லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலுக்கு ஹெஸ்பொலா பதிலடி

காணொளிக் குறிப்பு, லெபனானில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலுக்கு ஹெஸ்பொலா பதிலடி
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலுக்கு ஹெஸ்பொலா பதிலடி

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகள் மீது தங்களின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று காலை தங்களது 100 ஃபைட்டர் ஜெட்டுகள் ஆயிரக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தற்காப்பு தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது. இதற்கு பதில் தாக்குதலாக வடக்கு இஸ்ரேலில் ஹெஸ்போலா ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது

இஸ்ரேலின் வடக்கு பகுதியை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவியதாக ஹெஸ்பொலா தெரிவித்தது. தங்களின் மூத்த கமாண்டர் கொல்லப்பட்டதற்கான பதிலடியின் முதல் கட்டம் இது என ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹெஸ்போலாவுக்கு இடையே மோதலை தீவிரப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கில் மேலும் ஒரு போருக்கு வித்திடுமோ என்றும் அஞ்சப்படுகிறது

காசாவில் அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் லெபனான் எல்லையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்போலா என இருதரப்பும் தாக்குதல்களை தொடுத்து வந்தன,

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா, காஸாவில் போராடும் ஹமாஸிற்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்துவதாக தெரிவித்தது. ஹமாஸ், ஹெஸ்போலா ஆகிய இரு அமைப்புகளுமே பயங்கரவாத குழுக்களாக இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் சில நாடுகளால் வரையறுக்கப்பட்டுள்ளன

ஞாயிறன்று இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தி அறிக்கையில், ஹெஸ்போலா பெரிய அளவிலான வான் தாக்குதலை நடத்த விரிவான தயாரிப்பில் இருந்ததாகவும் எனவே முன்னெச்சரிக்கையாக தற்காப்பு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு இஸ்ரேலிய படைகள் நாட்டை காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றார். எங்கள் நாட்டை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பி தாக்குவோம் என்று அவர் தெரிவித்தார்

மறுபுறம் இஸ்ரேல் தனது குடிமக்களையும் பிராந்தியத்தையும் காக்க விரும்புகிறதே தவிர மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போரை விரும்பவில்லை என இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்தார்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது 320 காட்யூஷா ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஹெஸ்போலா தெரிவித்துள்ளது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் மூத்த ராணுவ கமாண்டர் ஃபாவூத் ஷூக்கர் கொல்லப்பட்டதற்கான பதிலடியின் ஆரம்பக் கட்டம் இது எனவும் ஹெஸ்போலா தெரிவித்தது.

கோலன் குன்றுகள் பகுதியில் ராக்கெட் தாக்குதல் மூலம் 12 குழந்தைகளை ஷூக்கர் கொன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.

ஷூக்கர் கொல்லப்பட்டதற்கு அதற்கு அடுத்த நாள் இரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனிய கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.

அப்போதிலிருந்து அந்த பிராந்தியத்தில் இரான் மற்றும் ஹெஸ்போலாவிடமிருந்து இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய தாக்குதல் ஹெஸ்போலாவின் முதல் முக்கிய பதிலடியாக பார்க்கப்படுகிறது

காசா மற்றும் லெபனானுடனான தனது வடக்கு எல்லை என இரு பக்கங்களிலும் போர் புரிய தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஹமாஸைக் காட்டிலும் ஹெஸ்போலா வலுவான அமைப்பாக உள்ளது

ஹெஸ்போலாவிடம சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ராக்கெட்டுக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சில இஸ்ரேலை தாண்டிச் சென்று தாக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஹெஸ்போல அமைப்பினர் ஹமாஸ் குழுவினரை காட்டிலும் நன்கு பயிற்சி பெற்றவர்கள்

இது போரின் தொடக்கமா?

இருதரப்பும் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை ஏனென்றால் அது இரான் மற்றும் அமெரிக்காவை உள்ளிழுக்கும் ஆபத்தை கொண்டுள்ளது என்கிறார் பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர்

ஆனால் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்போலா இருதரப்பும் போதுமான தாக்குதலை நடத்திவிட்டதாக நம்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை என்கிறார் அவர்

ஹெஸ்போலாவின் எல்லை கடந்த தாக்குதல் இஸ்ரேலை கோபமடைய செய்கிறது. இதனால் இதுவரை 60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேசமயம் லெபனானின் கிழக்கு பகுதியில், இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹெஸ்போலாவை தாக்குதல் நடத்த தூண்டுவதாக உள்ளது என்கிறார். பிராங்க் கார்டனர்.

எனவேதான் ராஜிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவர கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அதுவே போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்து பதற்றத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது என்பது அவரது கூற்று.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹெஸ்பொலா ஏவிய ட்ரோன்களை இஸ்ரேலிய போர் விமானம் இடைமறித்த காட்சி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)