சிறையில் இருந்தபடி 5 மாதம் ஆண்ட அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் வந்ததும் ராஜினாமா முடிவு ஏன்? ஓர் அலசல்

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்
    • எழுதியவர், அபய் குமார் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2014 பிப்ரவரி 14 - அரவிந்த் கேஜ்ரிவால் முதல் முறை டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நாள்.

அப்போது மழைக்கு மத்தியில் தொண்டர்களிடையே பேசிய கேஜ்ரிவால், "நண்பர்களே, நான் மிகவும் சிறியவன். நான் நாற்காலிக்காக இங்கு வரவில்லை. ஜன் லோக்பால் மசோதாவுக்காக இங்கு வந்துள்ளேன். இன்று லோக்பால் மசோதா வீழ்ந்துவிட்டது. நமது அரசு ராஜினாமா செய்துவிட்டது. லோக்பால் மசோதாவுக்காக நூறு முறை கூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். இந்த மசோதாவுக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அப்போதுதான் உருவாகியிருந்தது. அவரது அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கேஜ்ரிவாலிடம் இருந்தது. அது நடக்கவும் செய்தது.

அது நடந்து இப்போது பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி பல்வேறு அரசியல் முயற்சிகளில் முன்பை விட அதிக அனுபவம் பெற்றுள்ளது.

தான் பதவி விலகப்போவதாக 2024 செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள் தன்னை இந்த பதவியில் அமரச் சொன்னாலன்றி மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைமையகத்தில் தொண்டர்களிடம் பேசிய அவர், “தேர்தல் நடைபெறும் வரை வேறு ஒரு தலைவர் டெல்லி முதல்வராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

அவரது கூற்றின் படி, இரண்டு நாட்களுக்குள் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அதில் புதிய முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

”மக்கள் மத்தியில் செல்வேன். ஒவ்வொரு தெருவாக செல்வேன், வீடுவீடாக செல்வேன். கேஜ்ரிவால் நேர்மையானவர் என்று பொதுமக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்,” என்று கேஜ்ரிவால் அறிவித்தார்.

அவரது அறிவிப்பு ஒரு ’நாடகம்’ என பா.ஜ.க கூறியுள்ளது.

ஆனால் அவரது ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதில் சில கேள்விகளுக்கு பிபிசி இந்தி பதில் தேட முயற்சித்துள்ளது.

முதல் கேள்வி, இந்த நேரத்தில் ராஜினாமா அறிவிப்பு ஏன்? ஹரியாணா தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?

இரண்டாவதாக, முன்கூட்டியே டெல்லி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் அடிப்படை என்ன? மூன்றாவதாக, அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை என்ன, அது டெல்லி பாஜகவின் செயல் உத்தியை பாதிக்குமா?

2014 இல் கேஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் 2024 இல் அவரது ராஜினாமாவுக்கு இடையே ஆம் ஆத்மி கட்சி எவ்வளவு மாறியுள்ளது என்பது முக்கியமான கேள்வி?

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி சட்டசபையை கலைக்காமல் அடுத்த முதல்வர் யார் என்று முடிவு செய்யப் போகிறது ஆம் ஆத்மி கட்சி

ராஜினாமா அறிவிப்பு இப்போது ஏன்?

ஏறக்குறைய ஐந்து மாதங்கள் சிறைக்குள் இருந்து அரசை நடத்தி வந்த அரவிந்த் கேஜ்ரிவால் செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் ராஜினாமா அறிவிப்பு இப்போது ஏன்?

இந்த திடீர் முடிவை அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் பாணியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி.

”கேஜ்ரிவாலின் 10-12 ஆண்டுகால அரசியல் வரலாற்றைப் பார்த்தால் அவரது முடிவுகளில் ஏதோ ஒரு நாடக பாணி தெரியும். அதில் ஒரு ’லட்சியம்' புலப்படும். அதற்குப் பின்னால் ஓர் உத்தி ஒளிந்திருக்கும். அரசியல்வாதியாக அவர் அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

"கேஜ்ரிவால் இந்த திடீர் முடிவின் மூலம் 'நான் இவை அனைத்திற்கும் மேலானவன். நான் ஒரு சாதாரண மனிதன்' என்ற செய்தியை வழங்க விரும்புகிறார்,” என்று பிரமோத் ஜோஷி குறிப்பிட்டார்.

”கைது செய்யப்பட்ட உடனேயே கேஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க முடியும். ஏனெனில் இதற்கு முன்பும் கைது செய்யப்பட்ட தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்,” என்றார் அவர்.

ஆனால் இப்போது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ராஜினாமா செய்வதற்கான காரணங்கள் பற்றிப் பேசிய பிரமோத் ஜோஷி, ”சட்டரீதியாக போராடி வருவதால் அந்தக் கொள்கை அடிப்படையில் ராஜினாமா செய்யவில்லை என்று அவர் முன்பு நிரூபிக்க விரும்பியிருக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு பிறகுதான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று இன்னொரு கொள்கையைப் பற்றி அவர் இன்று பேசுகிறார்,” என்று குறிப்பிட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் செப்டம்பர் 13 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்

"மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு"

”கேஜ்ரிவாலின் இந்த முடிவு மிகவும் தாமதமான ஒன்று என்றும், அது போதாது,” என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அஷூதோஷ்.

“இந்த முடிவை எடுக்க கேஜ்ரிவால் காலதாமதம் செய்துள்ளார். இது வேறு வழி இல்லாமல் எடுக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. மக்கள் மத்தியில் வீழ்ச்சியடையும் தனது பிம்பத்தை காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது. கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு பற்றிய பேச்சு வெளியான அன்றே இதைச் செய்திருக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

இந்த அறிவிப்பு நாடகத்தனமாகத்தெரிகிறது என்ற பிரமோத் ஜோஷியின் கருத்தை அஷூதோஷும் ஒப்புக்கொள்கிறார். “இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்யப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது ஏதோ ஒரு ‘ரகசியம்’ இருப்பது போலத் தெரிகிறது. இந்த ‘நாடகத்தை’ அவர் தவிர்த்திருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியின் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதன் பின்னர் இங்கு தேர்தல் நடத்தப்படும். அதாவது தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஷரத் குப்தா, இதை வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் சட்டக் கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையதாகக்கருதுகிறார்.

“நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகும் அவர் கையில் எதுவும் இல்லை. அவர் எந்த முடிவும் எடுக்க முடியாது. அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. வெளியில் வந்த பிறகு பணிகளை செய்யுங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள். இப்போது 'நான் முதலமைச்சர் இல்லை, என்னால் எதுவும் செய்ய முடியாது. கட்சிதான் செய்ய முடியும்' என்று சொல்வதற்கு காரணம் கிடைக்கும்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த முடிவின் மற்றொரு அம்சம் ஹரியாணா மற்றும் டெல்லி தேர்தல்களாகவும் இருக்கலாம். முதல்வராக அவர் மீதுள்ள கட்டுப்பாடுகள் விலகிய பிறகு அவர் ஹரியாணா தேர்தலில் முழு மூச்சாக ஈடுபடுவார். இன்னும் சில மாதங்களில் டெல்லி தேர்தலும் வரவுள்ளது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நான்காவது தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது,” என்று ஷரத் குப்தா மேலும் கூறினார்.

2019 ஆம் ஆண்டு ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை எல்லா 90 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே செய்துள்ள அறிவிப்பு "தலைப்புச்செய்தி" தந்திரம் என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா.

இதன் மூலம் கட்சி தொடர்ந்து செய்திகளில் இருப்பதை கேஜ்ரிவால் விரும்புவதாக அவர் கூறுகிறார்.

”எப்பொழுது ராஜினாமா செய்வதாக உள்ளாரோ அன்று அதை அறிவித்திருக்க வேண்டும். முன்பே அறிவிப்பை செய்வதால் என்ன பயன்? இந்த செய்தி கசிந்துவிடுமோ என்ற பயம் கேஜ்ரிவாலுக்கு இருந்திருக்கலாம். இது தவிர, இதுவரை பாஜக தான் ’தலைப்புச்செய்தி நிர்வாகத்தில்’ தலைசிறந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது ஆம் ஆத்மி கட்சியும் இதில் முன்னணியில் உள்ளது,” என்று ஷரத் குப்தா தெரிவித்தார்.

எனினும் ராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் கோருவது குறித்த கேள்விக்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த டெல்லி அமைச்சர் அதிஷி, "இதற்கு ஒரு நேரடி காரணம் உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை. நாளை திங்கள் ஈத் விடுமுறை. எனவே அடுத்த வேலை நாளான செவ்வாய் கிழமையன்று கேஜ்ரிவால் ராஜினாமா செய்வார்," என்று குறிப்பிட்டார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது என்றாலும் அவருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமலாக்க வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இந்த வழக்கிலும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி அவரால் முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி செயலகத்திற்கு செல்லமுடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பகிரங்கமாக எதையும் சொல்ல முடியாது. முக்கிய கோப்புகளில் அவரால் கையெழுத்திட முடியாது.

இது தவிர இந்த விவகாரத்தில் தனது பங்கு குறித்து அவர் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க முடியாது. அவர் வழக்கின் எந்த சாட்சியுடனும் பேசக் கூடாது மற்றும் வழக்கு தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ கோப்பையும் பெற முயற்சி செய்யக்கூடாது.

ஆம் ஆத்மி கட்சி 'தன்னம்பிக்கை' யுடன் உள்ளதா?

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி
படக்குறிப்பு, டெல்லி சட்டமன்றத்தைக்கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிஷி கூறுகிறார்.

தேர்தலை சந்திக்க கட்சி தயாராக இருப்பதாக முதல்வர் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து முக்கிய முகங்களும் கூறுகின்றன. இருந்த போதிலும் சட்டசபையை கலைப்பது குறித்து கேஜ்ரிவாலிடம் இருந்து எந்த பேச்சும் வரவில்லை. வேறு ஒரு தலைவர் முதல்வராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஷூதோஷ் மற்றும் பிரமோத் ஜோஷி இருவருமே இதை "தன்னம்பிக்கை" யாக பார்க்கவில்லை.

“அப்படி இருந்திருந்தால் சட்டசபையை கலைத்திருக்க வேண்டும். இதை செய்யவில்லை. புதிய முதல்வர் பற்றி பேசப்படுகிறது. அதாவது தேர்தலை சந்திக்க கட்சிக்கு கால அவகாசம் தேவை. ஆனால், மகாராஷ்டிராவுடன் சேர்த்து டெல்லியிலும் தேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சி கூறுகிறது. ஆனால் அப்படி இருந்தாலும் அமைச்சரவை ராஜினாமா செய்திருக்க வேண்டும்,” என்று அஷூதோஷ் குறிப்பிட்டார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் பலன் கிடைக்கும் என கட்சி கருதுவதாகவும் பிரமோத் ஜோஷி கூறுகிறார்.

”பல மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டால் அது கட்சிக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. எனவே தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி பேச வேண்டும்,”என்று அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலர் சிறையில் இருந்த பிறகு எழுந்த அனுதாப அலையுடன் இதை தொடர்புபடுத்திப் பார்க்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா. இந்த அனுதாபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கட்சி விரும்புவதாக அவர் கூறுகிறார்.

”கேஜ்ரிவால், சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததால் இந்த அனுதாபத்தை சாதகமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று கட்சி நினைக்கிறது. காலப்போக்கில் மக்கள் அதை மறந்துவிடக்கூடும் என்பதால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கட்சி விரும்புகிறது,” என்றார் அவர்.

இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டசபை கலைப்பு குறித்த கேள்விக்கு, ’டெல்லி சட்டசபையை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று அதிஷி கூறினார்.

”ஒரு சட்டசபையின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தலாம். இதற்காக சட்டசபையை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார் அவர்.

புதிய முதலமைச்சர் தொடர்பான முடிவை எடுக்கப் போவது யார்?

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அதிஷி, சுனிதா கேஜ்ரிவால் மற்றும் செளரப் பாரத்வாஜ் ஆகிய மூன்று பேரில் ஒருவர் டெல்லியின் அடுத்த முதல்வராகலாம் என்று ஊகங்கள் உள்ளன.

கேஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பை அடுத்து டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற ஊகங்கள் வலம் வருகின்றன.

பலரின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், அமைச்சர் அதிஷி, அமைச்சர் செளரப் பாரத்வாஜ், அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் வேறு சில பெயர்களும் இதில் அடங்கும்.

ஆனால் எந்த அடிப்படையில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்படும்?

"புதிய முதலமைச்சரை நியமிக்கும் இந்த முடிவில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா அல்லது லாலு யாதவ் விஷயத்தில் நடந்தது போல் யார் முதல்வராக வந்தாலும் அவர் வெறும் கைப்பாவையாகவே இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சாக்குப்போக்கில் ஒரு புதிய சூழலை உருவாக்க முயற்சி இருக்கும்,” என்று பிரதீப் ஜோஷி குறிப்பிட்டார்.

கொள்கைகள் எதுவாக இருந்தாலும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியப் பங்காற்றுவார் என்று அவர் கருதுகிறார்.

”முகம் யாராக இருந்தாலும் அவர் கேஜ்ரிவாலுக்கு விசுவாசமானவராகவே இருப்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசு பணிகளை சிறப்பாக செய்ததால் அதிஷியின் பெயர் உள்ளது. ஆனால், பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக கேஜ்ரிவால் கொடுத்த சர்ப்ரைஸ், முதல்வர் பதவி விஷயத்தில் இருப்பதும் சாத்தியம்தான்,” என்கிறார் பிரதீப் ஜோஷி. .

சுனிதா கேஜ்ரிவால் புதிய முதல்வராக இருப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”அப்படியும் நடக்கலாம். ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த முடிவு சற்று விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இப்போது அந்த கட்சியில் அத்தகைய தயக்கம் ஏதும் மிச்சமில்லை,”என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே அந்த முகத்தின் முதல் தகுதி என்று ஷரத் குப்தாவும் கூறுகிறார்.

“யெஸ் மினிஸ்டர்” என்று அவர் இதை அழைக்கிறார். ”புதிய முகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தகுதியாக இதுவே பார்க்கப்படும். சிறையில் இருக்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால் தேசிய கொடியை ஏற்ற யாரை அனுப்பினார் என்று சற்று யோசித்துப் பாருங்கள்,” ஷரத் குப்தா குறிப்பிட்டார். இங்கு அதிஷியை அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.

முதல்வர் யார் என்பது பற்றி அதிஷி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து சட்டமன்ற கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

கேஜ்ரிவால் ராஜினாமா பற்றி பாஜக, காங்கிரஸ் சொல்வது என்ன?

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பு குறித்து பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதி கேள்வி எழுப்பினார்.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை "நாடகம்" என்று பாஜக கூறுகிறது. டெல்லி மக்கள் மக்களவை தேர்தலிலேயே தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டனர் என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகிறார்.

“டெல்லி மக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே கேஜ்ரிவாலுக்கு தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டனர். நீங்கள் டெல்லி தெருக்களில் சுற்றித் திரிந்து, ’எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று சொன்னீர்கள். டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலைக் கொடுத்தார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

48 மணி நேரத்திற்கு முன்பே ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பினார்.

“கேஜ்ரிவால் ராஜினாமா பற்றி பேசிய போதே இது அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டது போல என்று நாம் கூறலாம். அதாவது அவரால் இந்தப் பதவியை வகிக்க முடியாத அளவுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த முடிவு டெல்லி பாஜகவுக்கு அதிர்ச்சியாகவும் எதிர்பாராததாகவும் இருக்கும் என்று பிரமோத் ஜோஷி கருதுகிறார். "டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக பாஜக இப்போது அவ்வளவு தன்னபிக்கையுடன் இருக்காது, ஏனென்றால் முதலாவதாக பாஜகவின் டெல்லி அமைப்பு மிகவும் வலுவாக இல்லை. உள் மட்டத்தில் கூட அதற்கு அதிக பலம் இல்லை. இரண்டாவதாக, டெல்லி தொடர்பாக உயர்மட்ட தலைமை மட்டத்தில் பாஜகவுக்குள் குழப்பம் நிலவுகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

”இதற்கு மூன்றாவது காரணமும் இருக்கிறது. ஹரியாணாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் டெல்லி தேர்தல் முடிவுகளில் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார் அவர்.

இருப்பினும் அஷூதோஷ் இந்த கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இது பாஜக மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் கருதுகிறார்.

”டெல்லி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கு பாஜக மனதளவில் தயாராக உள்ளது. கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை பா.ஜ.கவின் செயல் உத்தியிலோ அல்லது அரசியலிலோ குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

”கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை, பா.ஜ.க,வுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். எந்த வகையிலும் இது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை,” என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறினார்.

”கேஜ்ரிவால் முதலமைச்சராக இருக்க வேண்டும், அவர் மீது தொடர்ந்து சேற்றை வீசவேண்டும் என்று பா.ஜ.க விரும்பியது. ஆனால், ’நீதிமன்றம் என்னை விடுவித்தது, விடுதலையானவுடனேயே முதல்வர் பதவியை விட்டு விட்டேன். எனக்கு அதிகாரப் பேராசை இல்லை’ என்று கேஜ்ரிவால் இப்போது சொல்ல முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவால்: கைது செய்யப்பட்டது முதல் ராஜினாமா அறிவிப்பு வரை

  • மார்ச் 21- மது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது.
  • மே 10- 21 நாள் இடைக்கால ஜாமீன் கிடைத்தது.
  • ஜூன் 2- மீண்டும் சிறை சென்றார்.
  • ஜூன் 26- சிபிஐ யால் மீண்டும் கைது
  • ஜூலை 12- அமலாக்க இயக்குநரகம் தொடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
  • செப்டெம்பர் 13 – சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றார்.
  • செப்டெம்பர் 15 – இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிப்பு.

டெல்லியில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது கேஜ்ரிவால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். அந்த சமயத்திலும் கேஜ்ரிவால் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கோரினார்.

இந்த முறை மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. ஆனால் ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படவில்லை.

”மக்களவை தேர்தலில் இந்தக் கூட்டணியால் காங்கிரசுக்கு ஓரளவு நன்மை கிடைத்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இப்போது அவர்கள் ஹரியாணாவில் இணைந்து போட்டியிடவில்லை. இத்தகைய சூழ்நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிரான காங்கிரஸின் எதிர்வினை ஒரு எதிர்க்கட்சியைப் போல இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே,” என்று ஷரத் குப்தா தெரிவித்தார்.

”காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் டெல்லியில் தங்கள் தலைமையை வலுப்படுத்தவில்லை. கேஜ்ரிவாலைப் போன்ற ஆளுமை கொண்ட தலைவர்கள் அக்கட்சிகளின் பிரதேச அமைப்பில் தென்படவில்லை. தேர்தலில் இதன் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க நேரிடும்,” என்று அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸின் எதிர்வினை என்னவென்று நாம் பார்த்தால், ’கேஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு நாடகம் என்றும், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே முதல்வர் பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும்’ என்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கூறினார்.

”சிறைக்கு சென்றவுடனேயே முதல்வர் பதவியை விட்டு அவர் விலகியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அவர் அப்படி செய்யவில்லை. இப்போது என்ன மிச்சம் இருக்கிறது, இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு என்ன பயன்?” என்று அவர் வினவினார்.

10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி எவ்வளவு மாறியுள்ளது?

“ஆம் ஆத்மி கட்சி ஒரு இயக்கத்தில் இருந்து பிறந்த கட்சியாக இப்போது இல்லை. நாட்டை மாற்றும் கனவு, லட்சியவாதம், ஒரு புதிய வகையான அரசியலுக்கான நம்பிக்கைகள் இருந்த காலகட்டம் அது. ஆனால் 10 ஆண்டுகளில் விஷயங்கள் நிறைய மாறிவிட்டன. இப்போது அமைப்பு முன்பு இருந்ததைப் போல் இல்லை, அதனுடன் தொடர்புடையவர்களும் இப்போது மாறிவிட்டனர்,” என்று அஷூதோஷ் குறிப்பிட்டார்.

”இந்த முறை டெல்லி மக்களும் இலவச மின்சாரம் அல்லது இலவச தண்ணீர் போன்ற முழக்கங்களால் கவரப்பட மாட்டார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் இதே போன்ற வாக்குறுதிகளை கொடுக்கின்றன,” என்றார் அவர்.

கேஜ்ரிவாலின் 2014 ராஜினாமா குறித்துப்பேசிய பிரமோத் ஜோஷி, "அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி, ஓர் இயக்கத்தில் இருந்து துளிர்த்தெழுந்த கட்சியாக இருந்தது. தொண்டர்கள் மத்தியில் வித்தியாசமான உற்சாகம் இருந்தது. கட்சி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தியது. நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டுமா அல்லது ஆதரவை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று மக்களிடம் கேட்டது. இம்முறை சூழல் வேறு. இந்த 10 ஆண்டுகளில் கட்சி பெரிய அளவில் மாறிவிட்டது. தற்போது அக்கட்சி ஒரு சாதாரண அரசியல் கட்சியாக மாறியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“தொண்டர்களிடையே இப்போது அவ்வளவு உற்சாகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தங்கள் சொந்த நலன்களை பார்க்கும் பலர் தற்போது கட்சியில் இணைந்துள்ளனர். மாநிலங்களவையில் உறுப்பினர் ஆவதற்கு வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்ததையும், தொண்டர்களுக்கு இடம் அளிக்கப்படாததையும் நீங்கள் பார்த்தீர்கள். இப்போது தொண்டர்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தது போல் இல்லை,” என்று பிரமோத் ஜோஷி தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)