துரைமுருகன் பற்றிய ரஜினி பேச்சால் திமுகவில் சர்ச்சை - ஸ்டாலின் எண்ணத்தை பிரதிபலிக்கிறாரா?

பட மூலாதாரம், x/@arivalayam and Gettyimages
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மூத்த தலைவர்கள் குறித்து பேசிய கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் “ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள்” என்று ரஜினி பேசினார்.
முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சில தமிழக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவில் உள்ள நெருடல்களை ரஜினியின் கருத்து பிரதிபலித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ரஜினி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என திமுகவை சேர்ந்த டி கே எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ரஜினிகாந்த் என்ன பேசினார்?
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின், எ.வ வேலு உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் '' என்று பேசினார்
மேலும் அவர்,'' துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு. கலைஞர் கண்ணுலயே விரல் விட்டு ஆட்டினவர். அவர்கிட்ட ஏதாவது விஷயம் சொன்னால் ‘சந்தோசம்’ என்று சொல்வார். நல்லா இருக்கு என்று சந்தோசம் சொல்கிறாரா, என்னடா இப்படி பண்றீங்கன்னு சந்தோசம் சொல்கிறாரா என்று புரியவே புரியாது” என்று கூறி விட்டு மேட்டையில் அமர்ந்திருந்த முதல்வரை பார்த்து, “ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டு யூ” என்றார். அப்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
ரஜினிகாந்த் பேசிய பிறகு மேடையில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், “ரஜினிகாந்த் என்னைவிட ஒரு வயது மூத்தவர், அவரது அறிவுரைகளை ஏற்கிறேன். அவர் கூறியதை நான் முழுவதுமாக புரிந்து கொண்டேன்.” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

பட மூலாதாரம், x/@arivalayam
இந்தநிலையில் அமைச்சர்கள் துரைமுருகனும் உதயநிதி ஸ்டாலினும், ரஜினியின் பேச்சு குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
மூத்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கஷ்டப்படுகிறார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் துரைமுருகன், “அதே மாதிரிதான் மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய், தாடி வளர்த்து, பற்கள் விழுந்து, சாகுற வயதில் நடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ன செய்வது?” என்று பதிலளித்தார்.
மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இளைஞர்கள் நம் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு, அரவணைத்து வழிநடத்த வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசும் போது எதற்கு தெரியுமா அதிக கைதட்டல் கிடைத்தது. நான் சொல்லக் கூடாது. நான் கூறினால், மனதில் எதையோ வைத்துக் கொண்டு சொல்வதாக நினைத்துக் கொள்வீர்கள்.” என்றார்.
'திமுகவுக்குள் அதிருப்தி இருப்பது உண்மையே' - அரசியல் விமர்சகர்கள்

பட மூலாதாரம், x/@arivalayam
ஓய்வு பெற்ற மூத்தப் பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான வீ. அரசு பிபிசி தமிழிடம், “ரஜினிகாந்த் நோக்கத்துடன் கூறியதாக தெரியவில்லை. ஆனால் திமுகவுக்குள் இந்த மோதல் இருப்பது உண்மையே. சில நாட்கள் முன்பு, எந்தெந்த திமுக அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று சமூக வலைதளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அதில் உதயநிதிக்கு ஆதரவு என கருதப்படும் இளம் அமைச்சர்களின் பெயர்கள்தான் இருந்தன. கட்சிக்குள்ளே இருந்த புகைச்சலை ரஜினி பொதுவெளியில், எளிய மொழியில் பேசியுள்ளார்” என்றார்.
தான் பேசியது இப்படி ஒரு சர்ச்சையாகும் என்று ரஜினியே நினைத்திருக்க மாட்டார் என்று மூத்தப் பத்திரிகையாளர் பிரியன் பிபிசி தமிழிடம் கூறினார்.
“ஆனால் அவர் கூறியது உண்மையே. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காததால், எல்லா மட்டத்திலும் திமுகவில் அதிருப்தி உள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று திமுகவுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார்கள், ரஜினி அதை அவர்கள் மேடையிலேயே செய்துள்ளார். ரஜினி சீனியர்கள் குறித்து பேசிய போது அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அதை வரவேற்று கை தட்டினர்'' என்றார்.
இந்த கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்தும் துரைமுருகனும், தங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்று கூறி, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
“துரைமுருகன் எனக்கு நீண்ட கால நண்பர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் வருத்தமில்லை, எங்கள் நட்பு தொடரும்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
“எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்” என்றார் துரைமுருகன்.
எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன?
இந்த விஷயத்தில் எதிர்கட்சிகளும் தங்களது கருத்தை கூற தவறவில்லை.
பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே அண்ணாமலை “ துரைமுருகன், எ.வ.வேலு போன்றவர்கள் இருக்கும் போது, அரியணை உதயநிதி ஸ்டாலின் கைக்கு போகும் போது கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் சுட்டிக் காட்டியுள்ளார். உதயநிதி பொறுப்புக்கு வந்தால், தனது மகன்கள் அடுத்தது பதவிக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி, “ஸ்டாலின் நினைத்ததை ரஜினி கூறுகிறார், ரஜினி கூறுவதை உதயநிதி வழிமொழிகிறார். கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்த இரண்டாம் நிலை தலைவரை தந்தையும் மகனும் சேர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். கட்சியில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத நிலையில், ரஜினியை பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தியிருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது” என்று பேசியிருந்தார்.

பட மூலாதாரம், X/@kpmunusamy
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ராமு மணிவண்ணன், “ரஜினிகாந்த் இந்த கருத்தை திமுக மீதான விமர்சனமாக கூறினாரா அல்லது ஆக்கப்பூர்வமான கருத்தாக கூறினாரா என்று அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ரஜினிகாந்த் விமர்சனமாக கூறி இருந்திருந்தால் அது பாஜகவுக்கு சாதகமானதாக இருக்கும்” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து திமுக தொண்டர்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது. ஆட்சியிலும் கட்சியிலும் கடைசி வரை இருப்பார்கள். ரஜினியை வைத்து இந்த கருத்துகளை சொல்ல வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. மேலும் மூத்த தலைவர்களை எங்கே அனுப்ப முடியும்?'' என்கிறார்
திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம், “ரஜினி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களுக்குள் ஜாலியாக பேசிக் கொண்டோம். அதில் வேறு அர்த்தம் எதுவும் இல்லை. திமுகவில் என்ன நடந்தாலும் அது குறித்து கருத்து கூறுவதற்கு பலர் காத்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












