யுவன் சங்கர் ராஜா: 'இளையராஜா மகன்' என்ற அடையாளத்தை கடந்து தனித்து நிற்பது எப்படி?

யுவன் ஷங்கர் ராஜா

பட மூலாதாரம், Yuvan Shankar Raja/Instagram

படக்குறிப்பு, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கிறார் யுவன்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது வெளியாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் அவர் இசையமைத்துள்ளார்.

தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன் சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார்.

ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் 1997ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

‘இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்’ என்ற அடையாளத்தைக் கடந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கும் யுவன், தனியாக எந்த இசை வகுப்புகளுக்கும் செல்லாதவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘16 வயதில் இசையமைப்பாளராக அறிமுகம்’

யுவன் சங்கர் ராஜா: ‘இளையராஜா மகன்’ என்ற அடையாளத்தைக் கடந்து தமிழ் சினிமாவில் சாதித்த இசையமைப்பாளர்

பட மூலாதாரம், Yuvan Shankar Raja/Instagram

இசையமைப்பாளர் இளையராஜா- ஜீவா தம்பதிக்கு 1979ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் குடும்பத்தில், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, (மறைந்த) பாடகி பவதாரிணிக்குப் பிறகு பிறந்த கடைசிப் பிள்ளை யுவன் சங்கர் ராஜா.

யுவன் பிறந்த தருணம் குறித்து, ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் விவரித்திருந்தார் இளையராஜா.

“அப்போது இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில், ரஜினி நடித்த ‘ஜானி’ படத்தின் இசையமைப்பிற்காக ஆழியார் அணையின் (பொள்ளாச்சி) விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது யுவன் பிறந்துள்ளான் என்ற செய்தி எனக்கு வந்தது.”

“அன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் இசையமைத்ததுதான் ‘செனோரிட்டா..ஐ லவ் யூ’ என்ற பாடல். அந்தப் பாடல் மட்டுமல்லாது, ஜானி திரைப்படமும், அதன் அத்தனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது” என்று கூறியிருந்தார்.

அரவிந்தன் திரைப்படத்திற்குத்தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை யுவன் வடிவமைத்தார். அந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானபோது யுவன் சங்கர் ராஜாவுக்கு வயது 14.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 1997ஆம் ஆண்டு 'அரவிந்தன்' வெளியானபோது தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் அறிமுகமானார்.

யுவன் சங்கர் ராஜாவுக்கு சில ஆண்டுகள் முன்பாக, 1992இல் வெளியான ‘பாண்டியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவனின் அண்ணனும், இளையராஜாவின் மூத்த மகனுமான கார்த்திக் ராஜா.

“என் தம்பி அடைந்துள்ள உயரத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இளம் வயதில் இந்த உயரத்தை அவன் அடைந்துள்ளான். அவனுக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று சமீபத்தில் கார்த்திக் ராஜா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

‘ராசியில்லாத இசையமைப்பாளர்’

யுவன் ஷங்கர் ராஜா

பட மூலாதாரம், Yuvan Shankar Raja/Instagram

படக்குறிப்பு, தனது தந்தை இளையராஜாவுடன், யுவன் சங்கர் ராஜா

தனது 16ஆம் வயதிலேயே இசையமைப்பாளர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும்கூட, ‘இளையராஜாவின் மகன்’ என்ற அடையாளத்தைக் கடக்கவும், தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பெறவும் யுவன் போராட வேண்டியிருந்தது.

முதல் திரைப்படமான அரவிந்தன் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து யுவனின் இசையில் வெளியான ‘வேலை’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சமீபத்தில் சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பேசிய யுவன், “ஆரம்பக் காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரை குத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு எனக்குப் பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.”

“இதை நினைத்துப் பலமுறை நான் அழுதிருக்கிறேன். அதிலிருந்து மீள வேண்டும் என இசையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ திரைப்படம் யுவனுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது.

யுவன், 2000ஆம் ஆண்டில் 'தீனா' திரைப்படத்திற்கு இசையமைத்தார். தீனா, நடிகர் அஜித்குமாரின் திரைவாழ்வில் முக்கியமான திரைப்படம். அதில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என எஸ்பிபி குரலில் ஒரு 'மாஸ்' பாடல், மறுபுறம் ஹரிஹரனின் குரலில் ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்’ என்ற அற்புதமான 'மெலடி' பாடல் என ரசிகர்களைக் கவர்ந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா

பட மூலாதாரம், Yuvan Shankar Raja/Instagram

படக்குறிப்பு, சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம் யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை

தொடர்ந்து 'நந்தா', 'துள்ளுவதோ இளமை', 'மெளனம் பேசியதே' ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மன்மதன்’, ‘ராம்’, ‘சண்டைக்கோழி’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக நிலைநிறுத்திக் கொண்டார்.

இளம் ரசிகர்களைப் பெரியளவில் பெற்ற யுவனின் பாடல்கள், இளைஞர்கள் தங்கள் காலர் டியூன்களாக வைக்கும் அளவுக்குப் புகழ் பெற்றன.

சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம் யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்குக் கதை பிடித்திருந்தால் அந்தப் படத்திற்கு இசையமைப்பார். இந்த விஷயத்தில் இளையராஜாவும், யுவனும் ஒன்று என்றே கூறலாம்.

'பில்லா-2' திரைப்படத்தில் அஜித் போன்ற மாஸ் ஹீரோவிற்காக இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற புதுமுகம் நடிக்கின்ற படத்திற்கும் இசையமைத்தார்.

‘நா.முத்துக்குமாருக்கு கொடுத்த இடம்’

நா.முத்துக்குமார்-யுவன்

பட மூலாதாரம், Yuvan Shankar Raja/Instagram

படக்குறிப்பு, நா.முத்துக்குமார்-யுவன் என்கிற அற்புதமான கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது

நா.முத்துக்குமார்-யுவன் என்கிற பிரபலமான கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது என்றே கூறலாம்.

‘தேவதையைக் கண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘பையா’, ‘புதுப்பேட்டை’, யாரடி நீ மோகினி’, ‘கற்றது தமிழ்’ என இந்தக் கூட்டணியில் வெளியான பல திரைப்பட ஆல்பங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தக் கூட்டணியின் மற்றொரு திரைப்படம் 2013இல் வெளியான ‘தங்க மீன்கள்’. இதில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

“மறைந்த நா.முத்துக்குமாருக்குக் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச் சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன்” என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் யுவன் சங்கர் ராஜா.

‘மெட்டமைப்பதில் யுவனுக்கு இருக்கும் தனித்துவம்’

யுவன்

பட மூலாதாரம், YuvanShankarRaja/Facebook

படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார் யுவன்

தமிழ்க் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி, ‘தாஸ்’, ‘சண்டைக்கோழி’, ‘தீபாவளி’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட பல படங்களில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான் மகான் அல்ல, திரைப்படத்தின் ‘இறகைப் போலே’ காதல் உணர்வுகளைச் சொல்லும் ஒரு மெலடி பாடல், ஆனால் ‘தெய்வம் இல்லை’ என்ற பாடல் கதாநாயகனின் தந்தை இறந்த பிறகு வரும் சோகப் பாடல். இரண்டு பாடல்களுக்கும், ஒரே நாளில் அடுத்தடுத்து இசையமைத்தார் யுவன். பாடல்களின் சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டு, உடனடியாகத் தனது மனநிலையை அதற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு மெட்டமைக்கும் அவரது திறன் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது” என்கிறார்.

யுவனுடன் பணிபுரிவது மிகவும் இலகுவாக இருக்கும் என்று கூறிய யுகபாரதி, யுவனுடனான மற்றோர் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“ஒருமுறை இசையமைப்புப் பணிகளுக்காக 5 நாட்கள் மலேசியா சென்றிருந்தோம். முதல் நான்கு நாட்கள் மெட்டமைப்பது குறித்து யுவன் எதுவுமே பேசவில்லை. சரி, 5ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் திரும்பலாம் எனத் தயாரானபோது, திடீரென்று அன்று காலை யுவன் அழைத்து 8 டியூன்களை (Tune) போட்டுக் காட்டினார். நான்கு நாட்களாகச் சத்தமின்றி அனைத்து வேலைகளையும் அவர் பார்த்துள்ளார்.”

யுவன் சங்கர் ராஜா: ‘இளையராஜா மகன்’ என்ற அடையாளத்தைக் கடந்து தமிழ் சினிமாவில் சாதித்த இசையமைப்பாளர்

பட மூலாதாரம், Yugabharathi/X

“எந்த மெட்டைத் தேர்ந்தெடுப்பது என நான் திணறிப் போனேன். அனைத்தும் நன்றாக இருந்தது. அதிலிருந்து ஒரு மெட்டுதான் ‘சண்டைக்கோழி’ திரைப்படத்தில் வரும் ‘தாவணி போட்ட தீபாவளி’ என்ற பாடல். இப்படி எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மிகவும் இயல்பாகப் பணியாற்றக் கூடியவர் யுவன் சங்கர் ராஜா” என்று கூறினார் யுகபாரதி.

இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', 'மாமனிதன்' போன்ற திரைப்படங்களுக்குத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்திற்கும், 2010ஆம் ஆண்டு வெளியான ‘பையா’ படத்திற்கும் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார் யுவன். 2004ஆம் ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதையும், 2006ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘ராம்’ படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார் யுவன்.

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் யுவன் பெற்றார். 2022ஆம், சத்யபாமா பல்கலைக்கழகம் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)