அமெரிக்க அதிபர் தேர்தலில் முந்துவது யார்? கருத்துக் கணிப்பு முடிவுகளை நம்பலாமா?

- எழுதியவர், விஷுவல் ஜர்னலிசம் மற்றும் தரவு குழு
- பதவி, பிபிசி செய்திகள்
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதம் அதிபர் ஜோ பைடன் விலகி, தனது இடத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்குத் தனது ஆதரவை உறுதி செய்தபிறகு எல்லாமே மாறிப்போனது.
இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும்? டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பாரா? அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரைப் பெறப் போகிறதா?
தேர்தல் நாள் நெருங்கநெருங்க, நாங்கள் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்போம். அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம், அதிபர் மாளிகைக்கான பந்தயத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் கூர்ந்து கண்காணிக்க உள்ளோம்.

கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்?
கமலா ஹாரிஸ் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் பந்தயத்தில் நுழைந்ததில் இருந்து தேசிய கருத்துகணிப்புச் சராசரியில் டிரம்பை விட சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார். மேலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.
கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தின் முதல் சில வாரங்களில் தனது கருத்துகணிப்பு எண்ணிக்கையில் சற்று ஏற்றத்தைக் கண்டார். ஆகஸ்ட் மாத இறுதியில் சுமார் நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை பெற்றார்.
செப்டம்பர் 10ஆம் தேதி இரு வேட்பாளர்களுக்கிடையில் நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தை சுமார் 70 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். செப்டம்பர் மாதம் வரை இந்த எண்ணிக்கை நிலையானதாக இருந்தன.
கடந்த சில நாட்களாக அவர்களின் புள்ளிவிவரங்களின் இடைவெளி மிகவும் நெருணக்கமானதாக இருக்கிறது. கீழே உள்ள கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கருத்துக்கணிப்பின் சராசரிகளைக் காட்டும் போக்குக் கோடுகளுடன் தனிப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகள் நாடு முழுவதும் ஒரு வேட்பாளர் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பதை காட்ட உதவுவதாக இருந்தாலும், அவை தேர்தல் முடிவுகளை கணிக்க ஒரு துல்லியமான வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏனென்றால், அமெரிக்கா எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழு முறையைப் பயன்படுத்து அதிபரை தேர்ந்தெடுகிறது. அதில் ஒவ்வோரு மாகாணத்தின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே வாக்காளர் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைகிறது. மொத்தம் 538 வாக்காளர் குழு வாக்குகள் உள்ளன, எனவே ஒரு வேட்பாளர் வெற்றிபெற 270 வாக்குகளை பெற வேண்டும்.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட எப்போதுமே ஒரே கட்சிக்குத்தான் வாக்களிக்கின்றன. எனவே இரு வேட்பாளர்களுமே வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் மாகாணங்களாக ஒருசில மட்டுமே உள்ளன. தேர்தலில் வெற்றி தோல்வியை இந்த மாகாணங்கள்தான் தீர்மானிக்கும் என்பதால் இவை ’போர்க்கள மாகாணங்கள்’ (Battleground states) என்று அழைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஸ்விங் மாகாணங்களில் வெற்றி யாருக்கு?
இப்போதைய நிலையை பார்த்தால், ஏழு மாகாணங்களில் கருத்துக்கணிப்பு முடிவுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன. எனவே உண்மையில் யார் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது தற்போதைக்குக் கடினம்.
தேசியக் கருத்துக்கணிப்புகளின் எண்ணிக்கையைவிட மாகாண கருத்துக்கணிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஆய்வு செய்ய எங்களிடம் குறைவான தரவே உள்ளது. மேலும், ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் சிறிய பிழைக்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது ஆதரவு எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அரிசோனா, ஜார்ஜியா, நெவாடா மற்றும் வட கரோலினாவில் முன்னிலை வாக்கிப்பவர்கள் மாறிவந்தன, ஆனால் தற்போது அங்கு டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
மற்ற மூன்று மாகாணங்களில் - மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் - ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இரண்டு அல்லது மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது அங்கு இருவருக்கும் இடையேயான போட்டி நிகவும் இறுக்கமாக நிலையில் உள்ளது. தற்போது, டிரம்ப் பென்சில்வேனியாவில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராவதற்கு முன்புவரை, இந்த மூன்று மாகாணங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக இருந்தன. ஆனால் 2016-இல் குடியரசுக்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இந்த மாகாணங்கள் டிரம்ப் அதிபராவதற்கு வழி அமைத்துத் தந்தன.
2020-இல் பைடன் இந்த மாகாணங்களை தன் பக்கம் திருப்புவதில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டின் தேர்தலில் கமலா ஹாரிஸாலும் அதைச் செய்ய முடிந்தால் வெற்றிப்பாதையில் அவர் முன்னேறுவார்.
கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆனதில் இருந்து போட்டி எப்படி மாறிவிட்டது என்பதற்கான ஒரு அறிகுறி என்னவென்றால், ஜோ பைடன் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேறிய நாளில் அவர் இந்த ஏழு மாகாணங்களில் டிரம்ப்பைக் காட்டிலும் சராசரியாக 5% புள்ளிகள் பின்தங்கி இருந்தார்.
பென்சில்வேனியாவில்,பைடன் விலகியபோது சுமார் 4.5 சதவீத புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். இரண்டு வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கும் இது ஒரு முக்கிய மாகாணமாகும், ஏனெனில் இது ஏழு மாகாணங்களை விட இங்கு அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் குழுவின் வாக்குகள் உள்ளன, எனவே வெற்றி பெறுவதற்கு தேவையான 270 வாக்குகளை அடைவதை எளிதாக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
கருத்துக்கணிப்பு சராசரிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
மேலே உள்ள விளக்கப் படங்களில் நாங்கள் பயன்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள், அமெரிக்கச் செய்தி நெட்வொர்க் ஏபிசி நியூஸின் ஒரு பகுதியான வாக்கெடுப்பு பகுப்பாய்வு இணையதளம் 538 மூலம் உருவாக்கப்பட்ட சராசரிகள் ஆகும்.
இவற்றை உருவாக்க, அமெரிக்க தேசிய அளவிலும், முக்கிய மாகாணங்களிலும் பல்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் தரவுகளை 538 இணையதளம் திரட்டுகிறது.
தரக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக '538' இணையதளம், சில அளவுகோல்களை பூர்த்திசெய்யும் நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை மட்டுமே தரவுகளுக்காக எடுத்துக்கொள்கிறது. எத்தனை பேர் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டனர் என்பதில் வெளிப்படைத்தன்மை, எப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது (தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, ஆன்லைன் முதலியன) போன்றவை இவற்றில் அடங்கும்.
கருத்துக்கணிப்பை நம்பலாமா?
தற்போது, தேசிய மற்றும் 7 போர்க்கள மாகாணங்களில் கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் ஒருசில சதவிகித புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. போட்டி இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போது, வெற்றியாளரைக் கணிப்பது மிகவும் கடினம்.
2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலுமே கருத்துக்கணிப்புகள் டிரம்பின் ஆதரவைக் குறைத்து மதிப்பிட்டன. கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இந்தச் சிக்கலை சரிசெய்வதற்குப் பல வழிகளில் முயற்சிக்கின்றன. இதில் கலந்துகொண்ட வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களின் எண்ணத்தைத் தனது கருத்துக்கணிப்பில் சரியாகப் பிரதிபலிக்கச்செய்வது இதில் அடங்கும்.
அதை அவ்வளவு துல்லியமாகச் செய்வது மிகவும் கடினம். நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உண்மையில் யார் வருவார்கள் என்பது போன்ற பிற காரணிகளைப் பற்றிக் கருத்துக்கணிப்பு நடத்துவோர் ஊகம் தான் செய்தாக வேண்டும்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
எழுத்து மற்றும் தயாரிப்பு: மைக் ஹில்ஸ் மற்றும் லிபி ரோஜர்ஸ். வடிவமைப்பு: ஜோய் ரோக்சாஸ்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












