"இலங்கை மக்கள் சொல்லமுடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்": போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

போராடும் இளைஞர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் படையொன்று இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட் டது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. மக்கள் மண்ணெண்ணெய் வாங்கவும், பெட்ரோல் நிரப்பவும் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் சூழலை கண்டித்து சோஷியலிச இளைஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை பயணித்திருந்தனர்.

இதையடுத்து, கொழும்பு - புறக்கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள், ஜனாதிபதி செயலக முன்றலில் அமர்ந்தவாறு முதலில் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இலங்கையின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட நாடு எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்னைகளையும் முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராடும் இளைஞர்கள்

இதன்போது, ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சோஷியலிச இளைஞர்கள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினரான அருண் ஹேமசந்திரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''இலங்கை மக்கள் இன்று சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எரிபொருள் வாங்க வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. தொடர் மின்வெட்டுக்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு இந்த நாட்டில் காணப்படுகின்றது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஆட்சியாளர்கள் பொறுப்பாக செயற்படுவதற்கு பதிலாக இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து, அசமந்தமாக செயற்பட்டு கொண்டு வருகின்றார்கள்" என தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''இந்த நாட்டின் தேசிய வளங்கள் விற்கப்பட்டு வருகின்றன. நாட்டின் வளங்களை விற்க போவதில்லை என இவர்கள் கூறியிருந்தார்கள். அதேபோன்று, விற்ற வளங்களை மீண்டும் பெறுவோம் என கூறியிருந்தார்கள். ஆனால், எது எவ்வாறாயினும், இன்றைய நிலையில், அன்றாடம் எமது வளங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இங்கு பார்த்தால், போர்ட் சிட்டி விற்கப்பட்டு விட்டது. அதேபோன்று, திருகோணமலையின் மிகவும் விலை மதிப்புள்ள எண்ணெய் தாங்கிகள் இப்போது விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது,"

"சம்பூர், மன்னார் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரதேசங்களும், மக்களின் காணிகளும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கெரவலபிட்டிய பிரதேசத்திலிருக்கின்ற மிகவும் விலை மதிப்பான மின்சக்தி நிலையத்தை கூட நள்ளிரவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அமெரிக்க நிறுவனமொன்றிற்கு விற்றிருக்கின்றார்கள். இந்த அட்சியை எதிர்த்து இன, மத, மொழி பேதமின்றி, தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி இன்று போராடி வருகின்றோம்" என சோசலிஷ இளைஞர்கள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினரான அருண் ஹேமசந்திரன் தெரிவித்தார்.

போராடும் இளைஞர்கள்

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மின்பிறப்பாக்கி (generator) ஒன்றை இயக்கிய நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாத நிலையில் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் நிலையே ஏற்படுகிறது என்பதை விளக்க இவ்வாறு செய்தனர்.

ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இயக்கப்பட்ட மின்பிறப்பாக்கியை செயலிழக்க செய்யுமாறு பாதுகாப்பு பிரிவினர், வலியுறுத்தியதை அடுத்து, அங்கு அமைதியின்மை நிலவியதுடன், பின்னர் மின்பிறப்பாக்கியை பாதுகாப்பு பிரிவினர் செயலிழக்கச் செய்தனர்.

சற்று நேரம் நிலவிய அமைதியின்மை பின்னர், வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல மணிநேரம் பாரிய போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அமைதியாக கலைந்து சென்றனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவிப்பை வெளியிட்டவாறே, இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

தீவிரமாகும் பிரச்னை

இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. பால்மா, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. அல்லது மூடப்பட்டிருக்கின்றன. அது நெடிய மின்வெட்டுக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய பயணத்திற்கு பிறகு, இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: