டைட்டானிக்கில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எப்படி உள்ளன?- அவை ரகசிய இடத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன?

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்
படக்குறிப்பு, டோமசினா ரே, ஆர்எம்எஸ் டைட்டானிக் இன்க் நிறுவனத்தின் கலைப்பொருள் சேகரிப்பு இயக்குநராக உள்ளார்
    • எழுதியவர், ரெபேக்கா மோரேல் மற்றும் அலிசன் பிரான்சிஸ்
    • பதவி, அறிவியல் ஆசிரியர், பிபிசி நியூஸ்

ஒரு கைப்பை. இன்னமும் வலுவான மணம் வீசும் வாசனை திரவியத்தின் சிறிய குப்பிகள். இவை பேரழிவுக்குள்ளான உலகின் மிகவும் பிரபலமான டைட்டானிக்கில் இருந்து மீட்கப்பட்ட சில விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள்.

டைட்டானிக் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இதுபோன்ற கலைப்பொருட்கள், பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் கிடங்கு இருக்கும் இடம் ரகசியமாகவே உள்ளது.

திருடர்களிடமிருந்து விலைமதிப்பற்ற நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவே இந்த முடிவு. இது அமெரிக்காவில் ஜார்ஜியாவின் அட்லாண்டா நகரின் ஏதோ ஒரு மூலையில் இருக்கலாம் என்று மட்டும் சொல்ல முடியும்.

இங்கிருக்கும் அலமாரிகள் ஆயிரக்கணக்கான பொருட்களால் நிரம்பியுள்ளன. வித்தியாசமான குளியல் தொட்டி முதல் நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிப் பொருட்கள் வரை பல்வேறு அற்புதமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

டைட்டானிக் கலைப்பொருட்களின் சேமிப்பு கிடங்கை சுற்றிப் பார்க்கவும், அங்கிருக்கும் பொருட்களில் சிலவற்றின் பின்னணியில் உள்ள கதைகளைக் கண்டறியவும் பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் கடல் சோதனைக்காக 1912-ல் பெல்ஃபாஸ்டிலிருந்து புறப்படும் காட்சி

கைப்பையின் பின்னால் மறைந்திருக்கும் சோக கதை

"இது மிகவும் அழகான, நாகரீகமான சிறிய கைப்பை" என்று இந்த பொருட்களை மீட்டெடுத்த ஆர்எம்எஸ் டைட்டானிக் இன்க் நிறுவனத்தின் சேமிப்பக இயக்குனர் டோமசினா ரே கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக 5,500 பொருட்களை மீட்டெடுத்துள்ளது. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த பை முதலையின் தோலில் இருந்து தயாரிக்கப்பட்டது, இது வடக்கு அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் பல ஆண்டுகளாக அப்படியே இருந்தது.

பையின் உள்ளே இருக்கும் நுணுக்கமான கலைப்பொருட்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த கைப்பைக்கு சொந்தக்காரர் மரியன் மீன்வெல். இவர் கப்பலின் மூன்றாம் வகுப்பில் பயணித்த பயணி.

பையின் உள்ளே இருந்த பொருட்களில் மரியன் மேன்வெல்லின் தாயாக கருதப்படும் ஒருவரின் மங்கலான புகைப்படம் இருந்தது.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்
படக்குறிப்பு, மரியன் மீன்வெல்லின் தாயாகக் கருதப்படும் பெண்ணின் மங்கலான புகைப்படம்

லண்டனில் உள்ள அவரது முன்னாள் வீட்டு உரிமையாளரின் கையால் எழுதப்பட்ட குறிப்பு கடிதம் உட்பட, அமெரிக்காவில் அவர் மகளுடன் தொடங்க இருந்த புதிய வாழ்க்கைக்கு தேவையான ஆவணங்களும் இருந்தன.

அவரது மருத்துவ பரிசோதனை அட்டையும் உள்ளே இருந்தது, ஏன் என்றால் மூன்றாம் வகுப்பு பயணிகள் அனைவரும் அமெரிக்காவிற்கு நோய் தொற்று எதையும் கொண்டு வரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்த நீர் படிந்த ஆவணங்கள் விதியின் ஒரு சோகமான திருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.

மரியன் மீன்வெல், மெஜஸ்டிக் எனப்படும் மற்றொரு ஒயிட் ஸ்டார் லைன் கப்பலில் பயணிக்க பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டது, எனவே மெஜஸ்டிக்கில் இருந்து டைட்டானிக்கிற்கு மாற்றப்பட்டார். உயிரிழந்த 1,500 பேரில் ஒருவராக மாறிவிட்டார்.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்
படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை மற்றும் சேதமடைந்த கடிதம்

இன்னமும் மணம் வீசும் வாசனை திரவியம்

உயிர் பிழைத்தவர்களுக்கு சொந்தமான பொருட்களும் கடலின் ஆழத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

டோமசினா ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை திறக்கிறார், அதில் இருந்து ஒருவித வாசனை காற்றில் பரவியது. "இது மிகவும் சக்தி வாய்ந்த மணம்," என்று அவர் கூறினார்.

அந்த பாட்டிலின் உள்ளே வாசனை திரவியத்தின் சிறிய குப்பிகள் இருந்தன. அவை சீல் வைக்கப்பட்டுள்ளன.

"கப்பலில் ஒரு வாசனை திரவியங்கள் விற்பனையாளர் இருந்தார், அவர் 90க்கும் மேற்பட்ட இந்த சிறிய வாசனை திரவிய குப்பிகளை வைத்திருந்தார்" என்று டோமசினா விளக்குகிறார்.

அவரது பெயர் அடோல்ஃப் சால்ஃபெல்ட். அவர் இரண்டாம் வகுப்பு பயணியாக பயணம் செய்தார்.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்
படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட வாசனை திரவிய குப்பிகள்

உயிர் பிழைத்த 700 பேரில் சால்ஃபெல்டும் ஒருவர். மீட்பு பணியின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கப்பலில் இருந்து முன்னரே வெளியேறிய சில ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைளின் நிலையை பார்த்து கவலை அடைந்தனர்.

"நாங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாசனை திரவியத்தை கண்டுபிடிக்கும் நேரத்தில் அவர் இறந்துவிட்டார்." என்று டோமசினா கூறுகிறார்.

"ஆனால் அவர் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் வாழ்ந்தார் என்பது என் புரிதல் - உயிர் பிழைத்தவருக்கு இருக்கும் குற்ற உணர்வு." என்கிறார் அவர்

ஒரு ஷாம்பெயின் பாட்டிலின் வாழ்நாள்

டைட்டானிக் சேகரிப்பில் ஒரு ஷாம்பெயின் பாட்டில் இருந்தது. கார்க் மூடப்பட்டிருந்த அதன் உள்ளே ஷாம்பெயின் அப்படியே இருந்தது.

"சிறிதளவு தண்ணீர் கார்க் வழியாகச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அது டைட்டானிக் விபத்து ஏற்பட்டபோது, கடலின் அடிப்பகுதியில் மூழ்கியது ”என்கிறார் டோமசினா.

டைட்டானிக் கப்பல் 1912 இல் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியபோது, கப்பல் இரண்டாக உடைந்தது. அந்த கப்பலில் இருந்த பொருட்கள், பயணிகளின் உடமைகள் கடலுக்குள் ஒரு பரந்த குப்பைக் கூடத்தை உருவாக்கியது.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images/BBC

படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டில், கார்க் திறக்கப்படாமல் அப்படியே இருந்தது

"கடல் தரையில் நிறைய பாட்டில்கள் உள்ளன மற்றும் பல சமையலறை பாத்திரங்களும் உள்ளன" என்று டோமசினா கூறுகிறார்.

கப்பலில் ஆயிரக்கணக்கான ஷாம்பெயின் பாட்டில்கள் இருந்தன.

"முதல் வகுப்பு ஒரு மிதக்கும் அரண்மனை போல இருந்தது. ஒட்டுமொத்தமாக டைட்டானிக் மிகவும் ஆடம்பரமான கப்பலாக இருந்திருக்க வேண்டும்" என்று டோமசினா கூறுகிறார்.

"எனவே ஷாம்பெயின் வைத்திருப்பது, உடற்பயிற்சி கூடம் வைத்திருப்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கும்."

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலில் உடற்பயிற்சி கூடம் இருந்தது

கப்பலில் இருந்த வேற்றுமை

டைட்டானிக் கப்பலில் பயனித்தவர்களின் அனுபவம் வெவ்வேறாக இருந்திருக்கும். உணவு, சாப்பிடும் தட்டுகள், பானங்கள் என அனைத்தும் வேறுப்பட்டிருந்திருக்கும்.

கப்பலின் மூன்றாம் வகுப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த குவளை சாதாரணமாக அதே சமயம் உறுதியானது. பிரகாசமான சிவப்பு வெள்ளை நட்சத்திர லோகோ அதில் இருந்தது.

இரண்டாம் வகுப்பு தட்டுகளில் அழகான நீல நிற மலர் அலங்காரம் மற்றும் சற்று நேர்த்தியாக இருந்தது.

ஆனால் முதல் வகுப்பு பிரிவினரின் சாப்பிடும் தட்டு, மிகவும் நுட்பமான கலை வடிவங்கள் பொறிக்கப்பட்டு சீனாவில் செய்யப்பட்டுள்ளது. அந்த தட்டை வெளிச்சத்தில் வைத்து பார்த்தால் ஒரு வித தங்க நிறம் மின்னும்.

"அந்த தட்டில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கலாம், ஆனால் நீரில் பல ஆண்டுகள் மூழ்கி இருந்ததால் நிறம் அழிந்திருக்கும்," என்று டோமசினா கூறுகிறார்.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்
படக்குறிப்பு, மூன்றாம் வகுப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் கோப்பை , இரண்டாம் வகுப்பு தட்டு, முதல் வகுப்பு தட்டு

`RMS Titanic Inc’ மட்டுமே கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து பொருட்களை மீட்டெடுக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் - 1994 இல் அமெரிக்க நீதிமன்றத்தால் இந்த உரிமை வழங்கப்பட்டது.

ஆனால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இதைச் செய்ய வேண்டும். பொருட்கள் எப்போதும் ஒன்றாக வைக்கப்பட வேண்டும், எனவே அவற்றை தனித்தனியாக அவர்களால் விற்க முடியாது, மேலும் அவை சரியாக பாதுகாக்கப்பட வேண்டும்.

முதிர் வயது பெண்ணின் கதையை சொல்லும் கைப்பை! : ரகசிய டைட்டானிக் கிடங்கு வெளிப்படுத்தும் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் தளம்

"நாங்கள் சேமிப்பகத்தைப் பாதுகாக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், ஏனென்றால் எல்லோரும் டைட்டானிக்கிற்குச் செல்ல முடியாது, எனவே அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறோம்." என்று டோமசினா கூறுகிறார்

இந்த நிறுவனம் சமீபத்தில் மூழ்கி இருக்கும் கப்பல் இடிபாடுகளின் விரிவான 3D ஸ்கேன் செய்யப்பட்ட மில்லியன் கணக்கான படங்களை எடுத்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)