சென்னை அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார்? புதிய தகவல்கள்

பட மூலாதாரம், Paramporul Foundation/YT
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவை அங்கே பேச அழைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் இன்று பிற்பகலில் (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா, “மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நாங்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தோம் எனச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என பள்ளியின் தலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி நிர்வாகமோ எங்களிடம் சொல்லவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பாக எங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரும் இதைத் தெரிவித்தோம்” என்று கூறினார்.
மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பள்ளி மேலாண்மைக் குழு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதும், பள்ளி வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதும் தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மகாவிஷ்ணு என்பவர் தனது பேச்சில் சர்ச்சைக்குரிய பல கருத்துகளை முன்வைத்தார்.
இதேபோல சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியிலும் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டார். அங்கு பேசும்போது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ - புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சுக்கு அந்தப் பள்ளியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளியுமான கே.ஷங்கர் என்பவர் அந்தத் தருணத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஆனால், அப்படிக் கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியைவிட நீங்கள் பெரியவரா’ என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், தான் பேசுவது ‘அவருடைய ஈகோவை புண்படுத்தியதால்தான்’ இதுபோல அந்த ஆசிரியர் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பள்ளி முன்பு மாணவர் அமைப்பினர் போராட்டம்
இந்த இரு அரசுப் பள்ளிகளிலும் மகாவிஷ்ணு பேசிய பேச்சின் வீடியோ துணுக்குகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. குறிப்பாக, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5), பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதைப் பகிர்ந்து, அரசுப் பள்ளிகளுக்குள் இதுபோல நடக்க அனுமதித்தது ஏன் எனக் கேள்வியெழுப்பினர்.
மேலும், பல சமுக ஊடகப் பதிவர்கள், மகாவிஷ்ணுவைப் பேச அனுமதித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குரல் எழுப்பினர்.
சமீபத்தில், விநாயகர் சதுர்த்தியை பள்ளிகளில் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியாகி, பள்ளிக் கல்வித் துறை மீது பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் கூடுதல் அனலைக் கிளப்பியது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 6) காலையில் அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்ப வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பள்ளிக்கு முன்பாக ஊடகங்கள் திரண்டிருந்தன.
அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்த போது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினர்.
சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இரண்டு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் போவதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

பட மூலாதாரம், Paramporul Foundation/YT
அமைச்சரின் வாக்குறுதி, முதல்வரின் அறிக்கை
பிறகு நடந்த பள்ளியில் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் கே.ஷங்கருக்குப் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேள்வி எழுப்பிய ஆசிரியரை அவமானப்படுத்தியது தொடர்பாகப் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால், மகாவிஷ்ணு என்ற நபர் எப்படி பள்ளிகளுக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்குப் பதிலளிக்க யாரும் முன்வரவில்லை. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.தமிழரசி, மகாவிஷ்ணு பேசியபோது குறுக்கிட்ட தமிழ் ஆசிரியர் கே.சங்கர், ஆகியோர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர்.
விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரும் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர். அமைச்சரிடம் கேட்டபோது, எப்படி இது ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தான் ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்
அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான இரா.தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மகாவிஷ்ணு தரப்பு சொல்வது என்ன?
இந்த விவகாரம் குறித்து மகாவிஷ்ணுவின் கருத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரது அமைப்பான பரம்பொருள் ஃபவுண்டேஷனில் கேட்டபோது, "அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதால், உடனடியாக இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க முடியவில்லை. விரைவில் இந்த விவகாரத்தில் எங்களது கருத்தைத் தெரிவிப்போம்," என்று மட்டும் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல அரசுப் பள்ளி மாணவர்களிடம், அவர்களது தாய் - தந்தையர் படும் துயரங்கள் குறித்து ஒருவர் பேசுவதும் அதைக் கேட்கும் மாணவர்கள் கதறி அழும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின. அப்போதும் இதேபோலக் கண்டனம் எழுந்தது.

அரசுப் பள்ளிகளில் பேச யாரை அழைக்கலாம்? வரையறை என்ன?
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து விதிமுறைகள் ஏதும் உள்ளனவா?
"அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும்.
"ஆனால், ஒரு நபர் மாணவர்கள் மத்தியில் பேச மிகத் தகுதியானவர் என பள்ளித் தலைமை ஆசிரியர் கருதினால், விதிவிலக்காக அவரே முடிவெடுக்கலாம். ஆனால், வரும் நபரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய வேண்டியது அவரது கடமை. அந்த நிகழ்வுக்கு அவரே பொறுப்பு," என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன்.
மாற்றுத் திறனாளியான கே.ஷங்கரை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிஷ்ணு மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

யார் இந்த மகாவிஷ்ணு?
மகாவிஷ்ணு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலேயே மேடைப் பேச்சில் ஆர்வமுடையவராக இருந்த மகாவிஷ்ணு, தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.
"இந்த (அசத்தப் போவது யாரு?) நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிறகு படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதினார். அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.
"இதற்குப் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார்.
"ஆனால், அந்த முயற்சியில் வெற்றி ஏதும் கிடைக்காத நிலையில், தனது குருவான காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் குறிப்பிடுகிறது.
இதற்குப் பிறகு தன்னை ஆன்மீகவாதியாக முன்னிறுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறார் மகாவிஷ்ணு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












