உஜ்ஜயினி: பட்டப்பகலில் சாலையோரம் பெண் பாலியல் வன்கொடுமை - தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர், உஜ்ஜயினியில் இருந்து
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தில் சாலையோரத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது.
உஜ்ஜயினியில் கடந்த புதன்கிழமை 28 வயது இளைஞர் ஒருவர், கொய்லா பாதக் சந்திப்பின் நடைபாதையில் பட்டப் பகலில் 40 வயது பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த இடம் உஜ்ஜயினியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். அந்தச் சாலையில் பெட்ரோல் பங்க், சரக் மருத்துவமனை தவிர, ஒரு மதுபானக் கடையும் உள்ளது.
இது நடந்தபோது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், இந்தச் சம்பவத்தைத் தடுக்க யாரும் முயலவில்லை. மேலும், சிலர் அச்சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். இதுதொடர்பான வைரல் வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ், பாஜகவை விமர்சித்துள்ளது. மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி ‘தீய முயற்சிகளை’ மேற்கொள்வதாக பாஜக அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உஜ்ஜயினியில் என்ன நடந்தது?
செப்டம்பர் 4, புதன்கிழமை பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்ததாக உஜ்ஜயினி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடந்த உஜ்ஜயினி பகுதி பரபரப்பாக உள்ளது.
உஜ்ஜயினி காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தெருவோர கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
அன்றைய தினம் இருவரும் சேர்ந்து பேசியவாறு மது அருந்தியுள்ளனர். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் அந்த இளைஞர் கூறிய பிறகே இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பிறகுதான் இச்சம்பவம் நடந்துள்ளது," என்று தெரிவித்தார்.
இதையடுத்து, "376வது பிரிவின் கீழ் பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இதை வீடியோவாக எடுத்துப் பரப்பியவர்கள் யார் என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.

அந்தப் பெண் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஜ்ஜயினிக்கு வந்ததாகவும், அவருக்கு 18 வயது மகன் இருப்பதாகவும், ஆனால் இப்போது அவர் குடும்பத்துடன் வசிக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
சம்பவம் நடைபெற்றபோது அவ்வழியாகச் சென்ற ஒருவர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்ததாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பெண்ணுக்கு போதை தெளிந்த பின்னர், அவருடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாஜக மீது விமர்சனம்
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் நடைபாதையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது," என்று தெரிவித்துள்ளார்.
"இன்று நம் சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது" என ஒட்டுமொத்த நாடும் திகைத்து நிற்பதாகக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, "அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவ்வழியாகச் சென்றவர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். புனித பூமியான உஜ்ஜயினியில் இதுபோன்ற சம்பவம் மனித நேயத்தைக் களங்கப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், ANI
அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி சமூக ஊடகத்தில், “திறந்தவெளி சாலைகளில் பாலியல் வன்புணர்வுகள் தொடங்கியுள்ளன. முதலமைச்சரின் சொந்த ஊரிலேயே நிலைமை இப்படியெனில், மற்ற பகுதிகளின் நிலையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தலித் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான அட்டூழியங்களையும் உணர முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால், ஜிது பட்வாரிக்கு பதிலளிக்கும்போது, மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி ‘தீய முயற்சிகளை’ மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதிவில், “முதலில், குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் இருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, பெண் (புகார்தாரர்) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் ஒருவருக்கொருவர் முன்பே அறிந்தவர்கள். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் சாலையோரத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தின்போது, அவ்வழியாகச் சென்ற மக்கள் அதைத் தடுக்காமல், வீடியோ எடுத்துள்ளனர் என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.
சமூகத்தின் அணுகுமுறை குறித்து கேள்விகள்
உஜ்ஜயினியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 15 வயது சிறுமி அரை நிர்வாணமாக ரத்தத்தில் தோய்ந்தபடி இருந்த வீடியோ ஒன்று வைரலாக பரவியது. வீடியோவில், அந்த பெண் மக்களிடம் உதவி கேட்டு வீடு வீடாக அலைந்து திரிந்தார்.
மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காகப் பணியாற்றும் சமூக ஆர்வலர் அர்ச்சனா சஹாயிடம் சமூகத்தின் இந்த அணுகுமுறை குறித்துப் பேசியபோது, மக்களின் இந்த நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், “பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்புணர்வு சம்பவங்களில், சமூகத்தின் அணுகுமுறை மிகவும் வருத்தமளிக்கிறது. சம்பவத்தை நிறுத்த முயல்வதற்குப் பதிலாக, மக்கள் அதை வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக உள்ளனர்" என்றார்.
"எந்தப் பெண்ணும் இதுபோன்ற சம்பவத்திற்கு சுயநினைவுடன் இருக்கும்போது சம்மதிப்பதில்லை என்பது வீடியோ எடுத்தவருக்கும், அந்த வழியாகச் சென்றவர்களுக்கும் தெரியும். அதன் பிறகும் யாரும் தடுக்க முயலவில்லை. சிலர் வீடியோவும்கூட எடுத்துள்ளனர்," என்றார்.
இத்தகைய சம்பவங்களை வீடியோ எடுத்து, பரப்புபவர்களைத் தண்டிக்கும் விதமாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அர்ச்சனா சஹாய் வலியுறுத்தியுள்ளார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












