சென்னை: அமோனியா கசிந்த ஆலையை மீண்டும் திறக்க பல கோடி ரூபாய் கைமாறியதா? திமுக எம்.எல்.ஏ. பதில்

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, 2023, டிசம்பர் 26 அன்று எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று கூறி கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் ஆளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். 'உயிரின் விலை 10 ஆயிரம் தானா?' எனக் கேட்டு அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்" என்கிறார் எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல்.

கடந்த ஆண்டு, டிசம்பர் 26-ஆம் தேதியன்று சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மக்களைப் போராட்டத்துக்கு திரட்டி, ஒருங்கிணைத்ததில் குமரவேல் முக்கியமானவர்.

கடந்த மே 21ஆம் தேதி நிபந்தனைகளுடன் கோரமண்டல் ஆலையை திறப்பதற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆலையை திறக்கும் போது மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு காட்டக் கூடாது என்பதற்காக, கடந்த வாரம் நான்கு மீனவ கிராமங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது?

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு

கோரமண்டல் ஆலைக்கு அருகில் உள்ள தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய கிராமங்களில் பணம் வழங்கப்பட்டதாக 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலை நிர்வாகத்துக்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ.வான கே.பி.சங்கர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததாகவும் 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் கூறுகிறது.

"ஆலையை மீண்டும் திறப்பதில் மக்களுக்கு விருப்பம் இல்லை. பணம் வாங்குவதற்கு என்னிடம் கையெழுத்து கேட்டனர். நான் கையொப்பமிட மறுத்துவிட்டேன். திருவொற்றியூர் எம்.எல்.ஏ தரப்பில் இருந்துதான் இந்த வேலைகளைச் செய்கின்றனர்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல்.

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, குமரவேல், நெட்டுக்குப்பம் மீனவ கிராமம்

கடந்த வாரம் ஆலைக்கு அருகில் உள்ள மீனவ கிராமங்களில் கிராம நிர்வாகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் ஒன்று கூடி கைகளில் ஒரு தாளை வைத்துக் கொண்டு அனைவரிடமும் கையெழுத்து வாங்கியதாக குறிப்பிடுகிறார், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்புசெழியன்.

அந்த தாளில், ‘ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை, தன்னார்வ குழுக்கள் போராட வந்தால் அவர்களை விரட்டியடிப்போம்; காவல்துறையில் புகார் கொடுப்போம்’ என எழுதப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

"இதன் பின்னர் மீனவ கிராமங்களின் ஒருவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மீனவ மக்களில் வெகு சிலரை தவிர பலரும் ஆதாயம் அடைந்துவிட்டதால், ஆலையின் முன்பு இனி போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்கிறார் அன்புசெழியன்.

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, அன்புசெழியன், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக மீனவ மக்கள் போராடி வந்தனர். அப்போது, 'நாங்கள் வெற்றி பெற்றால் ஆலையை மூடுவோம்' என தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், அன்புசெழியன்.

"போராட்ட நாட்களில் நாங்களே உணவு சமைத்து சாப்பிட்டோம். பின்னர், 'நான் உணவு ஏற்பாடு செய்கிறேன்' என எம்.எல்.ஏ சங்கர் கூறினார். மூன்று நாள்களுக்குப் பிறகு, 'எனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வருகிறது. உதவி செய்ய முடியாது' என்றார். பின்னர், எங்களுக்கான தேவைகளை நாங்களே கவனித்துக் கொண்டோம்" என்கிறார் அன்புசெழியன்.

ஆனால் தற்போது திடீரென ஆலை திறக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் பின்னணியில் நடக்கும் பண விநியோகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ சங்கருக்கு தொடர்பிருப்பதாகவும் அன்புசெழியன் குற்றம் சுமத்துகிறார்.

தி.மு.க எம்.எல்.ஏ கூறுவது என்ன?

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, கே.பி.சங்கர், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ

"எனக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் பரப்பும் அவதூறுகளில் இதுவும் ஒன்று" என்கிறார், திருவொற்றியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான கே.பி.சங்கர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை நான் செய்து கொடுத்தேன். அதன்பிறகு வணிகர் சங்கங்கள் உதவி செய்தன. மக்களிடம் ஓட்டு தான் கேட்க முடியும். பணம் கிடைத்ததா என்று கேட்க முடியாது" என்கிறார்.

கோரமண்டல் ஆலை நிர்வாகம் கூறியது என்ன?

"இவை அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்குப் புறம்பானவை" என்று கோரமண்டல் நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி எங்களது எண்ணூர் ஆலையில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அந்த பணிகளை தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் முறைப்படி பெறப்பட்டுள்ளன.

எங்கள் நிறுவனத்தின் பெயரை தொடர்புபடுத்தி சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றமை, உண்மைக்குப் புறம்பானவை. எங்கள் நிறுவனம் எப்போதுமே மிக உயர்ந்த நிர்வாக தரத்தை பின்பற்றி வருகிறது. தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கோரிக்கை

'இந்த விவகாரத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்த வேண்டும்' என கூட்டு அறிக்கை ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரி பரந்தாமன், கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில், பின்னணி பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, கடந்த வருடம், அமோனியா வாயுவைக் கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஒவ்வோர் ஆண்டும் சுனாமி நினைவு நாளில் மீனவ மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில்லை. சுனாமியால் உயிரிழந்த தங்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாக பொழுதைக் கழிப்பது வழக்கம். அவ்வாறு அமைதியாக இருந்தவர்களை பெரிதும் துயரப்படுத்திய நிகழ்வாக, கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அமைந்தது.

அன்று நள்ளிரவு 1 மணியளவில் எண்ணூரில் கோரமண்டல் உர ஆலையில் அமோனியா வாயுவை கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலையைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அமோனியா வாயுவை கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த விவகாரத்தை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அமோனியா வாயு கசிவு குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.பி.சி.எல் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுவதாக, தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா வாயுவை எடுத்துச் சென்றதே கசிவுக்கு காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. அதேநேரம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரமண்டல் நிறுவனம் எடுக்கத் தவறி விட்டிருந்ததாகவும் குறிப்பிட்டது.

ஆலை தரப்பில், 1996ஆம் ஆண்டு முதல் ஆலை இயங்கி வந்தாலும் இதுவரையில் விபத்து ஏற்பட்டதில்லை எனவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 35 தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 21ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிபுணர் குழு சார்பில் ஆய்வு செய்து உரிய அனுமதி பெற்ற பின்னர் கோரமண்டல் உர தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதாக உத்தரவிட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)