கூகுள், பேஸ்புக் ஆதிக்கத்தை தகர்க்குமா ரிலையன்ஸ்? டிஸ்னியுடன் இணைந்து மெகா திட்டம்

ரிலையன்ஸ் - டிஸ்னி கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், அருணோதய் முகர்ஜி
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

தி பியர், சக்சஷன், டெட்பூல், பிக் பாஸ் போன்ற அனைத்து சீரிஸ்களையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒரே தளத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டா? இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் மெகா கூட்டணி ஒன்று நடந்தால் இது ஒரு பொழுதுபோக்கு துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸும், பொழுதுபோக்குத் துறையின் ஜாம்பவானான வால்ட் டிஸ்னியும் தற்போது இணைய இருப்பதாக வெளியான தகவல் தான் இந்த உற்சாகத்திற்கு காரணம். ஆனால், இந்த கூட்டணி, இந்த துறையில் அவர்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகை செய்யுமா என்ற கவலைகளும் வெளிப்பட்டு வருகிறது.

8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த புதிய ஒப்பந்தம், இந்தியாவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனத்தை உருவாக்க வழி வகை செய்யும். இது இந்தியாவில் உள்ள 40% தொலைக்காட்சி சந்தையை வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120 சேனல்கள் மூலம் 75 கோடி பார்வையாளர்களை அடைவதையும், விளம்பரத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதும் தான் இந்த நிறுவனத்தின் இலக்காக இருக்கும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் டிஸ்னி நிறுவனம் சவால் மிக்க இந்திய சந்தையில் அழுத்தமாக கால் பதிக்க இந்த கூட்டணி உதவும். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், சோனி மற்றும் இதர 50-க்கும் மேற்பட்ட ஒடிடி தளங்களுக்கு சவால் விடும் வகையில் புதிய பொழுதுபோக்கு செயலியையும் அறிமுகம் செய்ய உள்ளது இந்த கூட்டணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரிலையன்ஸ் - டிஸ்னி கூட்டணி

பட மூலாதாரம், AFP

டிஸ்னி நிறுவனம் ஏற்கனவே 8 மொழிகளில் 70 டிவி சேனல்களில் ஸ்டார் இந்தியா குழுமத்தை இயக்கி வருகிறது. ரிலையன்ஸ் தன்னுடைய வியாகாம்18 மூலமாக 8 மொழிகளில் 38 சேனல்களை இயக்கி வருகிறது. இவ்விரு நிறுவனங்களும் முறையே ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற சொந்த ஒ.டி.டி. தளங்களைக் கொண்டுள்ளன. கூடுதலாக சொந்தமாக ஸ்டுடியோக்களையும் வைத்துள்ளன.

இவர்களின் செல்வாக்கு இந்தியாவின் பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமைகளை பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவைப் போன்ற கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட நாட்டில் இது முக்கியமான வர்த்தக நிலையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச முதலீடு மற்றும் ஆலோசனை நிறுவனமான எலாரா கேபிட்டலின் கருத்துப்படி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில், இந்திய விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பும் சந்தையில் 75 முதல் 80% பங்கை இந்த கூட்டணி கைப்பற்றலாம்.

இந்த துறையில் குறிப்பாக கிரிக்கெட் போட்டி ஒலிபரப்பும் நிகழ்வில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வகையில் விளம்பர சந்தையில் ஆதிக்கம் செலுத்த இயலும். டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் விளையாட்டு ரசிகர்களுக்கு முக்கிய உந்துதலாக இருக்கும் ஒரு துறையில் வலுவான வளர்ச்சியை இது காட்டுகிறது. இதனை "மிகப்பெரிய மீடியா தாக்கம்" என்று அழைக்கிறார் எலாரா கேபிட்டலின் ஆய்வாளர் கரண் தௌரானி.

பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான் & சல்மான் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான் & சல்மான் கான்

இந்த கூட்டணி, பார்வையாளர்களுக்கு மாறுபட்ட நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை தருவதாக உறுதியளித்தாலும், அது சந்தையில் இந்த நிறுவனங்களுக்கு அதீத சக்தியைக் கொடுக்குமா என்ற கேள்வியை நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

"சந்தையில் ஒரு புதிய எழுச்சியை காணும் ஒரு நிறுவனம், சந்தையில் ஒற்றை இலக்கத்தை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு நிறுவனத்துடன் இணையும் போது எந்த ஒரு போட்டி நிறுவனமும் பொறுமையாக அமர்ந்து அதனை கவனிக்கும்," என்று கே.கே.சர்மா கூறுகிறார். அவர் சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய சந்தையில் போட்டி நிலவுவதை உறுதிப்படுத்தும் கண்காணிப்புக் குழு (Competition commission of India) இணைப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவு தலைவராக பணியாற்றினார்.

இந்த கூட்டணியில் இணையும் நிறுவனங்கள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் போது விளம்பர கட்டணங்களை அதீதமாக உயர்த்த மாட்டோம் என்று இரு நிறுவனங்களும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தகைய உத்தரவாதங்களின் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்று கே.கே.சர்மா குறிப்பிடுகிறார்.

சந்தையை ஒரே நிறுவனம் கட்டுப்படுத்தும் அளவுக்கு (Monopoly) அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டால் அந்த நிறுவனத்தை பிரிக்கவும் சி.சி.ஐ.-க்கு அதிகாரம் உண்டு என்கிறார் அவர்.

ரிலையன்ஸ் - டிஸ்னி கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய விளையாட்டு நிகழ்வுகளை நேரலை செய்யும் சந்தையில் 80% பங்கு வரை இந்த கூட்டணி கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விரிவடைந்து வரும் இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையில், டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தால் அதிகம் லாபமடைகின்றன. இது சந்தையில் அந்த நிறுவனங்கள் அதிக செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

இது சிறிய நிறுவனங்களின் வணிக வருவாயில் சாத்தியமான வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

"இந்திய சந்தையில் ஒரு நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்துவதில் கட்டணத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. சந்தா செலுத்துதல் மூலம் இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் வலைத் தொடர்கள், திரைப்படங்கள், விளையாட்டு, மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் உட்பட பல விசயங்களை பார்வையாளர்களுக்கு வழங்க இயலும்," என்கிறார் தௌரானி.

ஒருங்கிணைந்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் பெரிய தொலைத்தொடர்பு சந்தாதாரர் தளத்தையும் பயன்படுத்தினால், மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் அவர்களின் சந்தா கட்டணத்தை உயர்த்துவது கடினமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

ரிலையன்ஸ் குழுமம் ஒரு சிறப்பான வணிக உத்தியைக் கொண்டுள்ளது, அது இந்திய சந்தையில் சிறப்பாக செயல்பட வழிவகை செய்துள்ளது: இது 2016-இல் ஜியோவை அறிமுகப்படுத்திய போது மொபைல் டேட்டாவை மலிவான கட்டணத்தில் வழங்கியது. ஜியோ சினிமாவின் ஸ்ட்ரீமிங் சந்தா மாதத்திற்கு ரூ. 29க்கும் குறைவு.

இந்த ஒப்பந்தத்திலும், மலிவு விலையில் இணையற்ற சேவைகளை வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

"பிற ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்களின் கட்டணம் மற்றும் செலவு பற்றி கவலைப்படும். அவை தங்களின் சந்தா கட்டணத்தை குறைக்கும் நிர்பந்தம் ஏற்படுமா?" என்ற கேள்வியை எழுப்புகிறார் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை நிபுணர் வனிதா கோஹ்லி-கண்டேகர். குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் ரிலையன்ஸ் உத்தி பொதுவாக போட்டியாளர்களை நிலைகுலையச் செய்கிறது என்று அவர் கூறுகிறார்.

கூகுள், பேஸ்புக் ஆதிக்கத்தை தகர்க்குமா?

ஸ்ட்ரீமிங் துறையில் போட்டியாளர்களைக் கையாளுவது எளிதாக இருக்கலாம். ஆனால் புதிய நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே விரிவாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற மற்ற போட்டியாளர்களிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்ளும்.

இந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் வீடியோ சந்தை விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவின் பிரீமியம் வீடியோ-ஆன்-டிமாண்ட் (VOD) சந்தையில் யூடியூபின் பங்கு 88% என்று மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

எனவே ரிலையன்ஸ்-டிஸ்னி இடையிலான புதிய கூட்டணி செய்தி, திரைப்படம் மற்றும் விளையாட்டு மட்டுமின்றி பெரிய நிறுவனங்களின் டிஜிட்டல் விளம்பர வருவாயையும் தங்களை நோக்கி மடைமாற்றம் செய்யலாம் என்று நம்பப்படுகிறது.

"இப்போது, ​​இது ஒரு சரிக்கு சமமான போட்டி" என்கிறார் வனிதா. "80% டிஜிட்டல் வருவாயானது கூகுள் மற்றும் மெட்டாவுக்கு மட்டுமே செல்கிறது. இறுதியாக, இந்தியாவில் செயல்படும் சில பெரிய உலகளாவிய நிறுவனங்களுக்கு போட்டியாக செயல்பட ஒரு நிறுவனம் உங்களுக்கு வேண்டும்" என்றார் அவர்.

ஆனால் புதிய நிறுவனம் ஏற்கனவே அந்த உயரத்தைக் கொண்டிருக்கும் போது, ​​அது தரமான சேவைகளை வழங்க வேண்டும் என்கிறார். உதாரணமாக, ஸ்ட்ரீமிங் சந்தையானது சந்தாக்களைக் காட்டிலும் பார்வைகளைச் சார்ந்து இருந்தால், புரோகிராமிங் தரம் ஒன்று அல்லது இரண்டு செயலிகளில் மட்டும் நன்றாக இருக்கும், என்று அவர் கூறுகிறார்.

"இது நாம் பொறுத்திருந்து கவனிக்க வேண்டிய விஷயம்" என்றும் மேற்கோள்காட்டினார் வனிதா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)