அமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் முந்துவது யார்?

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப்
    • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்கத் தேர்தலில் இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சில மாகாணங்களை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.

அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே உண்மையிலேயே கடுமையான போட்டி நிலவுவது ஒரு சில மாகாணங்களில் மட்டுமே என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதில் ஏழு மாகாணங்கள் - அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.

தேர்தல் நெருங்கி வருவதால், இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப் படுத்தியுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

அரிசோனா

1990களுக்குப் பிறகு முதன் முறையாக இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியையும் கைப்பற்றியது.

இந்த மாகாணம் மெக்சிகோவுடன் நூற்றுக்கணக்கான மைல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டின் குடியேற்ற கொள்கைகள் தொடர்பான விவாதத்தின் மையப் புள்ளியாக இந்த மாகாணம் மாறியுள்ளது.

சமீபத்திய மாதங்களில் இங்கு எல்லை தாண்டி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எல்லையில் நிலவும் சிக்கலான பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் கமலா ஹாரிஸை அதிபர் ஜோ பைடன் நியமித்தார். குடியேற்ற கொள்கை தொடர்பான கமலா ஹாரிஸின் கருத்துக்களை டிரம்ப் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் "மிகப்பெரிய அளவிலான வெளியேற்றும் நடவடிக்கையை" மேற்கொள்ளப் போவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார்.

அரிசோனாவில் கருக்கலைப்பு தொடர்பான ஒரு சர்ச்சையும் நிலவுகிறது. இந்த மாகாணத்தில் குடியரசுக் கட்சியினர் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு பழமையான, கருக்கலைப்பு தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டில் ரத்து செய்ததில் இருந்து இந்த பிரச்னை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

ஜார்ஜியா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜார்ஜியாவில் ஒரு வழக்கு உட்பட டிரம்ப் நான்கு கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார்

2020 தேர்தலில் ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியில், தேர்தல் நடைமுறையில் குறுக்கீடு செய்ததாக டிரம்ப் மீது வழக்கி பதிவானது. அவர் எதிர்கொள்ளும் 4 குற்றவியல் வழக்குகளில் இதுவும் ஒன்று. டிரம்ப் ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார், மீதமுள்ள வழக்குகள் நடந்து வருகின்றன.

டிரம்பும் மற்ற 18 பேரும் மாகாணத்தில் பைடன் வெற்றியை முறியடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார். இந்த வழக்கு தேர்தலுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை.

ஜார்ஜியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இது நாட்டின் மிகப்பெரிய கறுப்பினத்தவர் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில் பைடன் பெற்ற வெற்றியில் இந்த மாகாணம் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் கறுப்பின வாக்காளர்களிடையே பைடன் மீதான சில ஏமாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் கமலா ஹாரிஸின் பிரசாரக் குழு இவர்களின் ஆதரவை உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறது.

மிச்சிகன்

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கு விவகாரத்தில் அதிபரின் கொள்கைகள் தொடர்பாக மிச்சிகனில் பின்னடைவை எதிர்கொண்டார்

கிரேட் லேக்ஸ் மாகாணம் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளருக்கு தான் அதிக வாக்குகள் அளித்திருந்தது.

2020 இல் பைடனை ஆதரித்த போதிலும், காஸாவில் இஸ்ரேலை அவர் ஆதரித்ததால் இங்கு அதிருப்தி நிலவியது.

பிப்ரவரியில் மிச்சிகனின் ஜனநாயகக் கட்சியின் முதன்மைப் போட்டியின் போது, 100,000க்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டில் "உறுதியற்ற" (uncommitted) என்ற முடிவை தேர்ந்தெடுத்தனர். இது அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது.

மிச்சிகன் குறிப்பிடத்தக்க வகையில் நாட்டின் மிகப்பெரிய அரபு-அமெரிக்கர்களைக் கொண்டுள்ளது. இது பைடனுக்கு ஆதரவு கொடுப்பதில் சிக்கலை கொண்டுள்ளது.

ஆனால் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

டிரம்ப் இந்த மாகாணத்தினருக்கு ஏற்றவாறு முக்கியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், காஸாவில் உள்ள ஹமாஸ் மீதான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நெவாடா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெவாடா கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தது.

கடந்த பல தேர்தல்களில் இந்த `சில்வர் ஸ்டேட்’, ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்துள்ளது. ஆனால் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக திரும்பும் அறிகுறிகளும் உள்ளன.

கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனமான `538’ வெளியிட்ட சமீபத்திய முடிவின் படி, அதிபர் பைடனை விட டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டின. ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆனதில் இருந்து முன்னிலை நிலவரம் மாறிவிட்டது.

ஜனநாயகக் கட்சியினர் இளைய மற்றும் பலதரப்பட்ட வாக்காளர்களை ஈர்க்கும் ஒரு வேட்பாளர் அந்த இடைவெளியை சரி செய்வார் என்று நம்பினர்.

இரு வேட்பாளர்களும் மாநிலத்தில் கணிசமாக வசிக்கும் லத்தீன் இனத்தவரை வெல்ல போட்டியிடுகின்றனர்.

பைடன் அதிபராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்தது. ஆனாலும், கோவிட் சூழலுக்கு பின்னர் இழப்புகளில் இருந்து மீள்வது மற்ற மாகாணங்களை விட நெவாடா பின்தங்கியுள்ளது.

சமீபத்திய அமெரிக்க அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கலிபோர்னியா மற்றும் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக, நெவாடாவில் 5.1% என்ற அளவில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிக் குறைப்புகள் மற்றும் குறைவான விதிமுறைகள் என்ற தனது இலக்கை மீண்டும் நிலைநிறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

வட கரோலினா

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வான பிறகு, `தார் ஹீல்’ என்று அழைக்கப்படும் வட கரோலினா மாகாணத்தில் கருத்துக் கணிப்புகள் இறுக்கமடைந்ததாகத் தெரிகிறது. சில ஆய்வாளர்கள் இப்போது இந்த பகுதியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்று தெரியாத சூழல் நிலவுவதாக கூறுகின்றனர்.

ஜூலை மாதம் டிரம்ப் மீது தாக்குதல் நடந்த பின்னர் அவர் மீண்டும் பிரசாரத்தை தொடர தேர்ந்தெடுத்த இடம் வட கரோலினா மாகாணம்.

"இந்த மாகாணம் வெற்றியை சாத்தியப்படுத்தும் மிகப் பெரிய மாகாணம்," என்று அவர் பிரசார கூட்டத்தில் பேசினார்.

தங்கள் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியினர் தங்கள் கட்சி மாநாட்டின் இறுதி இரவில் மாகாண கவர்னர் ராய் கூப்பருக்கு ஒரு மேடை கொடுக்க முடிவு செய்தனர்.

வடக்கு கரோலினா ஜார்ஜியாவின் எல்லையாக உள்ளது. மேலும் மற்றொரு சன் பெல்ட் (Sun Belt) மாகாணமான அரிசோனாவை போலவே தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள சில முக்கிய பிரச்னைகளை கொண்டுள்ளது.

2020 இல் வட கரோலினாவில் அதிக வாக்குகளை பெற்ற டிரம்ப், வெறும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வென்றார். இது இந்த "ஊதா" மாகாணம் என்று கருதப்படுகிறது. அதாவது குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சி இரண்டில் எது வேண்டுமானாலும் வெல்ல வாய்ப்புள்ள மாகாணம் இது.

பென்சில்வேனியா

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த பேரணியின் போது, ​​டிரம்ப் படுகொலை முயற்சியில் உயிர் தப்பினார்.

டொனால்ட் டிரம்ப் மீது படுகொலை முயற்சி நடத்தப்பட்ட இந்த முக்கிய மாகாணத்தில் இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2020 தேர்தலில் பைடனை ஆதரித்த மாகாணங்களில் இது முக்கியமானது. பைடன் வளர்ந்தது இங்கு தான். தொழிலாளர் வர்க்க நகரமான ஸ்க்ராண்டனுடன் அவருக்கு ஆழ்ந்த உணர்வு ரீதியான தொடர்பு உள்ளது.

பொருளாதாரம் இங்கே ஒரு முக்கிய பிரச்னை. பைடன் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்த போது இங்கு அதிக தாக்கம் ஏற்பட்டது. பின்னர் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தது.

பணவீக்கத்தின் விளைவாக வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அமெரிக்கர்கள் அனைவரும் அனுபவித்திருந்தாலும், பென்சில்வேனிய மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மளிகைப் பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட இங்கு வேகமாக உயர்ந்துள்ளது என்று சந்தை நுண்ணறிவு வழங்குநரான டேட்டாசெம்பிளி தெரிவித்துள்ளது.

பென்சில்வேனியாவின் மற்ற பகுதிகளுக்கான `பெல்வெதர்’ கவுண்டியான எரே ( Erie) என்னும் பகுதியில் மக்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை பிபிசி முன்பு தெரிவித்தது, அங்கு எட்டு பேரில் ஒருவர் "உணவுக்கு உத்தரவாதம் இல்லாதவர்கள்" என்று கருதப்படுகிறார்கள்.

அதிக பணவீக்கம் அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிசுக்கான ஆதரவு தளத்தை பாதிக்கலாம். பைடன் ஆட்சியின் பொருளாதாரத்தை முன்வைத்து டிரம்ப், கமலா ஹாரிஸை விமர்சித்துள்ளார்.

விஸ்கான்சின்

கமலா ஹாரிஸ் - டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, குடியரசுக் கட்சியினர் தங்கள் 2024 மாநாட்டை நடத்த மில்வாக்கியைத் தேர்ந்தெடுத்தனர்

2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளரை 20,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாகாணம் தேர்ந்தெடுத்தது.

பெரிய இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யும் மூன்றாம் தரப்பு வேட்பாளர்களால் இதுபோன்ற மாகாணங்களில் ஏற்படுத்த முடியும் என்று ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சுயேச்சை வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருக்கு கணிசமான ஆதரவு இருப்பது கமலா ஹாரிஸ் அல்லது டிரம்பின் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கலாம் என்று கருத்து கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை இங்கே வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்தக் கட்சி மாகாணத் தேர்தல் சட்டங்களுக்கு இணங்கவில்லை என்று கூறி, இடதுசாரி சார்பான கல்வியாளரான கார்னல் வெஸ்ட் மீது புகாரையும் ஜனநாயகக் கட்சி பதிவு செய்துள்ளது.

டிரம்ப் அந்த மாகாணத்தை "உண்மையில் முக்கியமானது... நாங்கள் விஸ்கான்சினை வென்றால், முழு நாட்டையும் வெல்வோம்" என்று விவரித்தார். குடியரசுக் கட்சியின் கோடைக் கால தேசிய மாநாடு மில்வாக்கி நகரில் நடைபெற்றது.

கமலா ஹாரிஸ் தன் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வான போது, இங்கு தான் முதன்முதலில் பிரசாரம் மேற்கொண்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)