விஜயகாந்த் வாழ்க்கையின் 10 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி, இதுதான் நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார்.
சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். 'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த்.
54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
"தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்"
"சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறினார் தயாரிப்பாளர் டி. சிவா.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தவர்
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.
தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.

பட மூலாதாரம், DMDK
சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தவர்
நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த.
இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார்.
இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
கமல்- ரஜினி அலையில் தனித்து தெரிந்தவர்
1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச்சில நடிகர்களுக்கு இந்த சாதனை உள்ளது.
கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த்.
"கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வோம்", என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரசிகர் அறிவுமணி.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
கேப்டன் என்ற பட்டம்
கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது இருந்த முன்னணி நடிகர்களுக்கு கூட 'நூறாவது படம்' என்றாலே தோல்வி தான். ஆனால் நடிகர் விஜயகாந்திற்கு நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
நடிகராக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவரானார்
விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது.
அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.
மனிதாபிமானமிக்க நடிகர்
விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடன இயக்குனர் பிருந்தா, “விஜயகாந்த் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பார். அவரது 'ஷாட்' முடிந்தவுடன் சென்று கேரவனில் அமர மாட்டார்." என்றார்.
"விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நடன இயக்குனர்களையும், நடனக் கலைஞர்களையும் மிகவும் அன்போடு கவனித்துக் கொள்வார். "
"நடன இயக்குனர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவிற்குச் செல்லும்போது விமான டிக்கெட்டுகளையே முன்பதிவு செய்து கொடுத்தார். நடனக் கலைஞர்கள் தானே என அவர் எங்களை பேருந்தில் பயணம் செய்யவிடவில்லை. மிகவும் அற்புதமான மனிதர்” என்றார்.

இளம் நடிகர்களுக்கு கைகொடுத்தவர்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1993இல் வெளியான திரைப்படம் 'செந்தூரப் பாண்டி'. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக, கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.
இதேபோல 1999இல் 'பெரியண்ணா' என்ற திரைப்படம், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூர்யா நடித்த திரைப்படம். அதிலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.
"சூர்யா நடிப்பில் வந்த மாயாவி திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்காக அவரிடம் பேசியபோது, உடனே ஒத்துக்கொண்டார். பொதுவாக அவரைப் போன்ற பெரிய நடிகர்கள் அவ்வளவு எளிதாக நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த நாளே, ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் உணவு இடைவெளியில் எங்களுக்கான பகுதியை முடித்து கொடுத்தார்" என மாயாவி திரைப்படத்தின் இயக்குனர் சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
'ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் போல் யாரும் இல்லை'
விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, நான் இணைந்து கொள்ள விருப்பப்பட்டேன். அவர் என்னை அழைத்து நீ என் கட்சியில் சேர்ந்தால் ஓரு சார்பாளனாகிப் போவாய். நீ எல்லாருக்கும் பிடித்தவனாக இரு என அறிவுரை வழங்கினார். " என்றார்.
"பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. வறுமை தான். அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் செல்வோம். அதேபோல், அவர் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத் தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வார்."
"படப்பிடிப்புத் தளத்திலும் இதே தான், லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார். படப்பிடிப்புத் தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்பார்" என்றார்.

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்தின் பிறந்தநாள்
சினிமாவில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார்.
விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வந்தார்.
அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












