ஜெய் ஷா: 35 வயதில் உலக கிரிக்கெட்டின் சக்தி வாய்ந்த நபராக வளர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆனந்த் வாசு
- பதவி, கிரிக்கெட் ஆய்வாளர், பிபிசி ஹிந்திக்காக
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அதாவது ஐசிசி-யின் புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார். 35 வயதிலேயே இந்தப் பதவியை எட்டிய இளம் கிரிக்கெட் நிர்வாகி இவர்தான்.
இதில் மற்றுமோர் சுவாரஸ்யமான விஷயம் உண்டு. 57 வயதுக்கு உட்பட்ட ஒருவர் ஐசிசி-யின் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.
ஐசிசி-யின் முதல் தலைவர் கொலின் கோட்ரே 1989இல் பதவிக்கு வந்தபோது அவரது வயது 57. அவருக்குப் பிறகு 11 பேர் ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
என்.சீனிவாசன் 2014இல் ஐசிசி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, அதுவரை பிரெசிடென்ட் (President) என்று அழைக்கப்பட்ட இந்தப் பதவி, சேர்மன் (Chairman) என்று அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று பேர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டனர். தற்போது நான்காவது ஐசிசி சேர்மனாக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி தலைவர் என்ற நிலையை அடையும் ஐந்தாவது இந்தியர் ஜெய் ஷா. இவருக்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி சேர்மனாக இருந்துள்ளனர்.
ஜெய் ஷா இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் தனது புதிய பொறுப்பில் பதவியேற்கிறார்.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா அறிவிக்கப்பட்டதை அடுத்து சமூக ஊடகங்களில் பல மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
அவற்றில், கிரிக்கெட் நிர்வாகத்தில் அவர் இந்த உயரத்தை எட்டுவதில், அவரது தந்தையும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு பங்கு இருப்பதாக இணைத்துப் பேசப்படுகிறது.
உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம்

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஜெய் ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு வருவதற்கு உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கும் ஆதிக்கம்தான் காரணம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதாவது பிசிசிஐ-இன் செயலாளராக இருப்பவர் ஜெய் ஷா. பிசிசிஐ தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட்டில் பார்த்து அஞ்சத்தக்க அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
பிசிசிஐ மிகப்பெரிய பார்வையாளர் வட்டத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியும் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.
இத்தனைக்கும் மத்தியில் ஐபிஎல் போன்ற வெற்றிகரமான போட்டிகளும் நடக்கின்றன. உலகில் வேறு எங்குமே இவ்வளவு பிரமாண்டமாக, அதிக பணம் புரளும் லீக் போட்டி நடப்பதில்லை.
ஒரு கிரிக்கெட் நிர்வாகியாக ஜெய் ஷாவின் தொழில்முறை வாழ்க்கையும் சிறப்பாக உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தின்கீழ் மாவட்ட கிரிக்கெட் நிர்வாகியாகத் தொடங்கினார்.
ஜெய் ஷா, கடந்த 2013இல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக ஆனார். அதன்பிறகு அவர் பின்வாங்கவே இல்லை.
அவர் 2019இல் பிசிசிஐ செயலாளராகச் சேர்ந்தபோது, அவருக்கு அதிக அனுபவம் இருக்கவில்லை. ஆனால், இப்போது வரை அவர் பணியாற்றும் பாணி மற்றவர்களுடன் கலந்தாலோசித்துச் செயல்படும் வகையில் இருக்கிறது.
அவர் ஐசிசி அல்லது பிசிசிஐ தொடர்பான கடினமான பிரச்னைகளை எதிர்கொண்ட தருணங்களில் எல்லாம், முன்னாள் கிரிக்கெட் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அவருக்கு எதிர்த்தரப்பாகக் கருதப்படும் என்.சீனிவாசனிடம் கூட அவர் ஆலோசனை பெற்றார். கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில், அவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேலை அதிகளவில் நம்புகிறார்.
ஜெய் ஷா எத்தனை சவால்களை எதிர்கொள்கிறார்?

பட மூலாதாரம், Getty Images
இப்போது இதைச் சொல்வது வினோதமாகத் தோன்றலாம். ஆனால், ஐசிசி-யின் தலைமைப் பதவிக்கு வருவது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலையை எட்டுவதைக் குறிக்கும்.
ஐசிசி தலைவராகத் தனது மூன்றாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு, அவர் இரண்டாவது முறையாகப் போட்டியிடலாம் அல்லது மீண்டும் பிசிசிஐ தலைமைப் பதவிக்குத் திரும்பலாம்.
இருப்பினும், ஐசிசி தலைவராக ஜெய் ஷா பல சவால்களை எதிர்கொள்கிறார். உலகின் மற்ற நாடுகளில் கிரிக்கெட்டை வேகமாகப் பரப்ப ஐசிசி விரும்புகிறது. இதற்காக ஐசிசி ஆக்ரோஷமான ஒரு வியூகத்தை வகுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த உலக டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கு அதிகம் செலவிடப்பட்டது. ஆனால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதுதவிர, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் விஷயமும் அந்த ஆக்ரோஷமான வியூகத்தில் அடக்கம்.
கிரிக்கெட் விளையாட்டு, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவது உறுதி. ஆனால், அதற்கு முன்னதாக ஜெய் ஷாவின் பதவிக்காலம் முடிவடையும்.
இருப்பினும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது குறித்து அவரது தலைமையில் இறுதி செய்யப்பட வேண்டும்.
ஒலிம்பிக்கில் எந்த வகையான கிரிக்கெட் சேர்க்கப்படும், அணிகளைத் தேர்வு செய்யும் முறை என்ன, எத்தனை அணிகள் பங்கேற்கும் என்பன போன்ற விஷயங்களை ஜெய் ஷா தெளிவுபடுத்தியாக வேண்டும்.
ஐசிசி போட்டிகளில் அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் டிவியின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான பிரச்னையும் ஜெய் ஷா முன்பாக உள்ளது.
ஸ்டார் டிவி ஏற்கெனவே ஐசிசி-யிடம் சுமார் 100 மில்லியன் டாலர் (ரூ.830 கோடி) சலுகை கோரியுள்ளது. கிரிக்கெட் நிகழ்வுகளை ஒளிபரப்புவதால் அதிக வருவாய் ஈட்டவில்லை என்று ஸ்டார் டிவி கூறுகிறது.
புதிய யோசனைகள், புதிய சோதனை முயற்சிகள்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகத் தாம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பரப்ப ஐசிசி உறுப்பு நாடுகளுடனும் அணிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.
“கிரிக்கெட்டின் பல வடிவங்களை நிலைநிறுத்துவதற்கும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும், புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் முக்கிய நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிய வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம்,” என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
கிரிக்கெட்டை முன்னெப்போதையும்விட அதிகமாக அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பிரபலமாக்குவதே தனது நோக்கம் என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
அதே அறிக்கையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் விவகாரம் குறித்துப் பேசியுள்ள அவர், “இதுவரை கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்களின்படி செயல்படுவது மட்டுமின்றி, உலகம் முழுவதும் கிரிக்கெட் மீதான அன்பை அதிகரிக்கப் புதிய யோசனைகள் மற்றும் புதிய சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று கூறினார்.
மேலும், “2028இல் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.”
“அது இந்த விளையாட்டை நாம் எதிர்பார்க்காத வகையில் முன்னெடுத்துச் செல்லும் என்று தான் நம்புவதாக” ஜெய் ஷா கூறினார்.
தற்போதைய ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே, ஐசிசி அதன் தற்போது இருக்கும் நிலையில், அது தனது உண்மையான ‘நோக்கத்திற்கு ஏற்றதாக’ இருக்காது என்று சமீபத்தில் எச்சரித்தார்.
அவர் இப்படி ஒப்புக்கொண்டது, மிகவும் தீவிரமான விஷயம். இந்தச் சிக்கலைத் தீர்க்க ஜெய் ஷா என்ன செய்கிறார் என்பதையும் அனைவரும் உற்று நோக்குவார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












