ரஷ்யா - யுக்ரேன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமா?

இந்தியா, ரஷ்யா, விளாதிமிர் புதின், அஜித் தோவால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அஜித் தோவல்

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 12-ஆம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் வழக்கமாக தனக்கு இணையான தலைவர்களை மட்டுமே சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை அவர் அஜித் தோவலை சந்தித்துப் பேசியுள்ளார். புதின், கடந்த ஆண்டும் மாஸ்கோவில் அஜித் தோவலை சந்தித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோதி ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் தோவல்-புதின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் வீடியோவை ரஷ்ய செய்தி நிறுவனமான 'ஸ்புட்னிக்' சமூக ஊடகங்களில் வெளியிட்டு, “யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான பிரதமர் மோதியின் சந்திப்பு குறித்து தோவல் புதினிடம் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியா, ரஷ்யா, விளாதிமிர் புதின், அஜித் தோவால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிமிட்ரி பெஸ்கோவ் உடன் புதின்

புதினிடம் தோவல் என்ன பேசினார்?

அந்த வீடியோவில் தோவல், ​​“பிரதமர் மோதி உங்களிடம் தொலைபேசி உரையாடலில் கூறியது போல், யுக்ரேன் பயணம் மற்றும் யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது குறித்து உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறார். நான் இங்கு வந்ததற்கு முக்கிய காரணம் அந்த உரையாடலைப் பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்று பிரதமர் மோதி விரும்பினார்,” என்று கூறுகிறார்.

தோவல் மேலும், “பேச்சுவார்த்தை மூடப்பட்ட அறையில் நடந்தது. இரு நாட்டுத் தலைவர்கள் மட்டுமே இருந்தனர். ஜெலென்ஸ்கியுடன் இரண்டு பேர் இருந்தனர். பிரதமர் மோதியுடன் நானும் இருந்தேன். அந்த உரையாடலுக்கு நானும் சாட்சி,” என்றார்.

அக்டோபர் 22-ஆம் தேதி ரஷ்ய நகரம் கசானில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், பிரதமர் மோதி உடனான தனிப்பட்ட இருதரப்பு சந்திப்புக்கு இந்த உரையாடலின்போது புதின் முன்மொழிந்தார் என ரஷ்யாவின் ஆர்.டி செய்தி சேனல் கூறுகிறது

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வெற்றிகரமான கூட்டாண்மை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யுக்ரேனில் இருந்து திரும்பிய பிறகு பிரதமர் மோதியும் புதினும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது பிரதமர் மோதி, தனது யுக்ரேன் பயணம் குறித்து புதினிடம் பேசினார்.

அண்மையில் நடந்த தோவல்-புதின் சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தியா, ரஷ்யா, விளாதிமிர் புதின், அஜித் தோவால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அஜித் தோவல் மற்றும் புதின்

ரஷ்யா தரப்பு சொல்வது என்ன?

தோவல் உடனான சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்-விடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தோவல், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் இருந்து ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்கிறாரா என்று செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த புதினின் செய்தித் தொடர்பாளர், அப்படி எந்தச் செய்தியும் கொடுக்கவில்லை என்றார்.

யுக்ரேனில் நடந்து வரும் போருக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தோவல் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக பெஸ்கோவ் கூறினார் என்று ரஷ்யச் செய்தி நிறுவனமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது

பெஸ்கோவ் கூறுகையில், "யுக்ரேனில் நடக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மோதியின் பார்வையை தோவல் விளக்கினார். எனினும், நாங்கள் தெளிவான சமாதான ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை,” என்றார்.

பிரதமர் மோதி ஆகஸ்ட் 23-ஆம் தேதி யுக்ரேன் சென்றார். இந்தியா- யுக்ரேன் இடையே தூதரக உறவுகளை நிறுவிய பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அது அமைந்திருந்தது.

இந்தப் பயணத்தின் போது, போருக்கு ​​அமைதி வழியில் தீர்வு காண்பது குறித்து பிரதமர் மோதி பேசினார்.

புதின்-தோவல் சந்திப்பின் பின்னணி

பாகிஸ்தானில் உள்ள சர்வதேச அரசியல் ஆய்வாளரான முனைவர் கமர் சீமா, அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளிப் பேராசிரியரான முக்தர் கானிடம், மோதி அரசாங்கத்தில் அஜித் தோவலின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார்.

"இந்தியாவைப் பொறுத்தவரை, ராஜதந்திரத்தில் மூன்று நிலைகள் உள்ளன. முதலில் பிரதமர் மோதியே ராஜதந்திரம் செய்வது. மோதி பயணம் செய்யும் போது, அவரது மனதில் ​​ராஜதந்திரம் உள்ளது. ஜெய்சங்கர் இரண்டாம் நிலை ராஜதந்திரத்தில் ஈடுபடுவார். மூன்றாம் நிலை ராஜதந்திரம், அஜித் தோவல் செய்வது,” என்றார் அவர்.

ரஷ்யாவில் நடந்த அஜித் தோவல்-புதின் சந்திப்பு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்யா-யுக்ரேன் இடையிலான அமைதி ஒப்பந்த பணிகளில் இந்தியா இணையவேண்டும் என ஐரோப்பாவின் பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட இந்தியாவிடம் உறுதியான அமைதி திட்டம் எதுவும் இல்லை என்று ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ கூறியுள்ளது. அதே சமயம், நேரடிப் பேச்சுவார்த்தை இல்லாமல், தூதுவராகச் செயல்பட்டு மோதலைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது எனவும் ‘தி இந்து’ கூறுகிறது

பிரதமர் மோதியும் ஜெலென்ஸ்கியும் இந்த மாத இறுதியில் நியூயார்க் செல்கின்றனர். அங்கு இருவரிடையே சந்திப்பு நடைபெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா - யுக்ரேன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமா?

இந்தியா, ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது.

யுக்ரேன் மீது போர் தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால் இந்தத் தடையை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தது. போரின் போதும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.

இந்தியா, ரஷ்யா, விளாதிமிர் புதின், அஜித் தோவால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா, ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன

ஜூலை மாதம் ரஷ்யா சென்ற பிரதமர் மோதி, புதினை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். ஜெலென்ஸ்கி உட்பட பல மேற்கத்திய நாட்டு தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், பிரதமர் மோதி யுக்ரேன் சென்ற போது, ஜெலென்ஸ்கியையும் ஆரத்தழுவி அவரது தோள் மீது கைப்போட்டுப் பேசினார். பல வல்லுநர்கள் நடுநிலையாக இருக்க இந்தியா பின்பற்றும் கொள்கையாக இதனைக் கண்டனர்.

ஆனால், இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இந்திய ​​வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “உலகின் பல்வேறு பகுதிகளில், மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும் போது, அன்புடன் கட்டிப்பிடித்துக் கொள்வது வழக்கம். உங்கள் கலாசாரத்தில் இந்த நடைமுறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது எங்கள் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்வேன். அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்த போதும், பிரதமர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்,” என்று அவர் விவரித்தார்.

இருப்பினும், ராண்ட் கார்ப்பரேஷனின் சிந்தனைக் கூடத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் ஜே கிராஸ்மேன், பிரதமர் மோதி ஜெலென்ஸ்கியைக் கட்டிப்பிடிக்கும் படத்தைப் பகிர்ந்து, “மோதி அனைவரையும் கட்டிப்பிடித்து மரியாதையை வெளிப்படுத்துவது சரியல்ல. அதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஏதேனும் முன்மொழிவு அல்லது விவாதம் நடந்த போதெல்லாம், இந்தியா அவற்றிலிருந்து விலகியே இருந்தது.

அதே சமயம், இந்தியா யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021-22 நிதியாண்டில் இந்தியாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே சுமார் 3.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 28,000 கோடி ரூபாய்) வர்த்தகம் நடந்துள்ளது.

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய்) வர்த்தகம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரும் காலத்தில் 100 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோதியை புதின் வெளிப்படையாகவே புகழ்ந்து வருகிறார்.

இந்தியா, ரஷ்யா, விளாதிமிர் புதின், அஜித் தோவால்

பட மூலாதாரம், ANI

யுக்ரேன் விஷயத்தில் புதின் யாரை நம்புகிறார்?

செப்டம்பர் 5-ஆம் தேதியன்று புதின், “யுக்ரேனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன,” என்றார்.

"இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளை நாங்கள் மதிக்கிறோம். முக்கியமாக இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் ஆகியவை மோதலை முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றன,” என்று புதின் கூறியிருந்தார்.

“இந்த விவகாரம் குறித்து, நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்,” என்று புதின் கூறியிருந்தார். இந்தச் சிக்கலான செயல்முறையின் அனைத்து நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள இந்த நாடுகளின் தலைவர்கள் தீவிர முயற்சி செய்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாடுகளுடன் ரஷ்யா நம்பகமான உறவைக் கொண்டுள்ளது,” என்று புதின் கூறினார்.

பிரதமர் மோதி பல சந்தர்ப்பங்களில் இது போருக்கான நேரம் அல்ல என்று கூறியிருக்கிறார். 2022-இல் தாஷ்கண்டில் புதினிடம் இதையே அவர் வலியுறுத்தினார்.

சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த தோவல்

சீனாவின் பார்வையில் தோவலின் ரஷ்யப் பயணம் முக்கியமானதாக கருதப்படலாம்.

ரஷ்யப் பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயையும் தோவல் சந்தித்தார். இதன் போது, இந்தியச்-சீன எல்லையில் இருந்து ராணுவம் விலகுவது குறித்தும் பேசப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, எல்லையில் ​​நான்கு ஆண்டு கால ராணுவ பிரச்னையை தீர்ப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வாங் யீயும் வியட்நாமில் சந்தித்துப் பேசினர்.

பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோதி இடையிலான சந்திப்புக்கான வாய்ப்புகள் குறித்து, வாங் மற்றும் தோவல் இடையேயான சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக் குறித்து வெளியான வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இருதரப்பு உறவுகள் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியமானது என்பதை இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. எல்லையில் அமைதி மற்றும் மரியாதையை நிலைநாட்டுவது குறித்து தோவல் பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செப்டம்பர் 12-ஆம் தேதி, ஜெனிவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெய்சங்கர், "இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையேயான 75% பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. முட்டுக்கட்டை நிலையில் இருந்து இரு தரப்பு ராணுவமும் திரும்பி, அமைதி நிலவினால் இந்தியா-சீனா உறவுகளை சீராக்குவதற்கான மற்ற சாத்தியக்கூறுகளையும் யோசிக்கலாம்,” என்றார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)