மேற்குக் கரையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - இப்பகுதியின் வரலாறு, பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 10 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
'தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை' என்று கூறி, நான்கு நகரங்களுக்கு தனது படைகளை அனுப்பியுள்ளது இஸ்ரேல்.
மேற்கு கரையில் கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது என கருதப்படுகிறது.
மேற்குக் கரை எங்கு உள்ளது? யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
கிழக்கில் ஜோர்டான் நதி, மேகில் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது மேற்குக் கரை.
பாலத்தீன மத்திய தரவுகள் அமைப்பின் தகவல்கள் படி சுமார் 32 லட்சம் மக்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பாலத்தீனர்கள். எனினும் பல யூதர்களும் இங்கு உள்ளனர். சர்வதேச சட்டத்துக்கு விரோதமான குடியிருப்புகளில் அவர்கள் வசிக்கின்றனர்.
மேற்குக் கரையின் பெரும்பாலான பகுதிகள், எதிர்காலப் பாலத்தீன நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என நவீன இஸ்ரேலின் நிறுவனர்கள் 1947-ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டனர். எனினும், அரேபிய நாடுகள் தன்னைத் தாக்கிய பிறகு, இந்தத் திட்டத்தை இஸ்ரேல் கைவிட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, 1950-ஆம் ஆண்டு ஜோர்டான் இந்தப் பகுதியை கைப்பற்றியது. 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போரில் இந்தப் பகுதியை ஜோர்டானிடமிருந்து கைப்பற்றிய இஸ்ரேலியப் படைகள், அதை ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்தன.
1970-கள் மற்றும் 1980-களில் இஸ்ரேல் அங்கு குடியிருப்புகளை நிறுவியது. இது அரேபிய மக்களின் கோபத்தையும், சர்வதேசச் சமூகத்தின் எதிர்ப்பையும் தூண்டியது.
1987 முதல் 1993-ஆம் ஆண்டு வரையிலும், அதே போன்று 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையிலும் மேற்குக் கரையில் பாலத்தீனர்கள் போராட்டங்களை நடத்தினர்.
1988-ஆம் ஆண்டில் மேற்கு கரை மீது தான் கோரி வந்த உரிமையை ஜோர்டான் கைவிட்டது. 1993-ஆம் ஆண்டில் ஆஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பாலத்தீனம் மேற்குக் கரையின் ஒரு பகுதியை நிர்வகித்து வந்தது, மற்ற பகுதிகள் இஸ்ரேலின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ளன.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம், இரு தரப்பும் மேற்குக் கரையின் மீதான தங்களின் உரிமையை கோருகின்றனர். பல ஆண்டுகளாக அவ்வபோது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேல் எங்கு தாக்குதல் நடத்தியது?
மேற்குக் கரையின் ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதியில், ஜெனின், துல்காம், நப்லுஸ், துபஸ் ஆகிய நான்கு பாலத்தீன நகரங்களையும் அருகில் உள்ள அகதிகள் முகாம்களையும் இஸ்ரேலியப் படைகள் ஒரே நேரத்தில் தாக்கியுள்ளன.
ஜெனின் நகரத்துக்குச் செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டிருப்பதாகப் பாலத்தீன ஊடகங்கள் கூறுகின்றன. நகரில் உள்ள அகதிகள் முகாமில் ஆயுதமேந்திய மோதல்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பெரும் படைகள்’ நகரில் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஜெனின் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் அதிகாலை நுழைந்தன என்றும், துல்காம் நகரில் இரண்டு மருத்துவமனைகளுக்கான வழிகளை தடுத்துள்ளதாகப் பாலத்தீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நப்லுஸ் நகரில் இரண்டு அகதிகள் முகாம்களைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
துபஸ் நகருக்கு அருகில் உள்ள ஃபர்ரா முகாமில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மூலம் மக்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலியப் படைகள் ரெட் க்ரெசண்ட் (Red crescent) மருத்துவ நிலையத்துக்குள் நுழைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஆயுதமேந்திய தீவிரவாதிகள்’ ஆகிய ஒன்பது பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
துல்காமில் உள்ள நுர் ஷாம்ஸ் முகாமை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வசிப்பர் ஒருவர் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதாகக் கூறினார்.
அங்கு வசிக்கும் மற்றொரு நபர், முகாமிலிருந்து வெளியே செல்பவர்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்ப்பதற்காக, வெளியேறும் சாலைகளை இஸ்ரேலிய படைகள் தடுத்துள்ளதாகக் கூறினார்.
இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் "இரானிய-இஸ்லாமியத் தீவிரவாதக் கட்டமைப்புகளைத் தகர்ப்பதற்காக ஜெனின் மற்றும் துல்காமில் உள்ள அகதிகள் முகாம்களில் நேற்று இரவு முதல் முழு பலத்துடன் செயல்பட்டு வருகின்றனர்," என்று கூறினார்.
இஸ்ரேல் ராணுவச் செய்தித் தொடர்பாளர் கர்னல் நதவ் ஷொஷானி ஜெனின் மற்றும் துல்காமில் உள்ள படைகள் "உளவுத்துறை வழிகாட்டுதல் படி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை" மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மேற்குக் கரையில் கிட்டத்தட்ட தினமும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனத்தின் எதிர்வினை என்ன?
மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனச் சுகாதார அமைச்சகம், ஜெனின், துல்காம், துபஸ் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாக்க சர்வதேசச் சமூகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சர்வதேசச் சமூகம் மற்றும் செஞ்சிலுவை சங்கம்’ உதவ வேண்டும் என்று கேட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஆம்புலன்ஸ் வாகனங்களை வழி மறிக்கிறது என்று அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இது மனிதநேயச் சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இபின் சினா மருத்துவமனைக்குச் செல்லும் வழியை இஸ்ரேல் ராணுவம் தடுத்துள்ளதாகக் கூறும் பாலத்தீனச் சுகாதார அமைச்சகம், கலீல் சுலைமான் மருத்துவமனை, ரெட் க்ரெசண்ட் (Red crescent) மற்றும் பாலத்தீன சமூகங்களின் நண்பர்கள் அமைப்பின் தலைமையகத்தையும் இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறுகிறது.
பாலத்தீன அதிகாரத்தின் (Palestinian Authority) தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மேற்குக் கரையின் நடவடிக்கைகளைல் கண்காணிக்க வேண்டும் என்பதால், சௌதி அரேபியா செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்து விட்டதாகப் பாலத்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேசச் சமூகம் என்ன கூறுகிறது?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்தும் ‘அதிகரிக்கும் ராணுவ எதிர்வினைகளை’ ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டித்துள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேல் படையின் சமீபத்தியத் தாக்குதல்கள் சர்வதேசச் சட்டத்தை மீறும் வகையிலும் ஏற்கெனவே வெடிக்கும் நிலையில் இருக்கும் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன என்றும் ஐ.நா., மனித உரிமை அலுவலகம் கூறியுள்ளது.
"இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் ஆயுதமேந்திய பாலத்தீனர்களுக்கு இடையில் நடைபெறும் வன்முறை, சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் படி நடக்கும் ஆயுமேந்திய தாக்குதல் ஆகாது," என்றும் கூறியுள்ளது. மேலும், "மேற்குக் கரையில் படைகளை உபயோகிப்பது மனித உரிமைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்," என்றும் சுட்டிக்காட்டியது.
அக்டோபர் 7-ஆம் தேதி முதல் மேற்கு கரையில் 26 குழந்தைகள் உட்பட 128 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கடந்த வாரம் கூறியது.
மேற்கு கரையில் கிழக்கு ஜெருசலேம் உட்பட மொத்தம் 607 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் அதில் 11 பேர் இஸ்ரேல் குடியிருப்பாளர்களால் கொல்லப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.
மேற்கு கரையில் அகதிகள் முகாம்களில் நிலைமை எவ்வாறு உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
மேற்குக் கரையில் பல அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில் பல ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இன்று இஸ்ரேலாக இருக்கும் பகுதியிலிருந்த தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டவர்கள்.
இந்த முகாம்களில், குறிப்பாக அங்குள்ள இளைஞர்களிடம், வறுமையும் வேலையின்மையும், அதிகமாக உள்ளன.
இந்த முகாம்கள், குறிப்பாக ஜெனின் முகாம், பல புதிய பாலத்தீனத் தீவிரவாதக் குழுக்களுக்கான இடமாக மாறியுள்ளது என்று பிபிசி-யின் செய்தியாளர் பால் ஆடம்ஸ் கூறுகிறார். அவர்களைக் குறிவைத்தே சமீபத்தியத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்கிறார்.
இரான் மேற்குக் கரையில் புதிய ஆயுதமேந்தியக் குழுக்களை உருவாக்க உதவி வருவதாக இஸ்ரேல் கருதுகிறது என்றும், நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி இஸ்ரேலை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்டுப்படுத்தி வைக்க இரான் முயல்கிறது என்றும் இஸ்ரேல் கருதுவதாக அவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








