ரஷ்யா - யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? புகைப்படங்கள் உணர்த்தும் உண்மைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரோவ்ஸ்க் நகரை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அந்நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாயும், அவரது 2 வயது மகனும். எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறார் அந்த தாய். (ஆக.27)
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நீடிக்கிறது. கிழக்கு யுக்ரேனில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.
ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், யுக்ரேன் இழந்த பகுதிகளை மீட்க உதவியும் புரிகின்றன. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் அடங்கும்.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரஷ்யாவுக்குள் யுக்ரேன் துருப்புகள் நுழைந்த பிறகு இந்த போர் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் ச.கி.மீ.ககும் அதிகமான நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக யுக்ரேன் கூறுகிறது. இதன் பிறகு யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்களும், டிரோன்களும் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பின்னணியில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் என்ன நடக்கிறது? என்பதை இந்த புகைப்படத் தொகுப்பு விவரிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் படையினரின் ஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திய காட்சி. (ஆக.8ம் தேதி, ரஷ்ய பாதுகாப்பு படை வெளியிட்ட புகைப்படம்)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் கிராமாடோர்ஸ்க் நகரில் சஃபயர் ஹோட்டல் அருகே ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் ஏவுகணை தாக்கியதால் இடிந்து விழுந்த கட்டடத்தில் அவசர கால மீட்புக் குழுவினர். (ஆக.25)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனின் ஜபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். (ஆக.27)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு தேடி மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் (ஆக.27)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யாவுக்குள் யுக்ரேன் படைகள் புகுந்துவிட்ட பிறகு, எல்லையோர சமி பிராந்தியத்தில் சோவியத் தயாரிப்பான டி-72 டாங்குகளுடன் யுக்ரேன் துருப்புகள். (ஆக.12)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு தலைவலி தரும் யுக்ரேனிய டிரோன்களை இயக்கத் தயாராகும் அந்நாட்டின் 22-வது படைப் பிரிவினர். இந்த புகைப்படம் யுக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது. (ஆக.09)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றிய சுட்ஸா நகரில் சேதடைந்த லெனின் சிலைக்கு முன்னே யுக்ரேன் ராணுவ வீரர். (ஆக.16)
பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
படக்குறிப்பு, யுக்ரேன் துருப்புகளின் திடீர் எல்லை தாண்டிய தாக்குதலால் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வசித்த அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த காட்சி.
பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE
படக்குறிப்பு, கர்ஸ்க் பிராந்தியத்திற்குள் புகுந்த யுக்ரேன் படையினருக்கு எதிராக போரிட ரஷ்யா அனுப்பிய கூடுதல் துருப்புகள் அணிவகுத்துச் செல்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானங்களை அதன் நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு பெற்றுக் கொண்ட எஃப்-16 விமானங்களின் முன்பாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்த விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று யுக்ரேன் எதிர்பார்க்கிறது.