நானி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 'சூர்யாவின் சாட்டர்டே' படம் எப்படி இருக்கிறது? - திரை விமர்சனம்

பட மூலாதாரம், YOUTUBE/SCREENGRAB
- எழுதியவர், ஸ்ரீரிங்கவரப்பு ரட்சனா
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
நானி நடிப்பில் 'சரிபோதா சனிவாரம்' என்ற திரைப்படம் தெலுங்கில் இன்று வெளியானது. இந்தப் படம் 'சூர்யாவின் சாட்டர்டே' என்ற பெயரில் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
உணர்வுபூர்வமான கதைகளின் மூலம் நடிகர் நானி, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் கதைக் களத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்து வருகிறார்.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா 'மென்டல் மனதிலோ' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். நானி- விவேக் ஆத்ரேயா ஆகிய இருவரின் கூட்டணியில் இரண்டாவது திரைப்படமாக 'சூர்யாவின் சாட்டர்டே' வெளியானது.
இதற்கு முன் விவேக் ஆத்ரேயா நானியை வைத்து ‘அடடே சுந்தரா' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
சூர்யாவின் சாட்டர்டே படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் கதை என்ன?
சிறு வயதில் இருந்தே அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படும் சூர்யா(நானி) தனது அம்மாவிற்காக என்ன முடிவு எடுத்தார்? அவருக்கும் சனிக்கிழமைக்கும் என்ன தொடர்பு?
காவல்துறை அதிகாரியான தயா (எஸ்.ஜே. சூர்யா) சோகுலபாலம் கிராம மக்களின் மீது ஏன் கோபப்படுகிறார்?
ஏன் சூர்யாவும் தயாவும் எதிரிகள் ஆனார்கள்? இதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் ஹீரோவின் பலம் கோபம்தான். இந்த கோபத்தை பல்வேறு விதங்களில் இயக்குநர் காட்டியுள்ளார்.
சூர்யா தன்னைத் தனிப்பட்ட முறையிலோ அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களையோ பாதிக்கும் விஷயங்கள் குறித்துக் கோபப்படுகிறார்.
படத்தின் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே என்ன பிரச்னை என்பது சரியாக விளக்கப்படவில்லை. படத்தில் அந்தக் கட்டம் வரும்போது, மக்கள் கணிக்கக் கூடியதாகவே கதை இருக்கறது.
இதுவரை நடிகர் நானி 'வீ' மற்றும் 'தசரா' படங்களைத் தவிர பெரும்பாலான படங்களில் ஜாலியான, குடும்ப கதைக்களம் சார்ந்த படங்களிலேயே ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்தப் படத்திலும் குடும்பம் சார்ந்த காட்சிகள் இருக்கின்றன. அதில் நானி மிக இயல்பாக நடித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் அவரது இயல்பைவிட வேறானதாக இருந்தது.

பட மூலாதாரம், YOUTUBE/SCREENGRAB
மறுபுறம், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் மீது கோபம் கொள்ளும் நபராக எஸ்.ஜே.சூர்யாவின் 'தயா' கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் ஆழமான பின்னணி ஏதும் இல்லை. இரு நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தாலும், வலுவற்ற கதைக் களத்தால் சரியாக மக்கள் மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சோகுலபாலம் கிராமத்தில் தயாவால் மக்கள் படும் இன்னல்கள் மட்டுமே கதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சூர்யாவை ஒரு கோபக்காக்கார சாதாரண இளைஞராகவும், தயாவை கோபம் மிக்க காவல் அதிகாரியாகவும் சித்தரித்துள்ளனர்.
முதல் பாதியில் கதை தோய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஓரளவு எப்படியோ கதை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் படத்தில் நானியின் கோபம் மிக்க கதாப்பாத்திரத்தை நிறுவ ‘சிவப்புத் துணி’ ஒன்று பயன்படுத்தப்பட்டது.
இதற்கு ஒரு நல்ல உணர்ச்சிப் பின்னணி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படம் முழுவதும் அந்த உணர்ச்சியைச் சுமந்து செல்லும் வலுவான காட்சிகள் முதல் பாதியில் அதிகம் இடம்பெறவில்லை.
நானி எவ்வாறு நடித்துள்ளார்?

பட மூலாதாரம், YOUTUBE/SCREENGRAB
இயல்பான மற்றும் ஜாலியான பாத்திரங்களைத் தவிர சீரியஸான கதாப்பாத்திரங்களில் நானி அதிகம் நடித்ததில்லை. இந்தப் படம் நானியின் சினிமா பயணத்தில் ஒரு புதிய முயற்சி.
என்னதான் நானியின் ஆக்ஷன் நடிப்பு ஓரளவிற்குச் சிறப்பாக வந்திருந்தாலும், கதைக்களம் பார்வையாளர்களை வெகுநேரம் கவரவில்லை.
சில காதல் காட்சிகள் மற்றும் நானிக்கே உரிய நகைச்சுவை அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. நானியிடம் இருந்து சிறந்த ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது.
இதுபோன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க நானி இன்னும் பயிற்சி பெற வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து, கிட்டத்தட்ட முழு கதையும் புரிய வந்தது. டிரெய்லரில் இருப்பதைத் தாண்டி படத்தின் கதை சுவாரஸ்யமானதாக இல்லை. இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது.
நடிகை பிரியங்கா மோகன் ஏற்கெனவே நானியுடன் இணைந்து "கேங் லீடர்" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மீண்டும் நானியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் நன்றாக இருந்தது. படத்தில் வரும் காதல் காட்சிகளில் நானி இயல்பாக நடித்துள்ளார்.
வில்லனாக அருமையாக நடித்த எஸ்.ஜே.சூர்யா

பட மூலாதாரம், YOUTUBE/SCREENGRAB
வில்லன் பாத்திரத்தில் 'தயா'வாக எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்.
கோபம், பிறரை அலட்சியப்படுத்துவது, கொடுமைப்படுத்தும் குணம் ஆகியவற்றை எஸ்.ஜே.சூர்யா இந்தக் கதாப்பாத்திரம் மூலம் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.
அவரது நடிப்பு முழுமையானதாக இருந்தாலும், இந்தப் பாத்திரத்திற்கு ஆழமான பின்னணி இல்லை. படத்தில் உள்ள அனைத்து பாத்திரங்களிலும், அவற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள்தான் சிறப்பு அம்சமாக இருந்தனர்.
சாய்குமார், அபிராமி, அஜய், சுபலேகா சுதாகர், முரளி சர்மா, சுப்ரீத் ரெட்டி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஆனால் படத்தில் அவர்களின் பாத்திரங்கள் வலுவாக இல்லை.
இதுவொரு தீவிரமான ஆக்ஷன் படம். ஒரு கதை வேகமாக நகர்ந்தால்தான் அதன் தீவிரம் புரியும். ஹீரோ கதாப்பாத்திரமான சூர்யாவுக்கும், வில்லன் கதாப்பாத்திரத்தின் தயாவுக்கும் இடையே நடக்கும் பிரச்னைக்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை. படத்தில் போதுமான உணர்வுப்பூர்வ காட்சிகள் இல்லை.
இரண்டாம் பாதியில் கதை சற்று வேகமாக இருந்தாலும் பார்வையாளர்கள் கதையை முன்கூட்டியே கணித்து விடுவது போலவே இருக்கிறது.
படத்தின் நிறை குறைகள் என்ன

பட மூலாதாரம், YOUTUBE/SCREENGRAB
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் நானியின் நடிப்பு, கதையின் தொடக்கத்தில் 'தாய்-மகனுக்கு' இடையே வரும் காட்சிகள், தயா (எஸ்.ஜே. சூர்யா) கதாப்பாத்திரம் மற்றும் டயலாக் டெலிவரி படத்தில் சிறப்பாக உள்ளது.
படத்தின் முதல் பாதி தொய்வாக இருக்கிறது, அதுவே இரண்டாம் பாதி பார்வையாளர்கள் சுலபமாகக் கணிப்பதாகவே இருக்கிறது.
படத்தின் திரைக்கதை வலுவாக இல்லை. பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கதைக்களம் இல்லை. படத்தின் முதல் பாதியில் கதை என்னவென்றே சரியாக விளக்கபடவில்லை. மொத்தத்தில் 'சூர்யாவின் சாட்டர்டே' படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை.
(மேலே கூறப்பட்டிருப்பவை செய்தியாளரின் தனிப்பட்ட கருத்துகளே, அவற்றுக்கு பிபிசி பொறுப்பேற்காது.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












