தமிழகத்துக்கு பள்ளிக் கல்வி நிதி வழங்காத மத்திய அரசு - புதிய கல்விக் கொள்கையை ஏற்காததாலா?

தமிழ்நாடு, பள்ளிக்கல்வி, மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பி எம் ஶ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்கவில்லை.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார்.

''புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக தமிழகத்திற்கான நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைப்பதா? உடனடியாக வழங்க வேண்டும்'' என பா.ம.க தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தராத காரணத்தால்தான் நிதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாகக் கூறவில்லை என பா.ஜ.க கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம் என்றால் என்ன?

2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) ப்ரீ.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி (60%) ஆகும், இது நான்கு தவணைகளில் விடுவிக்கப்படும், அதே நேரத்தில் மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி (40%) ஆகும். முதல் தவணை ஜூன் மாதத்தில் கிடைத்திருக்க வேண்டும்.

இந்தநிலையில், "மத்திய அரசின் பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது," என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, "தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், இந்த ஆண்டின் தொகை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டின் கடைசி தவணையான ரூ.249 கோடியையும் மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. இதை ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டால், தேசிய கல்விக் கொள்கையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்," என்றார்.

தமிழ்நாடு, பள்ளிக்கல்வி, மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம் மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டமாகும்.

நிதி இல்லாததால் என்ன பாதிப்பு?

நிதி இல்லாததால், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட 15,000 ஆசிரியர்களுக்கு, அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கல்வி, மாணவிகள் விடுதிகளுக்கான கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடவடிக்கைகள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான சம்பளம் என 11 திட்டங்களுக்கு சமக்ரா சிக்‌ஷா அபியான் நிதி பயன்படுத்தப்படுகிறது. நிதியை விடுவிக்கக் கூறி தமிழ்நாடு அரசு சார்பாக பல முறை கடிதம் அனுப்பப்பட்டது, நேரில் சென்றும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இன்னும் இந்த கல்வியாண்டுக்கான நிதி கிடைக்கவில்லை," என்றார்.

மேலும், "பி.எம்.ஶ்ரீ பள்ளிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

''சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின்கீழ் நிதிய அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை," என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் என்றால் என்ன?

பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பள்ளிகள், தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் திறந்து, அவற்றின் மூலம் 20 லட்சம் மாணவர்கள் நேரடியாகப் பலனடைவார்கள் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது. இத்திட்டம் 2022-23-ஆம் கல்வி ஆண்டு முதல் 2026-27-ஆம் ஆண்டு வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது.

பி.எம்.ஶ்ரீ பள்ளிகளை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள '10+2+3' கல்வி முறைக்கு மாறாக '5 + 3 + 3 + 4' என்ற கல்வி முறை மற்றும் 6-ஆம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட சில குறிப்பிட்ட விதிகளும் உள்ளன.

“பி.எம்.ஶ்ரீ பள்ளிகளின் நோக்கமே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதாகும். அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை, 3-ஆம், 5-ஆம் ,8-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மாறாக உள்ளன. 'சமக்ரா சிக்‌ஷா அபியான்' திட்டம் தொடங்கிய பிறகுதான் தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக நிதியை நிறுத்தி வைப்பது சரியல்ல, என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

‘மாநிலக் கல்விக் கொள்கை எங்கே?’

தமிழ்நாடு, பள்ளிக்கல்வி, மத்திய அரசு
படக்குறிப்பு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு ஏன் மாநிலக் கல்விக் கொள்கையை இன்னும் வெளியிடவில்லை என்கிறார் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ச.மயில்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச. மயில் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எஸ்.எஸ்.ஏ (சமக்ரா சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி பல்வேறு நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படும். இந்த நிதி நிறுத்தப்பட்டால், பள்ளிகள் பாதிக்கப்படும்," என்றார்.

"தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்காததால் நிதியை நிறுத்தி வைப்பது தவறு. அதே நேரம், தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து சில மாதங்கள் ஆகின்றன. ஏன் இன்னும் அரசு வெளியிடவில்லை?” என்றார்.

பா.ஜ.க என்ன சொல்கிறது?

தமிழ்நாடு, பள்ளிக்கல்வி, மத்திய அரசு

பட மூலாதாரம், Facebook/NarayananTirupathy

படக்குறிப்பு, "தேசிய கல்விக் கொள்கை சட்டமல்ல, வழிகாட்டுதல்கள் மட்டுமே" என்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “தேசியக் கல்விக் கொள்கை என்பது வழிகாட்டு நெறிகள் மட்டுமே தவிர, சட்டம் அல்ல. இந்தப் புரிதல் ஏன் யாருக்கும் இல்லை? தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தானே உள்ளது. தமிழ்நாடு அரசு நினைத்தால் தானே மூன்று மொழி கொள்கை கொண்டு வர முடியும்? மேலும், தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தராத காரணத்தால்தான் நிதி வழங்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமாக மத்திய அரசு கூறவில்லை," என்றார்.

மேற்கு வங்கம், டெல்லி, மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் பி.எம்.ஶ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இந்தநிலையில் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் பி.எம்.ஶ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன் பிறகு, பஞ்சாப் மாநிலத்துக்கான சமக்ரா சிக்ஷா அபியான் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பிபிசி தமிழ் ஆகஸ்ட் 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அதற்கு, இக்கட்டுரை பிரசுரமாகும் வரை பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைக்கும் பட்சட்தில் இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)