கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலில் உள்ள இந்த சிலையை மேலே எடுத்து வர எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Atlantic Productions/Magellan
- எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ்
- பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன.
புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிமானங்களில் பெரும்பாலானவை உடைந்து கடலின் கீழ் தளத்தில் உள்ளன.
பிரபலமான திரைப்படக் காட்சியின் மூலம் ரோஸ் - ஜாக் ஜோடி இந்த பிடிமானங்களை மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக்கி விட்டது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ரோபோ ஆய்வுகள், அந்த பிடிமானங்களை கப்பல் இழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலடியில் கப்பல் கிடந்ததன் விளைவாக எப்படி அதன் பாகங்கள் சிதைந்து உருமாறி வருகின்றன என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் கன்னிப் பயணத்தை மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“டைட்டானிக் கப்பலின் முன் பகுதி மிகவும் பிரபலமானது. பாப் கலாசாரத்தில் இந்த தருணங்கள் எல்லாம் இருக்கின்றன- கப்பல் சிதைவு பற்றி யோசிக்கும் போது அது தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அது அதே நிலையில் இல்லை” என்கிறார், இந்த புதிய தேடல்களை நடத்திய ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் இயக்குநர் தோமசினா ரே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் 4.5 மீட்டர் நீளமான இந்த பிடிமானங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று ஆய்வுக்குழு கருதுகிறது.
2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் பிடிமானங்கள் கப்பலில் இருப்பது தெரிந்தது. எனினும் அப்போதே அவை சிதைய தொடங்கியிருந்தன.
“ஒரு கட்டத்தில் கம்பிகள் உதிர தொடங்கி கீழே விழுந்துவிட்டன.” என்கிறார் தோமசினா ரே.

பட மூலாதாரம், RMS Titanic Inc

பட மூலாதாரம், RMS Titanic Inc
ஆய்வில் கிடைத்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள்
ஆர்.எ. எஸ் டைட்டானிக் நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது.
தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இரண்டு கருவிகள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களையும் 24 மணி நேர உயர்தர காட்சிகளையும் எடுத்தன. அவை 800 மீட்டர் இடைவெளியில் கிடக்கும் கப்பலின் முன் பகுதியையும் பின் பகுதியையும் அதை சுற்றியிருக்கும் பொருட்களையும் படம் பிடித்தன.
இந்த காட்சிகளை கவனமாக ஆராய்ந்து வரும் நிறுவனம் , கப்பல் சிதைந்த இடத்தின் துல்லிய தகவல்களை கொண்டு டிஜிட்டல் 3டி ஸ்கேனை உருவாக்கும். வரும் மாதங்களில் மேலும் பல புகைப்படங்கள் வெளிவரும்.

பட மூலாதாரம், RMS TITANIC INC
112 ஆண்டுகளாக ஆழ்கடலில் கிடக்கும் வெண்கல சிலை

பட மூலாதாரம், RMS TITANIC INC
இந்த ஆய்வுக் குழு மற்றொரு பொருளையும் கண்டுபிடித்துள்ளது.
1986ம் ஆண்டு “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலையை ராபர் பல்லார்ட் புகைப்படம் எடுத்திருந்தார். 1985-ம் ஆண்டில் டைட்டானிக்கின் சிதைவுகளை கண்டுபிடித்திருந்தவர் அவர்.
ஆனால் அந்த சிலை குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது என்று தெரியாததால், அதன் பிறகு வேறு எவராலும் அந்த சிலையை காண முடியவில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவுகளுக்கு இடையில் முகம் மேலே தெரியும் வகையில் அந்த சிலை இருந்தது.
“வைக்கோல் போரில் குண்டூசியை தேடுவது போல் இருந்தது. மீண்டும் இந்த ஆண்டு அந்த சிலையை கண்டுபிடித்தது மிகவும் முக்கியமானது” என்கிறார் டைட்டானிக் ஆய்வாளர் மற்றும் விட்னஸ் டைட்டானிக் வலையொலியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் பெனகா.
டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது இந்த சிலை. “முதல் வகுப்பு ஓய்வறை தான் கப்பலில் இருந்த மிகவும் அழகான அறை. அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது இந்த வெண்கல சிலை” என்கிறார் அவர்.
“டைட்டானிக் இரண்டாக பிளவுப்பட்ட போது, அந்த ஓய்வறையும் பிளவுபட்டது. அப்போது ஏற்பட்ட சேதத்தில் சிதைவுகளின் இருளுக்குள் டயானா சிலை சிக்கிக் கொண்டது” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துக்கு மட்டுமே கப்பலின் பாகங்களை மீட்கும் உரிமையும் அதன் சிதைவுகளை அகற்றும் சட்டப்பூர்வ உரிமையும் உள்ளது. கப்பலின் சிதைவுகளிலிருந்து கடந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனம் பல ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளது. இதில் ஒரு பகுதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மேலும் பல பொருட்களை மீட்பதற்கு மீண்டும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது டயானா சிலையை மேலே எடுத்து வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால் பலர் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை கல்லறையாக கருதுகின்றனர். அந்த இடத்தை தொடக் கூடாது என்று நினைக்கின்றனர்.
“டயானா சிலையை மீண்டும் கண்டுபிடித்தது, டைட்டானிக் சிதைவிடத்தை தொடக் கூடாது என்று கூறுபவர்களுக்கான சரியான பதிலாகும்” என்கிறார் பென்கா.
“எல்லோராலும் பார்த்து ரசிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைப் பொருள் டயானா சிலை. அந்த சிலை கடலுக்கு அடியில் கும்மிருட்டில் 112 ஆண்டுகளாக கிடக்கிறது. என்னால் அதை கடலுக்கு அடியில் ஒரு போதும் விட முடியாது” என்றார் .
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












