குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - 47 ஆண்டுகளுக்கு பிறகு யார் என கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Berks County Coroner's Office
- எழுதியவர், நாடின் யூசிப்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மனிதரின் உடல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவின் ஃபோர்ட் வாஷிங்டனைச் சேர்ந்த 27 வயதான நிக்கோலஸ் பால் க்ரூப் என்பவரது சடலம் அது என பெர்க்ஸ் கவுண்டி மரண விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறுதியாக 'மலைமுகடு மனிதர்' என அழைக்கப்படும் க்ரூப்பின் கைரேகைகளைக் கண்டறிந்து, கண்டெடுக்கப்பட்ட உடலின் கைரேகைகளுடன் பொருத்தி பார்த்த பிறகு, உண்மையான அடையாளத்தை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலடெல்பியாவிலிருந்து வடமேற்கே 122 கிமீ தொலைவில் அல்பானி டவுன்ஷிப் என்னும் மலையேற்றப் பகுதி உள்ளது. அங்குள்ள மலை முகடுக்கு கீழே உள்ள ஒரு குகையில் உறைந்த நிலையில் க்ரூப்பின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முடிவுக்கு வந்த மர்மம்
அது க்ரூப்பின் சடலம்தான் என்று காவல்துறை முடிவுக்கு வந்திருப்பது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகால மர்மத்தை தீர்த்து வைத்துள்ளது.
உறைந்த நிலையில் இருந்த சடலத்தை அடையாளம் காண பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அத்தனையும் தோல்வியுற்றது.
அதன் பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புகைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, டிஎன்ஏ சேகரிக்கப்பட்டது.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில், க்ரூப் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் இறந்தது உறுதியானது. வேறு ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் முடிவுக்கு வந்தது.
பற்களின் திசுக்கள் மற்றும் கைரேகைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதனுடன் பொருந்தக்கூடிய எந்த தரவுகளும் கிடைக்கவில்லை
பெர்க்ஸ் கவுண்டி மரண விசாரணை அலுவலக கூற்றுபடி, ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம், க்ரூப்பின் அடையாளத்தை பென்சில்வேனியா காவல்துறையின் துப்பறியும் குழு கண்டறிந்தது.
அவரது கைரேகை காணாமல் போனவர்களுக்கான தேசிய தரவுத்தளமான NamUs- க்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் க்ரூப்பின் அடையாளத்தை அமெரிக்க பெடரல் புலனாய்வு அமைப்பு (ஃஎப்பிஐ) கண்டுபிடித்தது
உரிமை கோரப்படாத உடல்களை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட கணிசமான முயற்சிகளை இந்த கண்டுபிடிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது என மரண விசாரணை அலுவலகம் கூறுகிறது
ஆனால், டிஎன்ஏவுக்காக 2019 ஆம் ஆண்டு உடலைத் தோண்டி எடுத்தது பலனளிக்கவில்லை என்று மரண விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது அவரது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எச்சங்களை மீண்டும் புதைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தில் "நிக்கி" என்று அழைக்கப்படும் க்ரூப், பென்சில்வேனியா ராணுவ தேசிய காவல்துறையில் பணியாற்றினார். மேலும் 1971-ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகினார்
அவரை அடையாளம் காண்பதற்கான எடுக்கப்பட்ட முயற்சிகளை அவரது குடும்பத்தினர் மிகவும் பாராட்டியதாக மரண விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












