நேரு தொடங்கி, இந்திரா காந்தி பின்பற்றிய வழக்கத்தை இன்றும் தொடரும் மோதி - என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
அரசுப் பணியில் நேரடி நியமன முறை (lateral entry) பணி நியமனம் தொடர்பாக சமீபத்தில் நிறைய சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து மோதி அரசாங்கம் 45 பதவிகளுக்கான ஆள் சேர்ப்பை நிறுத்தியது. ஆனால் 2018 முதல் இப்போது வரை, மோதி அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான நேரடி நியமனங்களை செய்துள்ளது. 2018க்கு முன்பும் இந்த போக்கு காணப்பட்டது.
இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கவே இது செய்யப்படுகிறது என்று இம்முறை நேரடி நியமனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு முன்னரும் இது தொடர்பான இடஒதுக்கீடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
உண்மையில், இந்த நேரடி நியமன முறை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது.
இந்தியா 1947-இல் சுதந்திரம் அடைந்த போது, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது அமைச்சரவையின் முன் இருந்த மிகப்பெரிய சவால் புதிய நாட்டின் உள் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதுதான்.
அந்த காலகட்டத்தில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) அமைப்பு இந்தியாவில் இல்லை. மேலும் இந்திய குடிமைப்பணி (ஐசிஎஸ்) அதிகாரிகளில் பெரும் பகுதியினர் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தனர்.
புதிதாக சுதந்திரம் பெற்ற இந்திய நாடு போர், வறட்சி மற்றும் இனவாத பதற்றம் போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டது.
ஐசிஎஸ் (பிரிட்டிஷ் காலத்தில் இந்திய சிவில் சர்வீஸ்) க்கான கடைசித் தேர்வு 1943 இல் நடைபெற்றது, சுதந்திரத்திற்குப் பிறகு பல ஐசிஎஸ் அதிகாரிகள் பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவு செய்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நேரடி நியமனம் மூலம் பத்திரிகையாளருக்கு பதவி
காலியாக உள்ள நிர்வாகப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக எந்தத் தேர்வையும் நடத்த முடியாததால் நேரு அரசு இந்தப் பணியிடங்களுக்கு தேர்வின்றி நேரடியாக ஆட்களை நியமிக்க தொடங்கியது.
இவர்களில் பலர் ராணுவம், அகில இந்திய வானொலி மற்றும் வழக்கறிஞர் பணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய வெளியுறவுத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பிஆர்எஸ் மணியின் பெயர் முதலில் இருந்தது.
பிஆர்எஸ் மணி 1939 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி, மெட்ராஸில் விளம்பர உதவியாளராகவும் அறிவிப்பாளராகவும் தனது பணியைத் தொடங்கினார்.
அவரது வானொலிப் பணியின் போது ஜவஹர்லால் நேருவுடன் அறிமுகம் ஏற்பட்டது. 1946 இல் நேரு மலேயாவுக்குச் சென்றபோது, அவருடன் 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' செய்தியாளராக மணி பயணித்தார்.
இந்தோனீசியாவின் அப்போதைய தலைநகரான ஜகார்த்தாவில் இந்திய தூதரகத்தில் செய்தி தொடர்பாளராக இருந்ததே மணி வகித்த முதல் பதவி.
கல்லோல் பட்டாச்சார்ஜி தனது 'Nehru's First Recruits' புத்தகத்தில், "மணியின் முயற்சியால் இந்தோனீசியாவின் ஜனாதிபதி சுகர்னோ இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்" என்று எழுதப்பட்டுள்ளது.
இது எந்தவொரு வெளியுறவு துறை அதிகாரியாலும் செய்ய முடியாத காரியம். பிஆர்எஸ் மணியின் உற்சாகமான முயற்சியால் செய்யப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது.
1995-ஆம் ஆண்டில், இந்தோனீசியா அரசாங்கம் பிஆர்எஸ் மணிக்கு அதன் உயரிய விருதான 'முதல் நிலை சேவை நட்சத்திரம்' வழங்கி கௌரவித்தது.
மணிக்குப் பிறகு அகில இந்திய வானொலியில் ஆங்கிலச் செய்திகளைப் படித்த ரன்பீர் சிங் நேரடியாக இந்திய வெளியுறவுத் துறையில் நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு, அகில இந்திய வானொலியில் பணியாற்றிய ஏ.ஆர்.சேத்தி இந்திய வெளியுறவுத் துறையில் நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், HARPERCOLLINS INDIA
நேரடி நியமனங்கள்
பரமேஷ்வர் நாராயண் ஹக்சர் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். காங்கிரஸ் தலைவரான அவர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
அக்டோபர் 1947இல் நேரு ஆதரவால் வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு நைஜீரியா மற்றும் ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதராக இருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திரா காந்தி பிரதமரானபோது, பரமேஷ்வர் நாராயணை தனது முதன்மைச் செயலாளராக நியமித்தார்.
அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1930களில் பிரிட்டன் சென்றார். அங்கு அவர் பிரபல மானுடவியலாளர் ப்ரோனிஸ்லாவ் மாலினோவ்ஸ்கியின் மேற்பார்வையில் மானுடவியல் பயின்றார் .
ஜெய்ராம் ரமேஷ் ஹக்சரின் வாழ்க்கை வரலாற்றான 'இன்டர்ட்வைன்ட் லைவ்ஸ் பிஎன் ஹக்ஸர் மற்றும் இந்திரா காந்தி'யில் ('Intertwined Lives PN Haksar and Indira Gandhi), "நவீன இந்தியாவின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், அவர் இங்கு மிகவும் சக்திவாய்ந்த அதிகாரியாகவும் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது சக்திவாய்ந்த நபராகவும் இருந்தார்” என்று ஹக்சரைப் பற்றி கூறப்பட்டது.

நெறிமுறைத் தலைவர் மிர்சா ரஷீத் பெக்
வெளியுறவு அமைச்சகத்தில் நேரடியாக நுழைந்த மற்றொரு நபர் மிர்சா ரஷித் அலி பேக். இவர் ராணுவ அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன் பிறகு முகமது அலி ஜின்னாவின் தனிப்பட்ட செயலாளராக ஆனார்.
பாகிஸ்தான் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு விலகினார். 1952-இல், அவர் பிலிப்பைன்ஸில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நெறிமுறைத் தலைவராக (Chief of Protocol) ஆனார்.
புகழ்பெற்ற அவரது பதவிக் காலத்தில், அமெரிக்க அதிபர் ஐசனோவர், சோவியத் ஆட்சியாளர் குருசேவ், சீனப் பிரதமர் சூ என் லாய், வியட்நாம் தலைவர் ஹோசிமின், பிரிட்டனின் ராணி எலிசபெத், எகிப்து அதிபர் கமல் நாசர், சவுதி அரேபியாவின் மன்னர் சவுத், இரானின் ஷா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் போன்ற தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்தார்.
குஷ்வந்த் சிங்கும் நேரடி நியமனம்
சுதந்திரத்திற்குப் பிறகு, கான் அப்துல் கபார் கானின் மருமகன் முகமது யூனுஸை வெளியுறவு அமைச்சகத்திற்கு நேரு நியமித்தார். துருக்கி, இந்தோனீசியா மற்றும் ஸ்பெயினுக்கான இந்திய தூதராக இருந்த யூனுஸ், 1974-இல் வர்த்தக செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் அவர் வர்த்தக கண்காட்சி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இறுதி வரை இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். 1977-இல், இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியடைந்து எம்.பி.யாக இல்லாத போது, `12 வெலிங்டன் கிரசென்ட்’டில் இருந்த தனது வீட்டை அவருக்குக் கொடுத்தார்.
வெளியுறவு அமைச்சகத்தில் நேரடி நியமனம் பெற்றவர்களில் பிரபல கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனும் ஒருவர். அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கிருந்து திரும்பியதும் ஆகாசவாணி அலஹாபாத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஜவஹர்லால் நேருவின் முயற்சியின் பேரில், வெளியுறவு அமைச்சகத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கல்லோல் பட்டாச்சார்ஜி எழுத்துகளின்படி, "பச்சனின் ஆலோசனையின் பேரில்தான் `வெளியுறவு அமைச்சகம்’ என்று பெயரிடப்பட்டது."
உள்துறை அமைச்சகத்திற்கு 'தேஷ் மந்திராலயா' என்று பெயரிட அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.
வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்த பல அதிகாரிகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்தார். அவர்களில் ஒருவர்தான் பின்னர் வெளியுறவு அமைச்சரான நட்வர் சிங்.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குக்கும் நேரடி நியமனம் கிடைத்தது. அப்போது அவர் லாகூரில் வழக்குரைஞராக இருந்தார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் அசிம் ஹுசைனின் ஆலோசனையின் பேரில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்பு அதிகாரி வேலை கிடைத்தது. பின்னர் அவர் அதே பதவியில் கனடாவின் ஒட்டாவா நகருக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு, அவர் பத்திரிகை துறையில் நுழைந்தார். `யோஜனா’, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா', ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு ஆகிய ஊடகங்களின் ஆசிரியராக இருந்து புகழ் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
கே.ஆர்.நாராயணன் நியமனம்
சரோஜினி நாயுடுவின் மகள் லீலாமணி நாயுடுவும் நேரடியாக வெளியுறவு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டவர் தான். 1941 முதல் 1947 வரை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்தார்.
அதன் பிறகு, ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் தத்துவ துறையின் தலைவரானார். அங்கிருந்து வெளியுறவு அமைச்சகத்தின் உயர் பதவிக்கு நேரடியாக நியமிக்கப்பட்டார். 1948 இல் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
நேருவின் பரிந்துரையின் பேரில் வெளியுறவு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டவர்களில் கே.ஆர். நாராயணன், பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவரானார்.
கே.ஆர். நாராயணன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பேராசிரியர் லஸ்கியின் கடிதத்தை நேருவுக்குக் கொண்டு வந்தார், அதில் லஸ்கி அவரைப் பாராட்டி இருந்தார். 1949 இல், பர்மாவில் இரண்டாவது செயலாளராகப் பதவியேற்றார்.
1950 மற்றும் 1958 க்கு இடையில், அவர் டோக்கியோ மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றினார். 1976ல் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
தொழில்துறை மேலாண்மை குழுவின் உருவாக்கம்
ஜவஹர்லால் நேரு 1959 ஆம் ஆண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளை நிரப்ப தொழில்துறை மேலாண்மைக் குழுவை நிறுவினார்.
இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 131 வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மன்டோஷ் சோந்தி, வி கிருஷ்ணமூர்த்தி, முகமது ஃபசல் மற்றும் டி.வி.கபூர் போன்ற பலர் செயலாளர் நிலையை அடைந்தனர். முன்னதாக 1954 ஆம் ஆண்டில், பொருளாதார நிபுணர் ஐ.ஜி படேல் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பொருளாதார துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் பொருளாதாரம் தொடர்பான துறையில் செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஆனார்.
1971-ல் மன்மோகன் சிங் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராகக் கொண்டுவரப்பட்டார். இதற்கு முன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார்.
பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த மன்மோகன் சிங் இந்தியப் பிரதமர் பதவியை அடைந்தார்.
நேரடி நியமனங்கள் தொடர்கிறது

பட மூலாதாரம், Getty Images
ஜனதா ஆட்சியின் போது, ரயில்வே பொறியாளர் எம்.மெனேசஸ் நேரடியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கேரள எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் தலைவரான கே.பி.பி நம்பியாரை எலக்ட்ரானிக்ஸ் செயலாளராக ராஜீவ் காந்தி நியமித்தார். அதே காலகட்டத்தில், சாம் பிட்ரோடா நேரடியாக அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (C-DOT) தலைவராக நியமிக்கப்பட்டார்.
1980கள் மற்றும் 90களில், மாண்டேக் சிங் அலுவாலியா, ராகேஷ் மோகன், விஜய் கேல்கர் மற்றும் பிமல் ஜலான் போன்ற பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கூடுதல் செயலர் மட்டத்தில் அதிகாரத்துவத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் செயலர் நிலைக்கு உயர்ந்தனர்.
அடல் பிஹாரி வாஜ்பேயி காலத்தில் ஆர்.வி.ஷாஹியை தனியார் பணியில் இருந்து நேரடியாக கொண்டு வந்து மின்துறை செயலாளராக ஆக்கினார். மன்மோகன் சிங் ஆட்சியில் கூட நந்தன் நிலேகனி தனியார் நிறுவனமான இன்ஃபோசிஸிலிருந்து அழைத்து வரப்பட்டு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவராக்கப்பட்டார்.
2018 முதல், இணைச் செயலாளர் மட்டத்தில் 63 பேர் அதிகாரத்துவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 35 அதிகாரிகள் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












