ரூ.1,782 கோடி செலவில் ஒயின் வாங்கும் பிரான்ஸ்: குறையும் ஒயின் விற்பனையை சமாளிக்க புதிய முடிவு

பிரான்ஸ் ஒயின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உபரியாக இருக்கும் ஒயினை வாங்க பிரான்ஸ் அரசு ரூ. 1,782 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
    • எழுதியவர், அலெக்ஸ் பின்லி
    • பதவி, பிபிசி நியூஸ்

பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி ஒயினை மாற்று வழியில் பயன்படுத்தும் நோக்கில், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு ரூ. 1,782 கோடிக்கு மேல் செலவு செய்கிறது.

பிரான்சில், மக்கள் கிராஃப்ட் பீர் தான் அதிகம் அருந்துகின்றனர். இதனால் ஒயினுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளது. இந்தப் பின்னணியில், ஒயின் தயாரிக்கும் தொழில் நெருக்கடியில் உள்ளது.

இதற்கிடையே, அதிக உற்பத்தி, பொதுமக்களின் அன்றாடச் செலவு போன்ற காரணிகளால் ஒயின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசால் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 1,782 கோடி நிதியில் பெரும் பகுதி கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட ஒயினை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

இப்படி வாங்கப்படும் ஒயின், கை சுத்திகரிப்பு திரவம் (சானிட்டைசர்), கிளீனர்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், ஒயின் தயாரிக்கத் தேவைப்படும் திராட்சை போன்ற பயிர்களை உற்பத்தி செய்பவர்களை, ஆலிவ் போன்ற பிற பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் ஒயின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய நாடுகளில் ஒயின் உற்பத்தி குறைந்திருந்தாலும், உலக அளவில் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அரசு என்ன சொல்கிறது?

அரசு ஒதுக்கியுள்ள நிதி இந்தத் தொழில் துறையில் முறையாகப் பயன்படுத்தப்படும்போது, விலை வீழ்ச்சி முடிவுக்கு வரும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.

இதன் மூலம் ஒயின் உற்பத்தியாளர்கள் வருமானத்தை மீட்டெடுக்க முடியும் என பிரான்ஸ் நாட்டின் விவசாய அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ தெரிவித்துள்ளார்.

ஒயின் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்ப அவர்களது தொழிலை மாற்றியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

ஜூன் மாதம் வரையிலான ஐரோப்பிய ஆணையத்தின் தரவுகளின்படி, ஒயின் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், அதன் மொத்த நுகர்வு இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்சில் 15 சதவீதம், ஜெர்மனியில் 22 சதவீதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரம் உலகம் முழுவதும் ஒயின் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: