இந்தியா, வங்கதேசம் உறவு மோசமடைகிறதா? முகமது யூனுஸ் கருத்து சர்ச்சையாவது ஏன்?

இந்தியா, வங்கதேசம் உறவு மோசமடைகிறதா? முகமது யூனுஸ் கருத்து சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வங்கதேச உறவு குறித்து கருத்து தெரிவித்த முகமது யூனுஸ்
    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்குமான உறவு ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கலான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலின் விளைவே இது.

இந்தியாவில் ஹசீனா இருப்பது வங்கதேசத்திற்கு ஒரு தலைவலியாக இருக்கின்ற சூழலில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸின் கருத்து இந்தியாவை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்குமான உறவு எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்குகிறார் பிபிசி செய்தியாளர் அன்பரசன் எத்திராஜன்.

ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு தலைவராகவே அடையாளம் காணப்பட்டார். ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக இருந்த 15 ஆண்டுகளில் இரண்டு நாடுகளும் நெருங்கிய மூலோபாய பொருளாதார பலன்களை அனுபவித்தன.

அவரது ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு பாதுகாப்பு தொடர்பான பலன்களையும் அளித்தது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த கலகக் குழுக்களை ஒழித்தார். மேலும் சில எல்லையோர பிரச்னைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இந்தியாவில், இனி எவ்வளவு காலம் இருப்பார் என்ற தெளிவான தகவல்கள் ஏதும் இல்லாமல் ஷேக் ஹசீனா இருப்பதால், இரு நாட்டு உறவுகளையும் எப்போதும் போல் தொடர்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த வாரம் பிடிஐ செய்தி முகமைக்கு வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் யூயூனுஸ் அளித்த நேர்காணல் அதை உறுதிப்படுத்தியுள்ளது. யூயூனுஸ், டெல்லியில் ஷேக் ஹசீனா இருக்கும் வரை, அவர் அரசியல் சார்ந்த எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வங்கதேசத்திற்கு ஹசீனா தேவைப்படும் வரை இந்தியா அவருக்கு ஆதரவு அளிக்க விரும்பினால் அவர் இந்த நிபந்தனையைப் பின்பற்ற வேண்டும். அதாவது அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை என்று கூறினார் யூயூனுஸ். பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அவர், ஷேக் ஹசீனா அவருடைய நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு உருவாகியுள்ள இடைக்கால அரசின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவுக்கு ஹசீனா வருகை புரிந்து சில நாட்கள் கழித்து அவர் வெளியிட்ட அறிக்கை வங்கதேசத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை மேற்கோள் காட்டியே யூனுஸ் பேசினார். அந்த நிகழ்வுக்குப் பிறகு பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் இதுவரை ஹசீனா தெரிவிக்கவில்லை.

ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர முயற்சி

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா திரும்ப அழைக்கப்பட்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று வங்கதேசத்தில் பல அழைப்புகள் எழுந்துள்ளன.

இரு நாட்டு உறவும் மிகவும் மோசமாக இருக்கிறது என்று நேர்காணலில் குறிப்பிட்ட அவர், இரு நாட்டினரும் அதை மேம்படுத்த பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை. ஆனால் அதிகாரிகள் இந்தக் கருத்து குறித்து வருத்தம் அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாகத் தன்னுடைய அடையாளத்தை வெளியிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர், "காத்திருக்கிறோம். வங்கதேசத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறோம். மேலும், டாக்காவில் இருந்து வெளியாகி வரும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் முக்கிய நபர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகள் குறித்தும் கவனித்து வருகிறோம்," என்று கூறினார்.

இரு நாட்டு உறவை "மெகாபோன் டிப்ளமசி," என்று யூனுஸ் கூறியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊடகங்கள் மூலமாகத் தொடர்ச்சியாக இரு நாட்டு உறவு குறித்து யூனுஸ் விவாதிக்க முயன்று வருகிறார் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஷேக் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்புமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச மாணவர்கள் போராட்டம் வெற்றி அடைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அதைக் கொண்டாடக் குவிந்த மக்கள்

டாக்காவில் பணியாற்றிய முன்னாள் இந்திய உயர் ஆணையர் வீணா சிக்ரி, "வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் நிலவும் ஷேக் ஹசீனா தொடர்பான கவலைகள் குறித்து விவாதிக்கவும் இந்தியா தயார் நிலையில் இருப்பதாக," தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், இந்தப் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் எதன் அடிப்படையில் இரு நாட்டு உறவும் மோசமாக இருக்கிறது என்று யூனுஸ் கூறினார் என்பதில் தெளிவு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளது.

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தௌஹித் ஹொசைன் இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "இந்திய தலைவர்கள் யாரும் ஊடகங்களில் இதுகுறித்துப் பேசவில்லையா? யூனஸிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அவர் அது குறித்த தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கத்தான் செய்வார். நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்றால் எதையும் விமர்சிக்கலாம்," என்று கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், வங்கதேசத்தின் தலைவர் யூனஸும் சில வாரங்களுக்கு முன்பு அலைபேசியில் பேசினாலும், இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் இதுவரை எந்த விதமான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெறவில்லை.

ஹசீனாவுக்கு வேறொரு நாடு புகலிடம் வழங்கும் வரை அவருக்கு ஆதரவு வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இருப்பினும், வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்டுள்ள முகமது தஜூல் இஸ்லாம், ஏற்கெனவே ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

"வங்கதேசத்தில் போராட்டத்தின்போது நடைபெற்ற படுகொலைகள் விவகாரத்தில் ஹசீனா ஒரு முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கை எதிர்கொள்ள சட்டப்பூர்வமாக அவரை இந்தியாவில் இருந்து அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆலோசனை நடத்திய சீன, ஐரோப்பிய தூதரக அலுவலர்கள்

இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ்

ஆனால் முறையாக வங்கதேசம் இதுதொடர்பாக இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தாலும், அவரை இந்தியா நாடு கடத்தாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"இந்தியாவில் அவர் ஒரு விருந்தினராகத் தங்கியிருக்கிறார். நம்முடைய நீண்ட நாள் நண்பருக்காக நாம் நம்முடைய அடிப்படை உதவிகளைக்கூட வழங்கவில்லை என்றால், வருங்காலத்தில் யார் நம்மை நல்ல நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்கள்?" என்ற கேள்வியை முன்வைக்கிறார் டாக்காவில் இந்திய உயர் ஆணையர் பதவி வகித்த கங்குலி தாஸ்.

யூனுஸ் தன்னுடைய நேர்காணலில் எதிர்க்கட்சியினரை இந்தியா அணுகவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

"இங்கு அனைவரும் இஸ்லாமியவாதிகள் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி ஒரு இஸ்லாமியவாத கட்சி, அனைவரும் இஸ்லாமியவாதிகள். இந்த நாட்டை ஒரு ஆப்கானிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். ஆனால் ஷேக் ஹசீனாவின் கையில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற பிம்பத்தில் இந்தியா ஆட்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

ஆனால் இந்திய நிபுணர்கள் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.

"இந்தக் கருத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய உயர் ஆணையர்களும் அனைத்து கட்சியினருடனும் எந்தவிதமான வேறுபாடும் இன்றிப் பேசி வருகின்றனர்," என்று கூறினார் சிக்ரி.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகள் மீதான விசாரணைக்காக ஹசினாவை வங்கதேசத்திற்கு அழைத்து வர முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசு

இதற்கு முந்தைய வங்கதேச தேசியவாத கட்சி நடத்திய கூட்டணி ஆட்சியின்போது (2001 - 2006) இரு நாட்டு உறவும் மோசமடையத் துவங்கியது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஊடுருவல்கள் அதிகரிக்க டாக்கா வழிவகை செய்வதாக டெல்லி குற்றம் சுமத்தியது. ஆனால் அந்த ஆட்சி அதை முற்றிலுமாக நிராகரித்தது.

எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் வங்கதேச தேசியவாத கட்சியை இந்தியா அணுக வேண்டும் என்று வங்கதேசத்தில் இருக்கும் பலரும் கூறுகின்றனர்.

"ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு இந்திய அரசு அதிகாரிகளும் எங்களைச் சந்திக்கவில்லை. இதற்குக் காரணம் என்வென்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறுகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மிர்ஸா ஃபக்ருல் இஸ்லாம் அலம்கிர்.

ஆனால் இந்தச் சூழலுக்கு முற்றிலும் மாறான வகையில் டாக்காவில் இருக்கும் சீன தூதர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரக அலுவலர்கள் அனைவரும் அக்கட்சியினருடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்குள்ளான இஸ்லாமியவாதிகள் பலர், ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு ஏற்பட்ட பாதுகாப்பு குறைப்பாட்டைக் காரணமாக வைத்து மத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஏற்கெனவே இந்தியா பலமுறை தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறது.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முக்கிய நபர்கள்

வங்கதேச மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தில் மருத்துவமனைகள், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டது

கடந்த சில வாரங்களாக, உள்ளூரில் மஸர்கள் என்று அழைக்கப்படும் சூஃபிகளின் வழிபாட்டுத் தலங்களும் இஸ்லாமியவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது. வங்கதேசத்தில் சன்னி இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். தீவிர இஸ்லாமியவாதிகள், புனிதத் தலங்கள், முக்கியமான நபர்களின் கல்லறைகளை வணங்குதல் போன்றவற்றை இஸ்லாமிய மத கொள்கைகளுக்குப் புறம்பானது என்று நம்புகின்றனர்.

"சில நாட்களுக்கு முன்பு இங்கே வந்த ஒரு கூட்டத்தினர் என்னுடைய மாமனாரின் கல்லறையை உடைத்து நாசம் செய்தனர். மேலும் இஸ்லாத்திற்கு மாறாக எந்தவிதமான சடங்குகளும் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்," என்கிறார் அலி கவஜா அலி பக்லா பிர் என்ற தலத்தின் பராமரிப்பாளரின் மனைவி தம்மன்னா அக்தார்.

வங்கதேச மத விவகாரத்துறையின் ஆலோசகர், ஏ.எஃப்.எம். காலித் ஹொசைன், மத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தங்களின் இடத்தை மீண்டும் நிறுவும் முயற்சியில் சிறிதளவேனும் இஸ்லாமியவாதிகள் ஈடுபட்டாலும் அது டெல்லியில் எச்சரிக்கையை ஏற்படுத்தும்.

கடந்த வாரங்களில் தண்டனை அனுபவித்து வந்த இஸ்லாமியவாத கலகக்காரர் ஒருவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த மாதம் சிறையில் ஏற்பட்ட போராட்டத்தின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 9 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர். அதில் நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசீனாவின் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட அன்சருல்லா பங்களா இயக்கத்தின் தலைவர் ஜஷிமுதீன் ரஹ்மானி கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இறை மறுப்பாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் அவர். அவருடைய தண்டனைக் காலம் முடிந்த பிறகும், பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

"கடந்த மாதம் மட்டும் சில போராட்டக்காரர்கள் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களில் சிலரை இந்தியாவுக்கும் தெரியும்," என்று முன்னாள் அரசு அதிகாரி தாஸ் கூறினார். மேலும் இதை மிகவும் முக்கியமான விவகாரம் என்றும் குறிப்பிட்டார்.

கூடுதல் செய்திகளுக்காக பிபிசி பங்காளி சேவையில் இருந்து முகிமுல் அஷான், டாக்கா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)