மோதி திறந்து வைத்த சிவாஜி சிலை ஓராண்டிற்குள்ளாக கீழே விழுந்தது ஏன்?

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது.
2023ம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ம் தேதி அன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த சிலையை கடற்படையினர் தான் அமைத்தனர் என்றும், காற்றின் காரணமாக அது கீழே விழுந்தது உடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கூடிய விரைவில் அங்கே புதிய சிலை திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
கடற்படை தினத்தில் வீர வணக்கத்தின் நினைவுச் சின்னமாக இந்த சிலை அங்கே அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துகளை முன்வைத்த எதிர்க்கட்சியினர், தரமற்ற பணி மற்றும் அவசரஅவசரமாக சிலையை திறந்தது குறித்து விமர்சித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எதிர்க்கட்சியினர் விமர்சனம்
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வனில் அமைந்திருக்கும் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது. எதனால் இந்த சிலை கீழே விழுந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் தெளிவாகவில்லை.
சிலை கீழே விழுந்தவுடன், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி பிரிவு எம்.எல்.ஏ. வைபவ் நாய்க் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் தனது கோபத்தை வைபவ் வெளிப்படுத்தியுள்ளார்.
ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் படேலோ, அரசு தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
"இது மிகவும் தீவிரமான விவகாரம். சிலையை நிறுவும் போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோதியின் கையால் சிலையை திறக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆளும் கட்சியினர் ஆர்வம் செலுத்தினர் ," என்று படேல் குற்றம் சாட்டினார்.
ஆனால், தரமற்ற பணிக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், X/SupriyaSule
சுப்ரியா சுலே விமர்சனம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி தொகுதி எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் மகாராஷ்டிரா மாநில அரசை விமர்சனம் செய்துள்ளார்.
"பிரதமர் ஒருவரின் கையால் ஒரு கட்டடத்தையோ, ஒரு நினைவுச் சின்னத்தையோ திறந்து வைக்கும் போது, அதன் தரம் சிறப்பானதாக இருக்கும் என்று மக்கள் நம்புவார்கள். ஆனால் ராஜ்கோட்டில் நிறுவப்பட்ட சிலையானது வெறும் ஓராண்டிற்குள்ளாகவே கீழே விழுந்துள்ளது. இது சத்ரபதி சிவாஜிக்கு நேரிட்ட அவமானம்," என்று சுலே விமர்சித்துள்ளார்.
சுலே மேலும், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று இந்த சிலையை சிறந்து வைத்தார். ஆனால் இந்த சிலை ஓராண்டிற்குள் நொறுங்கி விழுந்துள்ளது. இது மக்கள் மீதும், நரேந்திர மோதி மீதும் நடத்தப்பட்ட மோசடி. ஒரு முழுமையான விசாரணை நடத்தி, இந்த சிலையை வடிவமைக்கும் பணி ஏன் இவ்வளவு தரமற்றதாக இருந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும்," என்றும் அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் சிவாஜி மகாராஜாவை ஒரு கடவுளைப் போல் நினைக்கின்றோம். அவர் சிலை விழுந்து நொறுங்கியது துரதிர்ஷ்டவசமானது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், X/SupriyaSule
மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியதும், பி.டி.ஐ. செய்தி முகமையிடம் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "நாங்கள் சிவாஜியோடு உணர்வுகளால் பிணைக்கப்பட்டுள்ளோம். கடவுளைப் போன்று அவரை நாங்கள் வணங்கி வருகிறோம். இந்த சிலையை நரேந்திர மோதி திறந்து வைத்தார். ஆனால் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இந்த சிலை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது. இது கீழே விழுந்தது துரதிர்ஷ்டவசமானது," என்று கூறினார்.
"நான் அந்த மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில் நாங்கள் புதிய சிலையை நிறுவுவோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
பொறுப்பு அமைச்சர் ரவிந்திர சவான் அங்கே சென்று நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் ஷிண்டே தெரிவித்தார். "கூடிய விரைவில் கடற்படையை சேர்ந்த அலுவலர்கள் இந்த விவகாரம் தொடர்பாக எங்களை சந்திக்க உள்ளனர். விரைவில் புதிய சிலை எழுப்பப்படும்" என்று அவர் மீண்டும் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












