70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு - எவ்வாறு பெறுவது? முக்கிய தகவல்கள்

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

70 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று (செப்டம்பர் 11) ஒப்புதல் அளித்தது.

வருமான வரம்பின்றி அனைவருக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 6 கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கிய 4.5 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பலனளிக்கும். ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் என்ற வகையில் இந்த காப்பீடு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கென மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தனியான, புதிய அட்டை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயனடைவார்கள், தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்துமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போதுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது என்ன?

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளான 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

இந்தியாவில் வருவாய் குறைந்த 40 சதவீதம் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அளிக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

இந்தியாவில் உள்ள 10 கோடி குடும்பங்கள் அதாவது 50 கோடிப் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். இது இந்தியாவின் 40 சதவீத மக்கள் தொகையாகும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு இதற்கென அட்டை ஒன்று வழங்கப்படும். மருத்துவமனைகள், மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சையளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமல்ல.

ஏற்கனவே நோயுற்றிருந்தாலும் இந்தத் திட்டத்தில் இணைந்த தினத்திலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்க்கும் சிகிச்சைபெறலாம். இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சையளிக்கப்படும்

மூத்த குடிமக்களுக்கான புதிய திட்டம் என்ன?

ஏற்கனவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (ABPMJAY) என்ற திட்டம் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் புதிய திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட எல்லா குடிமக்களுக்கும் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கப்படும் என தனது 2024ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

புதிய திட்டத்தில் யார், எந்த அளவுக்குப் பலனடைவார்கள்?

வருமான வரம்பு ஏதுமின்றி 70 வயதைத் தாண்டிய அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மூத்த குடிமக்களுக்கு இதற்கென தனியான அட்டை வழங்கப்படும்.

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாகியிருக்கின்றன. அந்த வகையில் மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றில் இது மிகப் பெரிய நடவடிக்கை" என இந்தத் திட்டம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், மூத்த குடிமக்களுக்கு மட்டும் என தனியாக ஐந்து லட்ச ரூபாய் காப்பீட்டிற்கான அட்டை வழங்கப்படும். அதே குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு குறைவானவர்கள் இந்தக் காப்பீட்டைப் பயன்படுத்த முடியாது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால், அவர்கள் இந்த ஐந்து லட்ச ரூபாய் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே நேரம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூத்த குடிமக்களுக்கு மட்டும் என தனியாக ஐந்து லட்ச ரூபாய் காப்பீட்டிற்கான அட்டை வழங்கப்படும்

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

இந்தக் காப்பீட்டுத் திட்டமே தனி நபருக்கு என அல்லாமல் குடும்ப ரீதியாகத்தான் வழங்கப்படுகிறது. ஆகவே, எப்போதுமே குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இந்தக் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதைப் போலவே, இப்போதும் ஒரே குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் கிடைக்கும் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் 70 வயதுக்கு மேல் இருந்தால், இருவருக்கும் சேர்த்துத்தான் ஐந்து லட்ச ரூபாய் காப்பீடு.

இந்தத் திட்டத்தின் கீழ் யார் பயனடைய மாட்டார்கள்?

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள் (CGHS), முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்போடு கூடிய மருத்துவத் திட்டம் (ECHS) மத்திய ஆயுதப் படையினருக்கான ஆயுஷ்மான் திட்டம் (CAPF) ஆகிய காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பலனடையும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுடைய தற்போதைய திட்டத்திலேயே தொடரலாம் அல்லது இந்தப் புதிய திட்டத்தில் இணையலாம். இதில் ஏதாவது ஒன்றில்தான் பயனடைய முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சைபெற முடியும்?

தேசிய சுகாதார ஆணையம் அளிக்கும் தகவல்களின்படி, தற்போது தில்லி, ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் யாருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை அட்டைகள் வழங்கப்படவில்லை. ஆனால், இந்தத் திட்டம் நாடு முழுமைக்குமானது.

இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சைபெற பணம் ஏதும் கட்டத் தேவையில்லை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளும். நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்

ஏற்கனவே தனியார் மருத்துவக் காப்பீடு பெற்றவர்களின் நிலை என்ன?

இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது, தனியார் நிறுவனங்களிடம் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்கும் மூத்த குடிமக்களுக்கும் சேர்த்துத்தான் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு செய்திருந்தாலும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழும் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டுமா?

ஆம். இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வருமென்றும், மூத்த குடிமக்கள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டுமென்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

"இது மிகப் பெரிய திட்டம். இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப கட்டத் தொகையாக ரூ. 3,437 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவையை அடிப்படையாக வைத்து செயல்படுத்தப்படும் திட்டம் இது. தேவை அதிகரித்தால் அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும்" என்கிறார் அவர்.

இதில் என்ன சவால்கள் இருக்கின்றன?

இந்தியாவின் பெரிய மருத்துவர்கள் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே உள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து சிஏஜி அறிக்கை கூறிய விவகாரங்களின் மீது கவனம் செலுத்தும்படி காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.

"இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் யார் என அறிய சிஏஜி அறிக்கையைப் பாருங்கள். எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது, எவ்வளவு மோசடி நடக்கிறது என்று பாருங்கள். இது தொடர்பாக அரசு முதலில் தன் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பவன் கேரா.

தில்லி கங்காராம் மருத்துவமனையின் மூத்த கன்சல்டன்டான மோசின் வாலி, இது மிக நல்ல திட்டம் எனக் கூறியிருக்கிரார்.

"நாட்டின் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிவதால் ஏற்படும் அழுத்தம் நிலவுகிறது. இந்தத் திட்டத்தில் சிகிச்சைக்கான பணத்தைக் கோரிப் பெருவதில் சிக்கல் இருந்தால், நோயாளிகள் பாதிக்கப்படாதவகையில் அதை மேம்படுத்துவது தொடர்பாக அரசு செயல்பட்டு வருகிறது" என்கிறார் அவர்.

ஆனால், புனேவில் உள்ள டிஒய் பாடீல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் அமிதாப் பேனர்ஜி போன்றவர்கள் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்கள். "எல்லாவிதமான மக்களையும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் பிரச்னைகளையும் மனதில்கொண்டு இது உருவாக்கப்படவில்லை. இந்தியா இளைஞர்களின் தேசம். நீண்ட காலம் வாழ வேண்டிய இளைஞர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்திருக்க வேண்டும்.

மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிகிச்சை என்பது செலவுமிக்கது. ஐந்து லட்ச ரூபாய் என்பது அதற்குப் போதாது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கானது. இப்போது 70 வயதுக்கு மேற்பட்ட வசதியானவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இந்தத் திட்டம் இல்லாவிட்டாலும்கூட அவர்களுக்கு சிகிச்சை கிடைத்திருக்கும்." என்கிறார் அவர்.

 ஆயுஷ்மான் பாரத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் எவ்வாறு அமலாகும்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டமும் அதைப் போலவே செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம்ஸ் புராஜெக்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் வருவதற்கு முன்பே இந்தியாவில் பல மாநிலங்களில் மாநில அரசுகளே வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தன.

தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் 'கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்கள் இதில் பதிவுசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் அமலில் இருந்த ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில், காப்பீட்டிற்கான தவணைத் தொகையை பயனாளிகள் கட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் தமிழக அரசே அதைக் கட்டியது.

2011ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த போது மத்திய அரசின் பயனாளிகள் பட்டியலும் மாநில அரசின் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளின் பட்டியலும் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீடு வழங்கப்பட்டது.

அதன்படி, தொடக்கத்தில் மாநில அரசின் பயனாளிகள் பட்டியலில் இருந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்கு 5 லட்ச ரூபாய் வீதம் காப்பீடு வழங்கப்பட்டது. பின்னர், மாநில அரசின் திட்டப் பயனாளிகளுக்கும் காப்பீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)