காணொளி: இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் - என்ன நடக்கிறது?
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இரானும் இஸ்ரேலை நோக்கி பதில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மறுபுறம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உட்பட அனைத்து படைகளும் ஆயுதத்தை கைவிட வேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். என்ன நடக்கிறது?
இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின் இரானிய தலைநகரின் Republic area பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் கிடைத்ததாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. தாக்குதல் செய்தியை இரான் அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே, இந்த தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து ஈடுபட்டதாக அமெரிக்க ஊடக செய்திகள் கூறின. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் அதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக 8 நிமிட காணொளியை தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.
சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரானில் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை தொடங்கியது. இரானிடம் இருந்து வரும் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றி அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.
இந்த தாக்குதலை அடுத்து இரான் மற்றும் இஸ்ரேலின் வான்பரப்பு மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூற்றுப்படி, இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில், இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகனைகளை ஏவியதாக இஸ்ரேல் கூறி உள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட பதிவில், இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியதை ஐடிஎஃப் கண்டறிந்துள்ளது. அச்சுறுத்தலை தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.
சற்று நேரம் கழித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட பதிவில், கூடுதலாக மேலும் பல ஏவுகனைகளை இரான் ஏவியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இரான் அரசை கொலைகார பயங்கரவாத ஆட்சி என விமர்சித்துள்ள நெதன்யாகு, மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்திச் செயல்பட இரானை அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இரானிய அரசு செய்தி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரானிய அரசுடன் தொடர்புடைய பல செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக ஹம்ஷாஹ்ரி டெய்லி ஊடகத்தின் டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உரையில், இரான் மக்களே உங்கள் சுதந்திரம் நெருங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் குண்டுகள் விழும். நாங்கள் முடிந்ததும், உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றிக்கொள்ளுங்கள் என கூறி உள்ளதால் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதற்றம் மத்திய கிழக்கை சூழந்துள்ளது.
இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இரானியர்கள் ஒருபோதும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கத்திற்கு சரணடைந்ததில்லை என்பதற்கு வரலாறு சாட்சி. இந்த முறையும், இரானின் பதில் தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என கூறி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கடற்படைத்தளம் அமைந்துள்ள பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் ஏற்பட்டதாக பஹ்ரைன் அரசு செய்தி தெரிவித்துள்ளது.
முன்னதாக பஹ்ரைனில் உள்ள AFP முகமை செய்தியாளர்கள் தலைநகர் மனாமாவில் வெடிப்பு சத்தங்களைக் கேட்டதாக கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



