ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு- இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருமென முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் நம்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் சாம்பியன்ஸ் டிராபி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்த விவாதத்தின் மையமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. அட்டவணைப்படி 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை, பாகிஸ்தான் அணியும் ஐசிசி போட்டிகளைத் தவிர வேறு எந்த தொடரிலும் விளையாட இந்தியாவுக்கு வரவில்லை.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்த இருந்த போது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று கூறி, ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ பிடிவாதம் பிடித்ததால் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.
ஹைபிரிட் மாடலின் கீழ், சில போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன. இந்திய அணி கலந்துகொண்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன. இதன் மூலம், ஆசிய கோப்பையை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தது, ஆனால் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஜெய் ஷா குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?
ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவியை வகிக்கும் ஐந்தாவது இந்தியர் ஆவார். இவருக்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரஷீத் லத்தீஃப், ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் டாக்டர். நௌமன் நியாஸின் யூடியூப் சேனலில் பேசிய ரஷீத் லத்தீஃப், "ஜெய் ஷா இப்போதுதான் வந்துள்ளார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை எதிர்க்கவில்லை என்றுதான் அர்த்தம்."
"இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் வந்தால் அதில் ஜெய் ஷாவுக்கு பெரிய பங்கு இருக்கும்." என்று கூறினார்.
"கிரிக்கெட்டின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். என் கருத்து தவறாகவும் இருக்கலாம். பிசிசிஐ என்றாலும் சரி அல்லது உலக கிரிக்கெட் என்றாலும் சரி, கிரிக்கெட் துறைக்கு ஏற்ற நபர்தான் என்பதை ஜெய் ஷா நிரூபித்துள்ளார்." என்கிறார் ரஷீத் லத்தீஃப்.
ஜெய் ஷா ஐசிசி தலைவரானதன் மூலம், 'சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வருவதற்கு ஒருவகையில் பாதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது' என்று ரஷித் லத்தீஃப் கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாகவே உள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி விஷயத்தில், இந்திய அரசு என்ன கேட்டாலும் செய்வோம். இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே எங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்." என்றார்.
மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, தனது யூடியூப் சேனலில், “ஜெய் ஷா பிசிசிஐயில் இருந்தபோது, அந்த வாரியத்தை மட்டுமே கவனித்து வந்ததார். இப்போது மற்ற நாட்டு வாரியங்களையும் அவர் அனுசரித்து செல்ல வேண்டியது இருக்கும்” என்று கூறினார்.
"ஜெய் ஷாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் பிசிசிஐ அமைப்பை வெற்றிகரமாக நடத்தியது போலவே, ஐசிசியிலும் செய்ய முடியுமா? அவரது முதல் சவாலே சாம்பியன்ஸ் டிராபி தான்." என்று பாசித் அலி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது (சாம்பியன்ஸ் டிராபி) பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. பிசிசிஐ செயலாளர் என்ற முறையில் ‘பாகிஸ்தானுக்கு செல்ல எங்கள் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை’ என்று முன்னர் அவர் கூறலாம். ஆனால் இப்போது நிலைமை வேறு.”
“அவரது தந்தையும் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர். மொத்த போர்டுமே ஜெய் ஷாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், இப்போது அவர் இரு தரப்பையும் கருத்தில் கொள்வார்.” என்று கூறினார்.
பாகிஸ்தானை சேர்ந்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் ஷகீல் கான் கட்டாக், "ஐசிசியின் பொறுப்பையும் ஜெய் ஷா பெற்றுள்ளார். இப்போது நாம் (பாகிஸ்தான் அணி) என்ன செய்ய வேண்டும்? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல வேண்டுமா அல்லது பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த தயாராக வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எக்ஸ் தள பக்கத்தில், "வாழ்த்துகள் ஜெய் ஷா பாய்! உங்கள் சிறந்த தலைமையின் கீழ் உலக கிரிக்கெட் வேகமாக முன்னேறும் என்பதை நான் அறிவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எக்ஸ் தள பக்கத்தில், "இளைய ஐசிசி தலைவருக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். நீங்கள் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பேட்ஸ்மேன் ஷுப்மான் கில், "ஐசிசியின் தலைவரானதற்கு வாழ்த்துகள்" என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "ஜெய் ஷா தனது 35 வயதில் போட்டியின்றி ஐசிசி தலைவராக ஆனதற்கு வாழ்த்துகள். கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஜெய் ஷா தொடர்ந்து பணியாற்றுவார் என்று கிரிக்கெட் சமூகம் உறுதியாக நம்பலாம்." என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
35 வயதான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இளம் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜெய் ஷா இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி தலைவராக, ஜெய் ஷாவின் பதவிக்காலம் டிசம்பர் 1, 2024 முதல் தொடங்கும்.
ஐசிசியின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லேயின் பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவர் பதவியை வகித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ஐசிசி தலைவர் தேர்தலில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.
ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பரப்புவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஜெய் ஷா அக்டோபர் 2019இல் பிசிசிஐயின் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் மீண்டும் 2022இல் பிசிசிஐ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெய் ஷாவின் பிசிசிஐ பதவிக்காலம் 2025 வரை உள்ளது. ஆனால் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றவுடன், பிசிசிஐ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












