கருணாநிதி நினைவு நாணயம்: 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய்க்கு விற்க முடியுமா?

பட மூலாதாரம், X/mkstalin
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நாணயத்தை தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும், 100 ரூபாய் கருணாநிதி நாணயத்திற்கு விலையாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
100 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை மதிப்பைவிட அதிகமாக ரூ. 10,000-க்கு விற்பனை செய்ய முடியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாணயம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு நாணயத்தை வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக, தமிழக அரசின் பொதுத்துறை சார்பில் கடந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில், கருணாநிதி நுற்றாண்டு சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
அந்த நாணயத்தில், 'கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு' என இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. அவரது கையெழுத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 35 கிராம் எடையுள்ள இந்த நாணயத்தில் வெள்ளி 50 சதவீதமும், தாமிரம் 40 சதவீதமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் தலா 5 சதவீதம் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
‘மதிப்பு 100 ரூபாய் தான், ஆனால் விலை ரூ.10,000’
100 ரூபாய் என நாணயத்தின் மதிப்பைக் குறிப்பிட்டாலும் இவை புழக்கத்துக்கு வராது என பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட தி.மு.க., எம்.பி. திருச்சி சிவா, "முன்னாள் முதல்வரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. முன்பு அண்ணா, எம்.ஜி.ஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது" என்கிறார்.
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அறிவாலயத்தில் ரூ. 10,000 கொடுத்து யார் வேண்டுமானாலும் கருணாநிதி நினைவு நாணயத்தைப் பெற்றுக் கொள்ளலாம், என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் பேசிய மறுநாளே அறிவாலயத்தில் குவிந்த தி.மு.க., நிர்வாகிகள், ரூ. 10,000 கொடுத்து 100 ரூபாய் நாணயங்களை வாங்கிச் சென்றனர்.

அதிக விலைக்கு விற்றது ஏன்?
100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய்க்கு எப்படி விற்க முடியும் என்பதற்கு பதிலளித்த தி.மு.க அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "கருணாநிதி நினைவு நாணயத்தின் மதிப்பு 100 ரூபாய் என்றாலும், சிறப்பு நாணயம் என்பதால் ஒரு நாணயத்தை 4,200 ரூபாய்க்கு ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. இதை தோழமை கட்சி தலைவர்கள் உள்பட சிலருக்கு இலவசமாகவும் கொடுக்கிறோம். அதனால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவே 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது," என்றார்.

பட மூலாதாரம், C P Krishnan
'தயாரிப்புச் செலவு அதிகம்'
சிறப்பு நாணயம் என்பதால் குறைந்த அளவே அச்சடிப்பது வழக்கம். மேலும் அதற்கான தயாரிப்புச் செலவு அதிகம். அதை ஈடுகட்டவே நாணயத்தில் சொல்லப்படும் மதிப்புக்கு ஏற்ப அவை விற்கப்படுவதில்லை, என்கிறார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன்.
"உதாரணமாக, 2,000 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டால் ஒரு நோட்டை அச்சடிப்பதற்கு சுமார் 3 ரூபாய் 50 காசு செலவாகும். ஆனால், மிக அதிகளவிலான நோட்டை அச்சடித்தால் மட்டுமே இந்த செலவு ஆகும். அதேநேரம், வெறும் ஆயிரம் தாள்களை மட்டும் அச்சடிக்கும் போது, ஒரு நோட்டை அச்சடிப்பதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும் அதே கணக்கு சிறப்பு நாணயங்களுக்கும் பொருந்தும்," என்று விளக்கினார் சி.பி.கிருஷ்ணன்.

பட மூலாதாரம், www.spmcil.com
தரவுகள் சொல்வது என்ன?
நாணயங்களை அச்சிடும் செக்யூரிட்டி பிரின்ட்டிங் அண்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷனின் (SPMCIL) அதன் இணையதளத்தில் சிறப்பு நாணயங்களை விற்கிறது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கு 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை மின்ட்டிங் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. இதன் இணையதளத்துக்குச் சென்று யார் வேண்டுமானாலும் நாணயத்தை ஆர்டர் செய்யலாம். இதன் ஒரு நாணயத்தின் மதிப்பு ரூ.4,850 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாணயம் மரப்பெட்டி, அட்டைகள் உள்பட பல்வேறு வடிவங்களில் வைத்து விற்கப்படுகிறது.
உதாரணமாக, ஐ.ஐ.டி ரூர்கியின் 175-வது ஆண்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு நாணயத்தை மடிக்கப்பட்ட அட்டையில் (Folder packing) பெறுவதற்கான விலை ரூ.4,342 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மரப்பெட்டியில் வைக்கப்பட்ட இந்த நாணயத்தின் விலை ரூ.4,934 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் எவ்வளவு நாணயங்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தொகையை மின்ட்டிங் கார்ப்பரேஷனுக்குச் செலுத்த வேண்டும்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான நாணயங்களை மின்ட்டிங் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட கருணாநிதியின் நூற்றாண்டு நாணயம் குறித்தோ அதன் விலை குறித்தோ எந்த தகவல்களும் இணையத்தளத்தில் இடம்பெறவில்லை.
ரிசர்வ் வங்கி அலுவலர் கூறுவது என்ன?
100 ரூபாய் சிறப்பு நாணயத்தை அதனுடைய மதிப்படை விட அதிகமாக விற்பனை செய்ய முடியுமா என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தார்.
"இது ஆர்.பி.ஐ விதிகளுக்குள் வராது. நினைவு நாணயம் என்பதால் அவர்கள் விலையை நிர்ணயித்துக் கொள்கின்றனர். பழைய ஸ்டாம்புகள் சேகரிப்பு, நாணயங்கள் சேகரிப்பு போன்றவற்றுக்குச் சிலர் எவ்வாறு விலையை நிர்ணயித்து விற்கிறார்களோ, அதேபோல் தான் இதுவும்," என்கிறார்.
நாணயத்தில் உள்ள வெள்ளி உள்ளிட்ட உலோகப் பொருட்களின் கலவையைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுவதாகக் குறிப்பிடும் ராதாகிருஷ்ணன், "மத்திய அரசின் அனுமதியுடன் நினைவு நாணயம் அச்சிட்டுக் கொடுக்கப்படுகிறது. புகழ்பெற்ற தலைவர் என்பதால் அவரது நாணயத்துக்கு என விலையை நிர்ணயித்து விற்கின்றனர்," என்கிறார்.

பட மூலாதாரம், www.spmcil.com
நாணயம் வெளியிடுவதற்கான நடைமுறை என்ன?
மத்திய அரசால் கடந்த 1964-ஆம் ஆண்டில் இருந்தே நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், சி.சுப்ரமணியம் ஆகியோருக்குச் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோயிலுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
- சிறப்பு நாணயங்களை வெளியிடுவதற்கு 2019-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதியன்று திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய நிதித்துறையின் பொருளாதார விவகாரங்கள் துறை (பணம் மற்றும் நாணயம் டிவிஷன்) வெளியிட்டுள்ளது.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், அரசியல், சமூகம், மொழி, மற்றும் மதம் ஆகியவற்றுக்குப் பங்காற்றிய தலைவர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் சிறப்பு நாணயம் வெளியிடக் கோரி விண்ணப்பிக்கலாம்.
- அரசியல் தலைவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயங்கள் வெளியிடப்படுகிறது. அவர்கள் இந்தியக் குடிமக்களாக இருத்தல் வேண்டும். அவர்களது சேவை இந்தியச் சமூகத்துக்குப் பயன்பட்டிருக்க வேண்டும்.
- புலம்பெயர்ந்த நபராக இருந்தால் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு குறிப்பிட்ட அளவில் பங்களிப்பைச் செலுத்தியவராக இருக்க வேண்டும்.
- ஒருவரின் மரணத்துக்குப் பின் மட்டுமே அவரது தியாகத்தை நினைகூறும் வகையில் நாணயம் வெளியிடப்படும்.
- நாணயங்கள், அதன் பரிமாண வடிவமைப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதற்கான கலவை மற்றும் நிரந்தர எடை ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட அளவின்படி இருக்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












