ரஜினியின் அரசியல் சந்திப்புகள் சர்ச்சையாவது ஏன்? அதன் பின்னணி என்ன?

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், YOGI ADITYANATH

படக்குறிப்பு, ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது சர்ச்சையானது.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தர பிரதேசம் சென்றபோது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பேசியது அகில இந்திய அளவில் செய்தியானதோடு, கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. உண்மையில் ரஜினி ஏன் இதைச் செய்கிறார்?

ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று உத்தர பிரதேசத்தின் லக்னௌ நகருக்குச் சென்ற ரஜினிகாந்த், சனிக்கிழமையன்று அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னைச் சந்தித்தார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது அவர் யோகியின் காலிலும் விழுந்தார். அன்று மாலை மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவுடன் 'ஜெயிலர்' படத்தை பார்த்தார் ரஜினி.

ரஜினியின் சந்திப்புகளால் தமிழ்நாட்டில் சர்ச்சை

அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமையன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு அயோத்தியாவுக்குச் சென்ற ரஜினி, அங்குள்ள ராம் லல்லாவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டப்படுவதையும் சென்று பார்த்தார். ஹனுமான் கர்கி கோவிலுக்குச் சென்ற அவர், அங்கும் பிரார்த்தனை செய்தார்.

நீண்ட நாட்களாக அயோத்திக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்ததாகவும் அந்த எண்ணம் தற்போது பூர்த்தியடைந்திருப்பதாகவும் அயோத்தியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு திங்கட்கிழமையன்று ஜனசட்டா தள தலைவரும் குந்தா தொகுதியின் எம்எல்ஏவுமான ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யாவை சந்தித்தார் ரஜினி.

உத்தர பிரதேசத்தில் ரஜினி மேற்கொண்ட இந்தப் பயணமும் அதில் அவர் சென்ற இடங்களும் அவருடைய சந்திப்புகளும் அகில இந்திய அளவில் செய்திகளான நிலையில், தமிழக அளவில் சலசலப்பையும் ஏற்படுத்தின.

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், RAJA BHAIYA

சர்ச்சைக்கு ரஜினி பதில் என்ன?

இதற்குப் பிறகு, சென்னை திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன் என்ற கேள்விக்கு, "ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் நம்மைவிட சிறியவர்களாக இருந்தால்கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பிரதமர் குறித்துக் கேட்க ஆரம்பித்தபோது, ''நான் அரசியல் பேச விரும்பவில்லை'' எனப் பதிலளித்துவிட்டு பேட்டியை முடித்துக் கொண்டார்.

ரஜினியின் உத்தர பிரதேசப் பயணத்தைப் பொறுத்தவரை, இந்தியில் வெளியாகியிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ப்ரமோஷனுக்காக மேற்கொள்ளப்பட்டது என்றே கூறப்பட்டது. அத்துடன் தன்னுடைய வழக்கப்படி அங்குள்ள கோவில்கள், தனக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் ஆகியோரை அவர் சந்தித்துவிட்டுத் திரும்பியதாகவும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இந்த சந்திப்புகள் குறித்து வெளியாகும் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை எத்தகைய விவாதங்களை ஏற்படுத்தும் என்பதை அறியாதவர் அல்ல ரஜினி. இருந்தபோதும் அவர் இதை ஏன் செய்கிறார் என்பதுதான் கேள்வி.

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER

படக்குறிப்பு, ரஜினியின் உத்தர பிரதேசப் பயணத்தைப் பொறுத்தவரை, இந்தியில் வெளியாகியிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ப்ரமோஷனுக்காக மேற்கொள்ளப்பட்டது என்றே கூறப்பட்டது.

ரஜினியின் ஆன்மீகமும் அரசியலும்

ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனது அரசியல் வருகை குறித்து தொடர்ந்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ரஜினிகாந்த், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார். இருந்தபோதும், அவரது அரசியல் ஈடுபாடு என்னவாக இருந்தது, அதில் ஆன்மீகத்தின் பங்கு என்னவாக இருந்தது என்பது நீண்ட காலமாகவே விவாதத்திற்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது.

ரஜினியின் அரசியல் தொடர்பான கருத்துகள் எத்தகைய சலசலப்புகளை ஏற்படுத்தினவோ, அதே அளவுக்கு அவருடைய வெளிப்படையான ஆன்மீக நாட்டங்களும் சலசலப்புகளை ஏற்படுத்தின.

கடந்த 1980களில் ரஜினிகாந்த் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார். அதற்குப் பிறகு தயானந்த சரஸ்வதி, ஓஷோ என அவரது ஆன்மீக எல்லை விரிவடைந்துகொண்டே வந்தது. பிறகு, ராகவேந்திரர் மீது ஈடுபாடு காட்டிய ரஜினி, ராகவேந்திரராகவே நடிக்கும் அளவுக்குச் சென்றார். பிறகு, மகாஅவதார் பாபா என்பவர் மீது ஈடுபாடு காட்டினார் ரஜினி. அவரைப் பற்றியும் ஒரு படம் எடுத்தார்.

ரஜினியின் ஆன்மீக ஈடுபாட்டை சாதாரணமாக கவனித்தாலே அதில் உள்ள ஒரு போக்கை புரிந்துகொள்ள முடியும். அதாவது, இந்து சமயத்தின் பெருந்தெய்வங்கள் மீது பக்தியைக் காட்டுவதைவிட, கடவுள்களின் தூதுவர்களாகவோ, தற்கால அவதாரங்களாகவோ கருதப்படுபவர்கள் மீது கூடுதல் ஆர்வத்தை காட்டியிருப்பார். ஒரு cult வழிபாட்டு மனநிலை அவரிடம் தொடர்ச்சியாக வெளிப்பட்டது.

அரசியல் ஆர்வத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ரஜினியின் ஆன்மீக ஆர்வம் இப்படியாக இருக்க, அவருடைய அரசியல் தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் குழப்பமானதாகவே இருந்தன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க.-வின் தலைவராகி, முதலமைச்சராகவும் உயர்ந்தபோது, சினிமாவில் வெற்றிபெறும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியங்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருப்பதாக ரஜினியின் ரசிகர்களுக்கு தோன்றிக்கொண்டேயிருந்தது.

'தளபதி' படம் வெளிவந்த சமயத்தில் ரஜினியை வருங்கால முதல்வராக அழைத்து திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு உளவுத் துறையின் மூலம் ரஜினியின் ரசிகர் மன்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தது. 1992ல் வந்த 'அண்ணாமலை' படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள், அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்து பேசப்பட்டவையாக கருதப்பட்டன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் செல்வதற்காக போயஸ் கார்டனில் ரஜினியின் கார் காவல் துறையால் நிறுத்தப்படவே, அவர் இறங்கி நடந்து சென்றதும், பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடியதும், ரஜினி ஆளும்கட்சிக்கு விடுத்த சவாலாகவே பார்க்கப்பட்டது.

இதற்குப் பிறகு, 1992ல் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு திரைத் துறையினர் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, "நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ..." என்றார். பிறகு முதலமைச்சர் தலைமையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டுவிழா நடந்தபோது, "ஃபிலிம் சிடிக்கு சிவாஜி சார் பேர் வச்சு மரியாதை பண்ணல. ஆனா இப்ப அதை சரியா செஞ்சுட்டீங்க" என்று கூறி, ஜெயலலிதாவை மட்டுமல்லாமல் எல்லோரையும் திகைக்க வைத்தார்.

இதற்குப் பிறகு, 'பாட்ஷா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, "தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் ஜாஸ்தியாகிவிட்டது" என்றார். அந்த தருணத்தில் இயக்குநர் மணிரத்னம் வீட்டின் மீது வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதை வைத்து, இந்தக் கருத்தைச் சொன்னார்.

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த், தான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார்

மனதை மாற்றிக்கொண்ட ரஜினி

இதற்குப் பிறகு, 1996 தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுத்தது, 1998லும் அதே கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தது ஆகியவை ரஜினியின் அரசியல் செயல்பாடுகளாக அமைந்தன. ஆனால், 2001 ஜெ. ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு, அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அதற்கு முந்தைய தேர்தலில்தான், "ஜெயலலிதா முதல்வரானால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறியவர், தனது மனதை மாற்றிக்கொண்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

இதற்குப் பிறகு 2002ல் காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்த ரஜினி, நதிகளை இணைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாகக் கூறினார். 2002ல் 'பாபா' திரைப்படம் வெளியானபோது, பா.ம.க. காட்டிய எதிர்ப்பு, ரஜினியையும் அவரது ரசிகர்களையும் வெகுவாக பாதித்திருந்த நிலையில் 2004ல் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் (புதுச்சேரி உட்பட) அக்கட்சியை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமெனக் கூறினார் ரஜினி. ஆனால், 6 தொகுதிகளிலும் அந்தக் கட்சி வெற்றிபெற்றது.

இதற்குப் பிறகு, 2006 விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்து, அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். இந்த காலகட்டத்தில் ரஜினியின் சினிமா செயல்பாடுகளும் அரசியல் தொடர்பான செயல்பாடுகளும் மிகவும் குறைவாகவே இருந்தன.

இதற்குப் பிறகு, ஜெ. ஜெயலலிதா மறைந்து, மு. கருணாநிதி வெகுவாக உடல்நலம் குன்றிய நிலையில், தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் இருப்பதாக பேச்சுகள் எழுந்தபோது, மீண்டும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன.

2017-ஆம் ஆண்டின் ‘ஆன்மிக அரசியல்’ அறிக்கை

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த், தான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார். ஆனால், அதற்குப் பிறகு கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் எதையும் அவர் துவங்கவில்லை. 2020 ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியன்று "மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்," என்றார்.

ஆனால், 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி, தனது உடல்நிலையை மனதில்கொண்டு, இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய ரஜினி மக்கள் மன்றமும் கலைக்கப்பட்டது.

ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், அவர் வெற்றிபெறுவாரா, மாட்டாரா என்பதைவிட, அவருடைய அரசியல் எத்தகையதாக இருந்திருக்கும் என்ற கேள்விதான் இதில் முக்கியமானது.

தன்னுடையது 'ஆன்மீக அரசியல்' என்று அவர் சொல்லியிருந்தாலும் அதன் முழுமையான அர்த்தம் யாருக்கும் தெரியாது. ஆனால், அரசியலுக்கு வருவதாக அவர் அறிவித்த பிறகு, அவருடைய பேட்டிகளில் அவர் தெரிவித்த கருத்துகள், அவருடைய அரசியல் எப்படியிருக்கும் என்பதைச் சொல்வதாக அமைந்தன. குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அவர் தெரிவித்த கருத்துகள், மக்கள் போரட்டங்களுக்கு எதிரானதாகவும் அரசுக்கு ஆதரவானதாகவும் புரிந்துகொள்ளும் வகையிலேயே இருந்தன. இதுபோன்ற கருத்துகள் பலத்த கண்டனத்திற்குள்ளானபோதும் ரஜினி பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

ஆனால், தான் முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான பார்வையைக் கொண்டிருப்பதோடு, ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவருமான யோகி ஆதித்யநாத்தின் காலில் அவர் விழுந்தது, ரஜினிகாந்த் குறித்த பழைய விவாதங்களையும் விமர்சனங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் வலம்வர வைத்தது.

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், STALIN RAJANGAM

படக்குறிப்பு, தான் அரசியலில் இல்லாவிட்டாலும் இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என ரஜினி நினைப்பதாகக் கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

‘ரஜினி விவாதத்தின் மையமாக இருக்க விரும்புகிறார்’

"ரஜினி சினிமாவில் மட்டுமல்ல சமூகத்தின் மையமாகவும் விவாதத்தின் மையமாகவும் இருக்க விரும்புகிறார். தான் அரசியலில் இல்லாவிட்டாலும் இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என நினைக்கிறார். பம்பாயில் பால் தாக்கரே இருந்ததைப் போல எல்லா அரசியலுக்கும் அப்பாற்பட்டவராக மதிக்கத்தக்கவராக இருக்க வேண்டுமெனக் கருதுகிறார். அதற்காகவே எல்லோரையும் சந்திக்கிறார்" என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், ரஜினிக்கு மிகக் கடுமையான யதேச்சதிகாரத் தலைவர்கள் மீது ஒரு ஈடுபாடு இருக்கிறது. அதனாலேயே மோதி, யோகி போன்றவர்கள் ரஜினியை ஈர்க்கிறார்கள் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.

"யோகி போன்ற ஒருவரைப் பார்த்து காலில் விழுவதெல்லாமே அவருடைய சர்வாதிகார (பாசிச) மனநிலையை காட்டுகிறது. ரஜினியின் சமீபத்திய படமான ஜெயிலர் படமே அப்படிப்பட்ட பாஸிஸ மனநிலையின் வெளிப்பாடுதான். அவருக்கு மோடி, யோகி மாதிரி மிகக் கடுமையான தலைமைகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதனால்தான் யோகியைப் பார்த்ததும் காலில் விழுகிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, கட்சி ஜெயித்தாலும் தான் முதலமைச்சராக மாட்டேன் என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், எல்லோரும் கேள்வி கேட்கும்போது தான் அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது; அதனால் வேறொருவர் முதல்வராக இருப்பார் என்றார். அவரால் கேள்விகளை சகிக்க முடியாது. இது ஒரு ஆழமான சர்வாதிகார (பாசிச) மனோபாவத்தின் வெளிப்பாடு. யோகியை சந்தித்ததை பேலன்ஸ் செய்ய அகிலேஷை சந்திக்கிறார். ஆனால், யதேச்சதிகாரத்தின் மீது அவருக்கு ஒரு லயிப்பு இருக்கிறது என்பதை மறைக்க முடியாது," என்கிறார் ராஜன் குறை.

ரஜினிகாந்த், அரசியல், யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், RAJAN KURAI

படக்குறிப்பு, ரஜினிக்கு மிகக் கடுமையான சர்வாதிகார தலைவர்கள் மீது ஒரு ஈடுபாடு இருக்கிறது. அதனாலேயே மோதி, யோகி போன்றவர்கள் ரஜினியை ஈர்க்கிறார்கள் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்

'இது பா.ஜ.க.-வுக்கு மிகவும் வசதியான விஷயம்'

யோகி ஆதித்யநாத் ஒரு மடாதிபதி, யோகி என்பதால் காலில் விழுந்தேன் என்று சொல்வதை ஏற்க முடியுமா? "ரஜினியைப் பொறுத்தவரை, யோகி என்பவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதோ, கட்சி தலைவர் என்பதோ தோன்றவில்லை. அவர் ஒரு மடத்தின் தலைவர் என்பதாகத்தான் தோன்றுகிறது. மோடியையும் ரஜினிக்கு பிடிக்கும் என்றாலும், அவரைப் பார்க்கும்போது அவர் காலில் ரஜினி விழுவதில்லை. மாறாக, யோகியின் காலில் விழுகிறார். காரணம், அவரை கோரக்பூரின் மடாதிபதியாகத்தான் பார்க்கிறார் ரஜினி" என்கிறார் அரசியல் விமர்சகர் சுபகுணராஜன்.

ரஜினி இதுபோல நடந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "ரஜினி போன்றவர்கள் கீழிருந்து மேலே தங்களுடைய திறமையாலும் உழைப்பாலும் மேலே வருகிறார்கள். ஆனால், அவர்கள் உச்சத்தை அடையும்போது, அது தங்கள் திறமைக்காக கிடைத்ததா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்போது, வேறு ஏதோ ஒரு சக்தியால்தான் தங்களுக்கு இந்த வெற்றிகள் கிடைத்தன என நம்புகிறார்கள். பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடத்தை நாம் எப்படி அடைந்தோம் என்ற கேள்வியிலிருந்துதான் ரஜினியின் ஆன்மீகம் வருகிறது. ஆகவே சாமியார்கள், ஆன்மீக குருக்கள், மடாதிபதிகள் ஆகியோரின் அங்கீகாரத்தை பெரிய விஷயமாக பார்க்கிறார் ரஜினி. இந்த எண்ணத்திலிருந்து தப்பிய ஒரே வெற்றியாளர் மு. கருணாநிதிதான்," என்கிறார் ஸ்டாலின்.

ஆனால், இது பா.ஜ.க.-வுக்கு மிகவும் வசதியான விஷயம் என்கிறார் சுபகுணராஜன். "ஒரு மடத்தின் தலைவர், மாநில முதல்வராகவும் இருப்பார் என்பது ஒரு வினோதமான கலவை. இதை நாடு முழுவதும் செய்ய விரும்புகிறது பா.ஜ.க. அப்படி அவர்கள் உருவாக்கிய பிம்பத்தில் ரஜினி விழுந்துவிட்டார்," என்கிறார் அவர்.

ஆனால், இது உண்மையான பணிவு அல்ல, ஒரு அரசியல் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "ரஜினியின் ஆன்மீகம் குறித்த பார்வையை ஆரம்பத்திலிருந்து கவனிக்க வேண்டும். அவரது ஆன்மீகம், ஆரம்ப காலப் படங்களில் விளிம்பு நிலை ஆன்மீகமாக இருந்தது. பிறகு, பெரும் சின்னங்களோடு தொடர்புகொள்ள ஆரம்பித்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அதைச் செய்தார். ரஜினிக்கு ஒரு பக்கம் கீழிருந்து உச்சத்திற்கு வந்திருக்கிறோம் என்ற எண்ணமும் இருக்கிறது. அதே நேரம் எல்லோரும் மதிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அது பணிவு அல்ல. அரசியல்.

யோகி என்பதற்காக காலில் விழுந்ததாகச் சொல்கிறார் ரஜினி. தமிழிலும் யோக மரபு உண்டு. அது சித்தர் மரபு. அவர்களுக்கு அடையாளமோ அதிகார நாட்டமோ கிடையாது. ஆனால், ரஜினி நெருங்கும் யோகிகளுக்கும் மடாதிபதிகளுக்கும் அதிகாரத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு," என்கிறார் ஸ்டாலின்.

ஆனால், பெரிதாக யோசிக்காமல் மேலோட்டமாக பார்த்தால், அடுத்தடுத்து அவருடைய படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தியில் உள்ள மிகப் பெரிய சந்தையைக் குறிவைத்து, ஒரு மார்க்கெட்டிங் யுக்தியாகவும் இதை ரஜினி செய்திருக்கலாம் என்கிறார் ராஜன் குறை.

ரஜினியைப் பொறுத்தவரை, அவருடைய திரைப்படங்களைப் புரிந்துகொள்வதைப் போல அவருடைய ஆன்மீகத்தையோ, அரசியலையோ புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு வகையில் ரஜினி விரும்புவதும் அதைத்தான் போலிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: