ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பிறகு சாமானியரின் சுமை குறைந்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி வரியால் சாதாரண மனிதனின் சுமை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னையில் வருவாய் வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், “சாதாரண மனிதனுக்கு ஜி.எஸ்.டி சுமையல்ல. மாநில அரசுகள் முந்தைய வரி விதிப்பு முறையில் எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்று வெளிப்படையாகக் கூறாததால் சுமை இல்லாதது போலத் தோன்றியிருக்கலாம்,” என்றார்.
ஓர் ஆய்வை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "60% பொருட்கள் 5% ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குள் தான் வருகின்றன. வெறும் 3% பொருட்களுக்கு மட்டுமே 28% வரி விதிக்கப்படுகின்றன" என்றும் பேசினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Nandagopal
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால் தங்கள் தொழில்கள் நலிவடைந்துள்ளன என்கின்றனர், திருப்பூர் ஆடைத் தொழிலில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள்.
"பெரு நிறுவனங்கள் இப்போது ‘அனைத்தும் ஒற்றைக் கூரையின் கீழ்’ என்று நூல் முதல் ஆடைகள் வரை ஒரே நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால், நாங்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் வெளியே வாங்குகிறோம், சில வேலைகளை வெளியே கொடுத்துச் செய்து வாங்கிக் கொள்வோம்.
ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டியுள்ளது. ஒரு பனியன் தயாரிக்க பெரு நிறுவனத்துக்கு ஆகும் செலவைவிட எங்களுக்கு அதிக செலவாகிறது, இதனால் சந்தையில் எங்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டும்," என்கிறார் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நந்தகோபால்.
மறைமுக வரி ஆரோக்கியமானதா?

பட மூலாதாரம், Nagappan
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், "நேரடி வரி என்பதுதான் முற்போக்கு வரி. எந்த மறைமுக வரியாக இருந்தாலும் அது பிற்போக்கானது. நேரடி வரி என்பது ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதற்கேற்றாற் போல் வரி செலுத்துவதாகும். மறைமுக வரி வருமானமே இல்லாதவர்களும், எவ்வளவு வருமானம் பெற்றாலும் அனைவரும் கட்ட வேண்டிய வரி. மறைமுக வரியை எவ்வளவு குறைவாக வசூலிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக விதிக்க வேண்டும். சில பொருட்களை முற்றிலுமாக வரி விதிப்பிலிருந்து விலக்கிட வேண்டும்,” என்கிறார்.
மேலும், "திடீர் மருத்துவச் செலவுகளுக்கு உடனடியாகக் கையில் காசு இல்லாததால்தான் மருத்துவக் காப்பீட்டை மக்கள் பெறுகிறார்கள். அதற்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிப்பதும், தான் உயிரிழந்தால் குடும்பத்துக்குக் கிடைக்கப் போகும் வாழ்நாள் காப்பீட்டுக்கு வரி விதிப்பதும் மிகவும் அபத்தமானது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்," என்கிறார்.
ஜி.எஸ்.டி அமலான பிறகு, வரி விதிப்பு வெளிப்படையாகியுள்ளது என்று கூறும் நாகப்பன், “முதலில் ரூ.100 மதிப்பிலான பொருளுக்கு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வரி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமான வரி தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு அதிக வரி செலுத்துவது போலத் தோன்றும். மேலும், வரி செலுத்தாமல் யாரும் இப்போது ஏய்க்க முடியாது," என்றார்.
ஜி.எஸ்.டி-யை எளிமைப்படுத்த கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images
சென்னையைச் சேர்ந்த 34 வயது ச.வைஷ்ணவி, "ஜி.எஸ்.டி வந்த பிறகு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்று தெரிகிறது. அதனால் வரி குறைந்ததாக அர்த்தம் இல்லை. சானிடரி நாப்கின், ஆடைகள் ஆகியவை விலை உயர்ந்தன. பால், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு முன்பு வரி வசூலிக்கப்படவில்லை," என்கிறார்.
பெரு நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் இருக்கும் சிக்கலான நடைமுறை மிகவும் சவாலாக இருப்பதாக தமிழ்நாடு சென்னை ஓட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர் சீனிவாசராஜா கூறுகிறார்.
"ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வரி விதிக்கப்படுவதால் அதிகப்படியான சிரமங்கள் ஏற்படுகின்றன. சாக்லேட் பர்பி போன்ற உணவுப் பொருட்களை விற்கும்போது சாக்லேட்களுக்கு 18% வரியும் இனிப்புகளுக்கு 5% வரியும் வசூலிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும்.
ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டால், அபராதம் விதிக்கப்படுகிறது. வரி கணக்குகளைப் பராமரிக்கவே தனியாக ஆட்களை நியமித்து அதிக செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி, வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தும் என்று சொன்னார்கள். ஆனால் அது மேலும் சிக்கலாக்கியுள்ளது. இவை எல்லாம் கடைசியில் வாடிக்கையாளர் தலையில்தான் விழும்," என்கிறார்.
‘ஜி.எஸ்.டி-யால் தொழில்கள் நலிந்துவிட்டன’

பட மூலாதாரம், Muthurathinam
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டியுள்ளதால் தொழிலுக்கான பணச் சுழற்சி பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்.
“இடுபொருட்களை வாங்கும்போது செலுத்தப்படும் ஜி.எஸ்.டி வரியை பிறகு கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் தொழில் பாதிக்கிறது. காலையில் பொருள் கொடுத்து மாலையில் பணம் பெறும் தொழில்கள் உள்ளன. அவற்றுக்கான பணப்புழக்கம் குறைந்துவிட்டது. முதலீடு செய்ய வேண்டிய பணத்தில் வரி செலுத்துகிறோம்," என்கிறார்.
"எங்கள் சங்கத்தில் ஜி.எஸ்.டி அமலாவதற்கு முன்பாக, 1,500 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது சுமார் 500 பேர் மட்டுமே உள்ளனர். சிறு குறு நிறுவனங்களுக்கு சிபில் ஸ்கோர் சரியாக இல்லாததால் வங்கிக் கடன் பெறுவதும் சிக்கலாகியுள்ளது," என்கிறார் அவர்.
ஜி.எஸ்.டி வரியை ஏன் எளிமைப்படுத்த முடியவில்லை?

ஜி.எஸ்.டி அமலாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் ஏன் அதை எளிமைப்படுத்த முடியவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி என்கிறார் சென்னை ஐ.ஐ.டி-யின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் சுரேஷ் பாபு.
"ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படும் போது, 'குட் அண்ட் சிம்பிள் டாக்ஸ்' (நல்ல, எளிமையான வரி) என்று விளம்பரப்டுத்தப்படுத்தப்பட்டது. ஆனால், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் ஒருமித்த கருத்து இல்லாததால் அது சாத்தியமாகவில்லை. நிதி விவகாரங்களில் மாநிலங்களின் இடம் சுருங்கிக் கொண்டே வருவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டுவது உண்மையே," என்கிறார்.
ஜி.எஸ்.டி வரி குறித்த தரவுகள், மாநில வாரியாக, பொருட்கள் வாரியாக வெளிப்படையாகக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், "ஜி.எஸ்.டி-யின் தாக்கம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடத்த இது மிகவும் அவசியம்," என்கிறார்.
ஜி.எஸ்.டி சாதாரண மனிதனின் சுமையைக் குறைத்துள்ளதா என்று அவரிடம் கேட்டதற்கு, "சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக உள்ளது. சில பொருட்களின் ஜி.எஸ்.டி வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது," என்று கூறுகிறார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












