசுப்பிரமணியன்.

ஆனால், இது போன்ற வழக்குகள், கைதுகளுக்கு ஆதரவும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வலுவாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த புதிதில், ஆட்சி தொடர்பாக பொய்த் தகவல்களைப் பரப்பியவர்களை அரசு கைதுசெய்யாதது குறித்து வருத்தத்தில் இருந்த தி.மு.கவினர், தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வெகுவாக வரவேற்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் எழுத்தின் மூலமும் பேச்சின் மூலமும் கருத்துகளைத் தெரிவிப்பதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக பார்க்கும் பலரும், இந்த கைது விவகாரத்தில் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை.

பத்ரி கைதை கண்டித்து எழுத்தாளர்கள் கடிதம்

டிஎம் கிருஷ்ணா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பத்ரி சேஷாத்ரி கைதை கண்டித்து தமிழ்நாட்டின் சில முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பத்ரி சேஷாத்ரி கைதை கண்டித்து தமிழ்நாட்டின் சில முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்களின் கடிதத்தில், "தமிழ்ப் பதிப்பாளரும் எழுத்தாளருமாகிய திரு.பத்ரி சேஷாத்ரியை தமிழ்நாடு அரசு கைது செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசியது தொடர்பான புகார் காரணமாக இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்ரி சேஷாத்ரியின் கருத்து கடும்கண்டனத்துக்குரியது. எனினும் இத்தகைய செயலுக்கு கைது என்பது மிகையான நடவடிக்கை என்றும் நமது அரசியல் சாசனம் வழங்கும் கருத்துரிமைக்கு மாறானது என்றும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் பால் சக்கரியா, இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, எழுத்தாளர் பெருமாள் முருகன், வரலாற்று ஆய்வாளர் வேங்கடாசலபதி, ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன், பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

"எழுத்தாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழியில் நடைபெற்று வரும் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் கூறுகளில் கருத்துரிமையும் ஒன்று என நம்புகின்றோம். இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டு நிற்கும் திராவிட மாடல் ஆட்சி, கருத்துரிமையைக் காப்பதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்." என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கையைக் கைவிட்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: